Monday, February 19, 2024

"மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்." (மத். 6:7)

'மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்." (மத். 6:7)

அளவை விட தரமே முக்கியம்.

கிழிந்த சட்டைகள் நூறு இருப்பதை விட நல்ல சட்டை ஒன்றே போதும்.

இந்த உலகியல் விதி ஆன்மீகத்தின் உயிர் நாடியான செபத்திற்கும் பொறுந்தும்.

சிலர் நமது செபத்திலுள்ள வார்த்தைகளுக்கு கடவுள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று நினைக்கிறார்கள்.

ஆகவே செபம் சொல்லும் போது 
சொற்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

உண்மையில் செபத்துக்கு சொற்களே தேவையில்லை.

இதயங்கள் ஒன்றிப்பதுதான் செபம்.

நமது இதயம் இறைவனது இதயத்தோடு ஒன்றிக்க வேண்டும்.

Our heart should get united with God's heart.

இதயங்கள் பேச வார்த்தைகள் தேவையில்லை.

அவைகள் பேசுவது ஆன்மீக மொழியில்.

ஆன்மீக மொழிக்கு எழுத்தும் இல்லை, வார்த்தையும் இல்லை,

உணர்வுகள் மட்டுமே இருக்கும்.

பேசத் தெரியாத ஒரு கைக்குழந்தை அதன் தாயின் முகத்தைப் பார்க்கும் போது அதன் முகம் அதன் உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிக்கும்.

அதன் முகத்தைப் பார்ப்பதே நமக்குப் பேரானந்தம்.

திவ்ய நற்கருணைப் பேழையின் முன் அமர்ந்து கொண்டு உள்ளத்தில் நற்கருணை நாதரைத் தியானிப்பதில் உள்ள ஆனந்தம்

வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே செபிப்பதில் இருக்காது.

நாம் மனிதர்கள். கருத்துக்களைப் பரிமாற வார்த்தைகளையே பயன் படுத்துகிறோம்.

அதற்காக அத்தியாவசியமான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி நமது ஆண்டவர்

"விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே" செபத்தைச் சொல்லித் தந்திருக்கிறார்.

அந்த செபத்தை ஒரு முறை பக்தி உணர்வோடு செபிப்பது ஒரு முறை பைபிள் முழுவதையும் வாசிப்பதற்குச் சமம்.

அந்த செபம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது.

முதல் பகுதியில் நமது விண்ணகத்
தந்தையைப் புகழ்கிறோம்.

"விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே" 

என்று கூறும்போது 

மனிதகுலப் படைப்பை நினைவு கூறுகிறோம்.

எங்கள் என்ற பன்மை வார்த்தையைப் பயன்படுத்தியதன் மூலம்

 தந்தை இறைவன் (God the Father) மனுக்குலம் முழுமைக்கும் தந்தை என்பதையும்,

 அனைத்து மனிதர்களும் நமது சகோதர சகோதரிகள் என்பதையும்

ஏற்றுக் கொள்கிறோம்.

இதை ஏற்றுக் கொள்ளும் போது

நாம் நமது தந்தையைப் பிள்ளைகளுக்குரிய பாசத்தோடும்,

அனைத்து மனிதர்களையும் சகோதர பாசத்தோடும் நேசிக்க வேண்டும் என்பதையும் 

ஏற்றுக் கொள்கிறோம்.


"உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக"

என்று கூறும்போது 

கடவுளின் பெயர் புனிதமானது 

அதாவது

கடவுள் புனிதமானவர் என்பதை 
ஏற்றுக் கொள்கிறோம்.

தந்தை புனிதமாக இருப்பது போல் நாமும் புனிதமாக இருக்க வேண்டும் என்பதையும் 

ஏற்றுக் கொள்கிறோம்.

தந்தையைப் போலவே நாமும் இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆசை.

(Be perfect as your Heavenly Father is perfect.)

"உம்முடைய இராச்சியம் வருக" 
என்று கூறும்போது 

உலகமே இறைவனின் அரசாக மாற வேண்டும் என்ற நமது விருப்பத்தை தந்தைக்குத் தெரிவிப்பதோடு,

நாம் உலகின் இறுதி எல்கை வரை நற்செய்தியை அறிவிப்போம் என்று வாக்குறுதி கொடுக்கிறோம்.

"உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக"

என்று கூறும்போது

நாம் விண்ணகத் தந்தையின் விருப்பப்படி தான் உலகில் வாழ்வோம் என்று உறுதியளிக்கிறோம்.

நமது ஆண்டவர் இயேசு கற்பித்த செபத்தின் முதல் பகுதியில் நாம் தியானிக்கும் மறை உண்மைகள்,

1. விண்ணகத் தந்தைதான் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார். நமது தந்தையை நமது முழு இதயத்தோடு நேசிக்க வேண்டும்.

2. மனிதர்கள் அனைவரும் ஒரே இறைவனின் பிள்ளைகள். அனைவரும் சகோதர சகோதரிகள். அனைவரும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்.

3.நமது தந்தை புனிதமானவர்.
நமது தந்தையைப் போலவே நாமும் புனிதமாக வாழ அழைக்கப் பட்டிருக்கிறோம்.

4.விண்ணரசு நம்முள் வந்து விட்டது. உலகின் இறுதி எல்கை வரை வாழும் அனைத்து மக்களும் இறையரசின் குடிமக்கள்.

5.மோட்சவாசிகள் அனைவரும் இறைவன் சித்தப்படி வாழ்வது போல உலக மக்கள் அனைவரும் இறைவன் சித்தப்படி வாழ வேண்டும்.

செபத்தின் முதல் பகுதியில் விண்ணகத் தந்தையைப் புகழ்ந்து விட்டு,

இரண்டாம் பகுதியில் நமக்கான மன்றாட்டைத் தொடர்கிறோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment