(மாற்கு நற்செய்தி 9:35)
கீழ்த் திசை ஞானிகள் ஏரோது மன்னனிடம் கேட்டார்கள்,
"யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?"
மன்னன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் விசாரித்தான்.
இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர்
பெத்லகேமில் பிறப்பார் என்று பதில் வந்தது.
யூதர்களின் அரசர் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்.
மாட்டுத் தொழுவம் சிறியது,
அதில் பிறந்த அரசர் பெரியவர்.
சிறியது = பெரியது.
* . *. *. *
"பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்."
பணிந்து நடந்தவர் யார்?
சர்வ வல்லப கடவுள். மனிதர்களை ஆளும் கடவுள்.
யாருக்குப் பணிந்து நடந்தார்?
அன்னை மரியாளுக்கும், சூசையப்பருக்கும்,
அதாவது
மனிதர்களுக்கு.
கடவுள் மனிதர்களுக்குப் பணிந்து நடந்தார்.
பணிதல் = ஆள்தல்.
* . *. *. *
"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" . இயேசு.
முதல்வர் = கடைசியானவர்.
*. *. *. *
மாட்டுத் தொழுவத்தில் பிறந்த அரசரின் சிம்மாசனம் சிலுவை.
மாட்டுத் தொழுவத்தில் சாணி நாற்றத்தின் மத்தியில் பிறந்து, மாடுகளின் தீவனத் தொட்டியில் வைக்கோல் மீது படுத்திருந்த அரசர்,
33 ஆண்டுகள் கழித்து,
அவரது இன மக்களால் அடிக்கப்பட்டு,
மிதிக்கப்பட்டு,
துப்பப்பட்டு
நிர்வாணமாக்கப்பட்டு,
மரத்தால் செய்யப்பட்ட சிலுவையில்
மூன்று ஆணிகளால் அறையப்பட்டு
இரண்டு கள்வர்களுக்கு மத்தியில்
நமது ஆன்மீக அரசராகத் தொங்கிக் கொண்டிருந்தார்.
தனது நற்செய்தியை சொல்லின் மூலமாக மட்டுமல்ல வாழ்ந்து காட்டி போதித்தவர் நம் அரசர்.
அரசர் எவ்வழி, மக்கள் அவ்வழி.
துன்பங்கள் நிறைந்த சிலுவை அவரது சிம்மாசனம் என்றால்,
அதே சிலுவை தான் நமது வாழ்க்கை.
சிலுவையில் மரித்த கிறிஸ்துவை சிலுவையில் வாழாதவன் கிறிஸ்தவன் அல்ல.
சிலுவையில் மரித்தவர் தான் மூன்றாம் நாள் உயிர்த்தார்.
சிலுவை மரணம் --> உயிர்ப்பு.
இயேசுவைப் போல் நாம் உயிர்க்க வேண்டுமா?
அவரைப் போல் சிலுவையைச் சுமந்து, அதில் மரிக்க வேண்டும்.
சிலுவையில் மரிப்பதற்காகத்தான் இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.
சிலுவையில் மரிப்பதற்காகத்தான் நாமும் நமது வீட்டில் பிறந்திருக்கிறோம்.
இயேசுவைப்போல் மரித்தால் தான் நாமும் அவரைப் போல் உயிர்ப்போம்.
நமக்காக மரித்து நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்டார்.
நாம் மரணம் அடைந்த பின்பு தான் நமது மீட்பின் பயனாகிய விண்ணக பேரின்ப வாழ்வை அடைவோம்.
*. *. *. *
இயேசு நமது அரசர்.
நாம் அவரது மக்கள்.
இறையரசின் குடிமக்கள்.
அரசர் எவ்வழி, அவ்வழியில் நடக்க வேண்டியவர்கள் நாம்.
நாம் எப்படி நடக்கிறோம்?
நமது வாழ்க்கையை பற்றி சிறிது தியானிப்போம்.
நம்மை நமது பெற்றோர் எப்படி வளர்த்தார்கள்?
சிறு வயது முதல் எவ்வித குறைவுமின்றி உண்ண உணவும், உடுத்த உடையும் வேண்டியதற்கு அதிகமாகவே தந்ததோடு,
சிறு கஷ்டம் கூட கொடுக்காமல் செல்லமாக வளர்த்தார்கள்.
பசித்து கூட அழ விடவில்லை.
கையில் இருந்ததோடு, வட்டிக்குக் கடன் வாங்கிப் படிக்க வைத்தார்கள்.
எதற்காக?
நன்கு படித்து, நல்ல வேலையில் அமர்ந்து, நிறைய சம்பாதித்து செழிப்பாக வாழ்வதற்காக.
நாம் நல்லவர்களாக வாழ்வதைவிட வல்லவர்களாக வாழ்வதையே விரும்பினார்கள்.
Savings என்ற பெயரில் வருங்கால வாழ்க்கைக்காக நமது வேலை மூலமாக ஈட்டிய பணத்தை சேமித்து வைக்கப் பழக்கினார்கள்.
இறைவனைப் பற்றியும்,
நல்லொழுக்கத்தைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தார்கள், உண்மைதான்.
ஆனால் அதில் அதிகம் பயிற்சி கொடுக்கவில்லை.
பாவமற்ற வாழ்வே வாழ்வு என்று சொல்லிக் கொடுத்ததை விட
அதிகமாக நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொடுத்தார்கள்.
விளைவு?
இறையன்பும் பிறரன்பும் இருந்தாலும்
அதை விட சுய அன்புக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஏழையாய் அல்ல, செல்வந்தராய் வாழவே விரும்புகிறோம்.
"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது."
(மத்தேயு நற்செய்தி 5:3) என்று இயேசு போதித்தார்.
நம்மிடம் செல்வம் இருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்.
ஆனால் நமது உள்ளத்தில் செல்வத்தின் மீது பற்று இருத்தல் கூடாது.
இதை நமக்குக் செயல் மூலம் போதிக்கவே அகில உலகத்திற்கும் சொந்தக்காரரான இறைமகன் ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஒரு ஏழை பெண்ணின் மகனாகப் பிறந்தார்.
மாதாவும் சூசையப்பரும் பெத்லகேம் நகர மக்களின் இல்லங்களில் தங்க இடம் கேட்டார்கள்.
இடம் கிடைக்கவில்லை.
சத்திரத்தில் இடம் கேட்டார்கள், கிடைக்கவில்லை.
அதற்காக அவர்கள் கொஞ்சம் கூட வருந்தவில்லை.
ஏனென்றால் அவர்களுக்கு எதன் மீதும் பற்று இல்லை.
மாட்டுத் தொழுவத்தில் மகிழ்ச்சியோடு தங்கினார்கள்.
இறைமகன் மனு மகனாகப் பிறந்தார்.
நமக்கு நம்மிடம் உள்ள செல்வத்தின் மீது பற்று இருக்கிறதா?
நமது கையில் இருந்த ஒரு பழைய பேப்பர் தொலைந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம்.
அதற்காக வருந்தி அழுவோமா?
மாட்டோம். ஏனெனில் பழைய பேப்பர் மீது நமக்கு எந்தவித பற்றும் இல்லை.
ஆனால் கையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் தொலைந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.
அதற்காக வருந்துவோமா?
வருந்தினால் அதன் மீது பற்று இருக்கிறது.
அதைப்பற்றி கவலைப்படாவிட்டால் பற்று இல்லை.
பணம் நம்மிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது மனநிலை பற்றற்றதாகவே இருக்க வேண்டும்.
நம்மிடம் உள்ள பணத்தின் மீது நமக்கு பற்று இருந்தால் அதை நமக்காக மட்டும் பயன்படுத்துவோம்,
திரும்பித் தர முடியாத ஏழைகளுக்கு அதை கொடுத்து உதவ மாட்டோம்.
நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவினால் நாம் இயேசு அரசரின் குடிமக்கள்.
கொடுத்து உதவ மனம் வராவிட்டால் உலகத்தின் குடிமக்கள்.
நமக்குத் துன்பங்கள் வரும்போது அவற்றை சிலுவைகளாக ஏற்றுக் கொண்டு துன்பங்களை மகிழ்ச்சியுடன் அனுபவித்தால் நாம் இயேசு அரசரின் குடிமக்கள்.
துன்பங்களிலிருந்து முழுவதுமாக விடுதலை பெற விரும்பினால் நமக்கும் இயேசுவுக்கும் சம்பந்தம் இல்லை.
இவ்வுலக அரசு நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக நம்மை எந்த வகையிலாவது துன்புறுத்தினால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டால் ஆம் இயேசு அரசரின் குடிமக்கள்.
இதுவரை நாம் எப்படியும் வாழ்ந்திருக்கலாம்.
இனியாவது ஏழைகளின் உள்ளத்தோடு,
இறைவனுக்காக நமது வாழ்க்கையின் கஷ்டங்களை சிலுவைகளாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தோடு
இயேசுவின் இறையரசில் வாழ்வோம்.
சிலுவைதான் நமது செல்வம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment