Thursday, February 15, 2024

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை." (லூக்.5:31)

"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை." (லூக்.5:31)


 இயேசுவால் 'என்னைப் பின்பற்றி வா' என்று அழைக்கப்பட்ட லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரியவிருந்து அளித்தார். 

வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார்கள். 


பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், 

"வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டார்கள். 

பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் வரிதண்டுபவர்களைப் பிடிக்காது.

வரிதண்டுபவர்கள் பாவிகள் என்பது அவர்களுடைய எண்ணம்.

லேவி என்ற மத்தேயு இயேசுவையும் அவருடைய சீடர்களையும் விருந்துக்கு அழைத்தார்.

அவர்கள் விருந்துக்கு வந்திருந்தார்கள்.

 பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் ஏன் வந்தார்கள்?

இயேசுவின் நடவடிக்கைகளில் குற்றம் கண்டு பிடிப்பது மட்டுமே அவர்களது வேலை.

அதற்காகத்தான் இயேசு சென்ற இடமெல்லாம் அவர்களும் சென்றார்கள்.

''வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று அவர்கள் சீடர்களிடம் கேட்டார்கள். 

அவர்களும் பாவிகள் தான்.

பொதுவாக மற்றவர்களிடம் குறை காண்பவர்கள் தங்கள் குறைகளைப் பார்க்க மாட்டார்கள்.

அதனால் தான் பாவிகளாகிய அவர்கள் வரிதண்டுபவர்களைப் பாவிகள் என்று அழைத்தார்கள்.

இயேசு அவர்களுடைய கேள்விக்கு மறுமொழியாக,


 "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார். 

பாவிகளோடு உண்பதேன் என்ற கேள்விக்கு இயேசு பதில் சொன்னார்.

இயேசுவைப் பொறுத்த‌ மட்டில் மனிதர்கள் அனைவருமே
 பாவிகள் தான்.

மனிதர்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கவே மனிதனாகப் பிறந்தார்.

வரி தண்டுபவர்கள் மட்டுமல்ல பரிசேயர்களும் மீட்கப்பட வேண்டியவர்களின் வட்டத்துக்குள் வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் அதை உணரவில்லை.

காரணம் அவர்களிடம் இருந்த
 தற்பெருமை. (Pride)

தலையான பாவங்களுள் முதன்மையானது.

லூசிபர் சாத்தானாக மாற காரணமானது.

பாவிகள் பாவத்திலிருந்து மீட்கப்பட வேண்டுமானால் அவர்கள் முதலில் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நோயாளிகள் தங்களிடம் நோய் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொண்டால் தான் மருத்துவரைத் தேடுவார்கள்.

ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது குணமாக முயற்சி எடுக்க மாட்டார்கள், நோயிலேயே சாவார்கள்.

தங்களிடம் நோய் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டவர்களின் நோயை இயேசு குணமாக்கினார்.

தங்களது பாவத்தை ஏற்றுக் கொண்டவர்களை அவர் மன்னித்தார்.


பரிசேயர்களும், மறை‌நூல் அறிஞர்களும் தங்களைப் பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பரிசுத்தராகிய இயேசுவையே பாவி என்று எண்ணும் அளவிற்கு அவர்களது தலைக்கனம் உச்சத்தில் இருந்தது.

இறை மகனாகிய இயேசு தன்னை இறைமகன் என்று வெளிப்படுத்தியதையே அவர்கள் தேவதூசனம் என்று கருதினார்கள்.

அவர்களது தற்பெருமை எண்ணங்கள் தான் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அளவிற்கு இட்டுச் சென்றன.

"நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்ற இயேசுவின் வார்த்தைகள் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன. 

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

நம்மைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

நமக்காகவே திவ்ய நற்கருணைப் பேழையில் இரவும் பகலும் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

நமது பாவங்களிலிருந்து இயேசு விடுதலை கொடுக்கிறார் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்வதால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

இந்த மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது.

இயேசுவால் இப்போது ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சி நமது எதிர்கால விண்ணக வாழ்வின் போது பேரின்பமாகத் தொடரும்.

இயேசுவிடமிருந்து மட்டுமல்ல பரிசேயர்களிடமிருந்தும் நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் இயேசுவைப்போல் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ வேண்டும்.

தற்பெருமை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை பரிசேயர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசு வரி தண்டுபவர்களின் வீட்டில் மட்டுமல்ல பரிசேயர்களின் வீட்டிலும் விருந்து உண்டிருக்கிறார்.

ஒரு பரிசேயரின் வீட்டில் விருந்து உண்ணும் போது தான் பாவியான ஒரு பெண் அவருடைய காலடிகளைத் தன் கண்ணீரால் நனைத்து, தன் கூந்தலால் துடைத்து,

தனது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டாள்.

இயேசு அவளுடைய பாவங்களை மன்னித்தார்.


''ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். " (லூக். 7:47)

ஒரு தாய் சுகமாக இருக்கிற தனது பிள்ளைகளை விட நோயில் வருந்துற பிள்ளைகளைத் தான்

 அதிகமாக தனது அன்பை வெளிப்படுத்திக் கவனிக்கிறாள் என்பது நமது அன்றாட அனுபவம்.

இயேசு வரி தண்டுபவர்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தாரோ அதே அளவுக்கு பரிசேயர் மீதும் அன்பு கொண்டிருந்தார்.

இயேசு சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்கள் பரிசேயர்கள்.

அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது 

தான் சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்களை மன்னிக்கும் படி தனது தந்தையிடம் வேண்டினார்.

வரி தண்டுபவர்களை மட்டுமல்ல அனைத்து பாவிகளையும் மீட்கவே இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.

தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும் அவர் மரித்தார்.

ஏனெனில் அவர்களையும் படைத்தவர் அவரே.

நாம் நாம் பாவிகள், மீட்கப்பட வேண்டியவர்கள்.

நம்மைச் சுற்றி வாழ்பவர்களும் பாவிகள், அவர்களும் மீட்கப்பட வேண்டியவர்கள்.

நம்மை நாம் நேசிப்பது போல அவர்களையும் நேசிக்க வேண்டும்.

நாம் மீட்படைய விரும்புவது போல் அவர்களும் மீட்படைய நாம் விரும்ப வேண்டும்.

கிறிஸ்தவர்களை விரும்பாத ஒரு இனம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்களை எதிர்த்துப் போராட வேண்டுமா?

 அல்லது

 அவர்களுக்காக செபிக்க வேண்டுமா?

இயேசு அவர் சாக வேண்டும் என்று விரும்பியவர்களை எதிர்த்துப் போராடவில்லை,

அவர்களுக்காக செபித்தார்.

 நாம் இயேசுவைப் பின்பற்றுபவர்கள் என்பதை செயலில் காண்பிப்போம்.

நமது எதிரிகளை எதிர்த்து போராடுவதைக் கைவிட்டு விட்டு அவர்களுக்காக செபிப்போம், அவர்களை மன்னிப்போம்.

இந்தியாவில் கிறிஸ்தவம் வளர வேண்டுமா?

வேத சாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவத்தின் வித்து என்பதை நினைவில் கொள்வோம்.

உலக மக்கள் அனைவரும் பாவ நோயுள்ளவர்கள் தான்.

அனைவரையும் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment