Wednesday, February 14, 2024

''நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்றார். (தொடக்கநூல் 3:19)

"நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" என்றார். 
(தொடக்கநூல் 3:19)


கடவுள் தன்னோடு விண்ணகத்தில் வாழ்வதற்காகத்தான் மனிதனைப் படைத்தார்.

அவனது உடலை மண்ணிலிருந்து படைத்தார்.

ஆனால் மனிதன் தான் செய்த பாவத்தினால் விண்ணக வாழ்வுக்குரிய தகுதியை இழந்தான்.

மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உடல் மண்ணுக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

அந்நிலை ஏற்படுவதற்குக் காரணம் அவனுடைய பாவம்.

பாவத்திலிருந்து அவனது ஆன்மாவை மீட்பதற்காக இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

நமது ஆன்மா இறைவனுடைய மூச்சிலிருந்து உண்டானது.

"அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்." (தொடக்கநூல் 2:7)

மனித உடல் மண்ணுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டாலும் 

இறைவனின் உயிர் மூச்சால் படைக்கப்பட்ட ஆன்மாவாவது இறைவனோடு ஒன்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இறை மகன் மனு மகனாகப் பிறந்து, பாடுகள் பட்டு மரித்தார்.

இயேசுவின் பாடுகளை நினைத்து 
வழிபட நம்மை தயாரிக்க வேண்டிய தவக்காலத்தின் ஆரம்பத்தில் 

நமது உடலுக்கு ஏற்பட்ட நிலையை நினைவு கூறுவதற்காகவே சாம்பல் புதனை நேற்று கொண்டாடினோம்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நாம் செய்ய வேண்டிய தவ முயற்சிகளை சாம்பல் குறிக்கிறது.

உயிர்ப்பு விழாவிற்கு முந்திய 40 நாட்கள் மட்டுமல்ல, நமது வாழ்நாளெல்லாம் நமக்குத் தவக்காலம் தான்.

இயேசு உலகுக்கு வந்து பாடுகள் பட்டு மரித்து உயிர்த்தது

நாமும் அவரைப் போலபாடுகள் பட்டு மரித்து 

இறுதி நாளில் உயிர்த்து 

அவரோடு விண்ணக வாழ்வில் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காகத்தான்.

நமது செப, தவ, தர்ம முயற்சிகளால் பயன்பெற போவது நாம் தான், இயேசு அல்ல.

இயேசு சர்வ வல்லப கடவுள்.

நித்திய காலமாக தனது பண்புகளில் பரிபூரணமாக இருப்பவர்.

அவருக்கு நம்முடைய உதவிகள் எதுவும் தேவையில்லை.

அவரால் படைக்கப்பட்ட நமக்கு தான் அவருடைய அருள் உதவி தேவைப்படுகிறது.

அவரோடு நாம் ஐக்கியமாகி நித்திய பேரின்ப வாழ்வு வாழ நமக்கு அவரது உதவி ஒவ்வொரு வினாடியும் தேவைப்படுகிறது.

அதற்காகத்தான் அவரை நோக்கி செபிக்கிறோம்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தவம் செய்கிறோம்.

அவரது கட்டளைப்படி நமது அயலானோடு நம்மிடம் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம்.

எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக செபிக்கிறோமோ, தவம் செய்கிறோமோ, தர்மம் செய்கிரோமோ

அவ்வளவுக்கவ்வளவு நமது நித்திய பேரின்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

நமது நித்திய பேரின்பத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக 

நாம் செபம், தவம், தர்மம் செய்தால் அதில் சுயநலம் அல்லவா இருக்கிறது 

என்று நண்பர் கூறுகிறார்.

ஒரு முக்கியமான மறையுண்மையை நினைவில் வைத்துக் கொண்டு சிந்தித்தால் உண்மை புரியும்.

கடவுள் நம்மை அவரது சாயலில் படைத்தார்.

அவரது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அவற்றில் மிக முக்கியமான பண்பு அன்பு.

கடவுள் அன்பு மயமானவர்.

நித்திய காலமாக வாழும் தந்தைக்கும், அவர் நித்திய காலமாக பெறும் மகனுக்கும் இடையே நித்திய காலமாக நிலவும் அன்பு தான் பரிசுத்த ஆவி.

தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவராக வாழ்வதோடு

 ஒருவரையொருவர் நித்திய காலமாக அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்கள்.

மூவருக்குள்ளும் நிலவுவது ஒரே அன்பு, ஆகவே மூவரும் ஒரே கடவுள்.

கடவுள் தன்னைத் தானே நேசிப்பது போலவே அவரால் படைக்கப்பட்ட நம்மையும் அளவு கடந்த விதமாய் நேசிக்கிறார்.

அவர் நமக்குக் கொடுத்துள்ள இரண்டு கட்டளைகளில் இரண்டாவது கட்டளை,

நீ உன்னை நேசிப்பது போல உன்னுடைய அயலானையும் நேசி.

நம்மை நாம் நேசிக்காவிட்டால் நமது அயலானை எப்படி நேசிக்க முடியும்?

நம்மை நாம் நேசிப்பது நமது பிறரன்புக்கு அடிப்படை.

ஆகவே நம்மை நாமே நேசிப்பதில் சுயநலம் மட்டுமல்ல பிற நலமும் கலந்திருக்கிறது.

சுய அன்பும், பிறரன்பும் சேர்ந்தவர்கள் தான் நாம்.

நாம் இறைவனை நேசித்தால் நம்மையும் நேசிப்போம் பிறனையும் நேசிப்போம்.

தன்னைத் தானே நேசிக்கும் கடவுள் அதே நேசத்தோடு நம்மையும் நேசிக்கிறார்.

பரிபூரண அன்புடன் நித்திய காலம் வாழும் கடவுள் நமக்காக மனிதனாகப் பிறந்தார்.

நாம் அவரோடு நித்தியகாலம் பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகப் பிறந்தார்.

அவரது சாயலில் படைக்கப்பட்ட நாம் அவருக்காக வாழ வேண்டும்.

அவருக்காக வாழும்போது நமக்காகவும் வாழ்கிறோம்.

எப்படி சுய அன்பையும் பிறரன்பையும் பிரிக்க முடியாதோ 

அப்படியே நமது அன்பையும் இறை அன்பையும் பிரிக்க முடியாது.

இறையன்போடு நமது அன்பு ஐக்கியமாவது தான் மோட்சம்.

ஆகவே நாம் நமக்காக,
 நாம் மோட்சத்திற்குப் போக வேண்டும் என்பதற்காக வாழ்வதில் சுயநலம் இல்லை.

 ஏனெனில் நாம் இறைவனது விருப்பத்தைத் தான் நிறைவேற்றுகிறோம்.

கணவன் மனைவிக்காக வாழ்கிறான், மனைவி கணவனுக்காக வாழ்கிறாள்,

இருவர் அன்பிலும் சுயநலம் இல்லை.

ஏனெனில் அவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியமாக வாழ்கிறார்கள்.

இயேசு மணவாளன், அவரது திருச்சபை (நாம்)மணவாட்டி.

இருவரும் ஒரே உடல், ஒரே உயிர்.

இயேசு நமக்காக வாழ்கிறார்,
நாம் இயேசுவுக்காக வாழ்கிறோம்,

நாம் அவரது விருப்பப்படி  அவரோடு ஐக்கியமாவதற்காக வாழ்வதில் சுயநலம் இல்லை.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பரிசுத்தத்தனத்தில் வளர்கிறோமோ 

அவ்வளவுக்கு அவ்வளவு நாம் இயேசுவை மகிமைப்படுத்துகிறோம்.


எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பிறரன்பில் வளர்கிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு நாம் இயேசுவை மகிமைப்படுத்துகிறோம்.

நமது தெருவுக்கு தண்ணீர் லாரி வந்திருக்கிறது.

ஒவ்வொருவரும் ஒரு குடம் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம் என்று தண்ணீர் கொண்டு வருபவர் சொன்னால்

நாம் எப்படிப்பட்ட குடத்தை எடுத்துச் செல்வோம்?

எவ்வளவுக்கு எவ்வளவு நமது குடம் பெரியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு அதிகமாகத் தண்ணீர் கிடைக்கும்.


 நமது உள்ளத்தில் இறைவனிடமிருந்து எவ்வளவு அருளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்று இறைவன் சொல்கிறார்.

நாம் நமது உள்ளத்தை 
பெரியதாக்கிக்கொண்டு இறைவனிடம் செல்வோம்.

 நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக செபம், தவம், தர்மம் செய்கிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு நமது உள்ளம் பெரியதாகும்.

ஆகவே வருகின்ற நாற்பது நாட்கள் மட்டுமல்ல, 

நமது வாழ்நாள் முழுவதும் எவ்வளவு அதிகமாக செபம், தவம், தர்மம் செய்ய முடியுமோ அவ்வளவு அதிகமாகச் செய்வோம்.

விண்ணகத்தில் நமது பேரின்பமும் அவ்வளவு பெரியதாக இருக்கும்.

 நமது ஒவ்வொரு செயலையும் இறைவனின் மகிமைக்காக செய்வதே செபம்.

நமது ஆசைகளை ஒறுத்து, அயலானின் ஆசைகளை நிறைவேற்றுவதே தவமும், தர்மமும்.

ஒவ்வொரு வினாடியும் செபம் செய்வோம்.

ஒவ்வொரு வினாடியும் தவம் செய்வோம்.

ஒவ்வொரு வினாடியும் தர்மம்
 செய்வோம்.

நமது உடல் மண்ணுக்குள் போனால் போகட்டும், ஆன்மா விண்ணுக்குள் போகும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment