Sunday, February 11, 2024

இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" (மாற்கு. 8:21)

"இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" 
(மாற்கு. 8:21)

இயேசு தனது சீடர்களைப் பார்த்து கேட்ட கேள்வி,

"இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?"

சீடர்களுக்கு என்ன புரியவில்லை?

 
இயேசு தனது சீடர்களுடன் படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது

 தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்ட சீடர்கள்


 " நம்மிடம் ஒரு அப்பம் மட்டும்தானே இருக்கிறது. 

நாம் பதின்மூவர் இருக்கிறோமே.

எல்லோரும் சாப்பிட போதுமான
  அப்பம் இல்லையே"

 என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். 


இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்ளுகிறீர்கள்? 

இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்?

 உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?' (மாற்கு 8:17)
என்று கேட்டார்.

ஐந்து அப்பங்களைப் பலுகச் செய்து அவர் ஐயாயிரம் பேருக்கு உண்ணக் கொடுத்ததையும்,

ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் கொடுத்ததையும், 

இரண்டு சமயங்களிலும் மீதி இருந்த அப்பத் துண்டுகளையும்
ஞாபகப்படுத்தி

அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" என்று கேட்டார். (மாற்கு 8:21)

உலகத்திலுள்ள அத்தனை மக்களையும் பராமரித்துக் காப்பாற்றி வரும் சர்வ வல்லப கடவுள் அவர்களோடு இருக்கிறார்.

ஆனால் அவருடைய சீடர்கள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

தெரிந்திருந்தால் தங்களது உணவைப் பற்றிக் கவலை பட்டிருக்க மாட்டார்கள்.

தனது சர்வ வல்லமையை அவர்களுக்குப் புரிய வைக்க அவர்கள் முன்னிலையிலேயே இயேசு அனேக புதுமைகளைச் செய்திருக்கிறார்.

படிப்பறிவற்ற சாதாரண மக்கள் அவரைப் புரிந்து கொண்டிருந்த அளவு கூட அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை.

ஓரிருவரைத் தவிர மற்ற சீடர்களும் படிப்பறிவற்ற தொழிலாளர்கள் தான்.

ஆனால் அனுபவத்திலிருந்து பாடம் கற்றிருக்க வேண்டும்.

அவர்கள் கற்றிருக்கவில்லை.

நாம் எப்படி?

குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் இயேசுவின் சீடர்களாக மாறிவிட்டோம்.

சிறு வயதிலிருந்தே ஞானோபதேசம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

நாம் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் நமக்குத் தெரியும்.

நம்மை படைத்தவர் சர்வ வல்லவர் என்பதும் நமக்குத் தெரியும்.

ஒவ்வொரு வினாடியும் தந்தைக்குரிய பாசத்தோடு நம்மைப் பராமரித்து வருகிறார் என்பதும் நமக்கு தெரியும்.

எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மைக் கைவிட மாட்டார் என்பதும் நமக்குத் தெரியும்.

இவ்வளவும் தெரிந்திருந்தும் அவருடைய கையைப் பிடித்து நடந்து கொண்டிருக்கும் நாம்

நமது வாழ்க்கையைப் பற்றி கவலை பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேட்டது கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும் என்பதை அறிந்திருந்தும் 

கேட்டது கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இயேசு தனது சீடர்களை பார்த்து

"இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" 

என்று கேட்ட இயேசு நம்மைப் பார்த்துக் கேட்கிறார்:

"அன்புள்ள மக்களே, ஏன் உங்களுக்கு என் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை?

பத்து மாதம் தனது வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தையைத் தாய் கைவிடுவாளா?

நான் நித்திய காலத்திலிருந்தே உங்களை எனது உள்ளத்தில் சுமந்து கொண்டிருக்கிறேன்.

குறிப்பிட்ட காலகட்டத்தில், 
குறிப்பிட்ட நாட்டில்,
குறிப்பிட்ட ஊரில்,
குறிப்பிட்ட பெற்றோருக்கு உங்களைக் குழந்தைகளாக கொடுத்தவர் நான்.

நீங்கள் பிறந்த நேரத்தையும்,
 நாட்டையும், 
ஊரையும், 
பெற்றோரையும் 
தீர்மானித்தவர் நான்.

ஒவ்வொரு வினாடியும் உங்களோடு இருந்து உங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறவர் நான்.

உங்களது வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்று உங்களை விட எனக்கு நன்றாகவே தெரியும்.

உங்களைக் கேளாமலேயே உங்களைப் படைத்த நான் 
நீங்கள் கேளாமலேயே உங்களுக்கு வேண்டியதைத் தர மாட்டேனா?

"கேளுங்கள், தரப்படும்" என்று நான்தான் சொன்னேன்.

என்னுடன் உரையாடி எனது உறவை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்

 நீங்கள் என்னோடு பேசுவதற்காக உங்களை கேட்கச் சொன்னேன்.

நீங்களும் கேட்கிறீர்கள்.

உங்களுக்கு என்ன தேவை என்று உங்களுக்குத் தெரிவதை விட எனக்கு நன்றாக தெரியும்.

எப்படிப்பட்ட பொருள் உங்களுக்குத் தேவை என்பதும் எனக்குத் தெரியும்.

எனது அன்பை நினைத்து மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்கள் பிறனையும் அன்பு செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.

 .

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நேசிப்பது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது.

உங்களுக்கு வேண்டியதை நான் கவனித்துக் கொள்வேன்.

என் மீது எப்போதும் நம்பிக்கையாய் இருங்கள்.

என் மீதுள்ள விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்ற மூன்றுமே உங்களைக் காப்பாற்றும்."

இயேசுவை விசுவசிப்போம்.

அவர் மீது நம்பிக்கை கொள்வோம்.

அவரையும், அவரால் படைக்கப்பட்ட நமது பிறரையும் நேசிப்போம்.

அவர் நம்மைக் கவனித்துக் கொள்வார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment