எப்போதும் நன்றி கூறுங்கள்.
யாராவது, எப்போதாவது, நமக்கு ஏதாவது நன்மையைச் செய்தால் நாம் அவர்களுக்கு நன்றி கூறுவது வழக்கம்.
நாம் எப்போதும் நன்றி கூற வேண்டுமென்றால்
நமக்கு எப்போதும் யாராவது ஏதாவது நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும்.
நன்மை என்றால் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வு.
நமது மகிழ்ச்சிக்கு யார் காரணமாக இருக்கின்றார்களோ அவர்களுக்கு நாம் நன்றி கூறுகிறோம்.
நாம் பள்ளிக் கூடத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று விட்டால்
நமக்கு பாடம் நடத்திய ஆசிரியருக்கும், நம்மை படிக்க வைத்த நமது பெற்றோருக்கும், நமக்கு படைப்பில் உதவிய எல்லோருக்கும் நாம் நன்றி கூறுவது வழக்கம்.
நாம் நன்றி கூறும்போது நமது உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி முகத்தில் புன்னகையாக மலரும்.
நாம் எப்போதும் நன்றி கூற வேண்டுமென்றால் நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
" எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்."
((1 தெசலோனிக்கர்5:16,18)
என்று புனித சின்னப்பர் கூறுகிறார்.
எப்போதும் நமக்கு ஏதாவது நல்லது நடந்து கொண்டிருந்தால்தான் நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும், நாம் எப்போதும் நன்றி கூறவும் முடியும்.
எப்போதும் நமக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் அது கடவுள் ஒருவரால் தான் முடியும்.
ஏனெனில் அவர்தான் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.
அவர் நன்மையே உருவானவர். அவரால் நன்மையை மட்டுமே செய்ய முடியும்.
ஒவ்வொரு வினாடியும் அவர் நம்மோடு இருந்து நம்மை நல்ல வழியில் நடத்திக் கொண்டிருக்கிறார்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாம் அப்படி இல்லையே.
ஏதாவது ஒரு கவலையில் மாட்டிக்கொண்டு தானே இருக்கிறோம்.
அது ஏன்?
கடவுள் நன்மையே உருவானவர் என்பதையும்,
அவர் ஒவ்வொரு வினாடியும் நமக்கு நன்மையையே செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் உணர்வதில்லை.
நாம் ஒவ்வொரு நாளும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம்.
மூச்சு நின்றால் வாழ்க்கை முடிந்து விடும்.
மூச்சு விட உதவுவது நம்மை சுற்றியுள்ள காற்று என்பதையும், அதைப் படைத்தவர் கடவுள் என்பதையும் எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறோமா?
கடவுள் முதலில் இயற்கையைப் படைத்து விட்டு தான் நம்மைப் படைத்தார்.
காற்று, தண்ணீர், ஒளி, தாவரங்கள், மலை போன்ற ஆயிரக்கணக்கான இயற்கை பொருள்களைப் பார்க்கும் போது
அவற்றை நமக்காகத்தான் கடவுள் படைத்தார் என்று நினைத்துப்
பார்த்திருக்கிறோமா?
நினைத்துப் பார்த்தால் ஒவ்வொரு வினாடியும் அவருக்கு நன்றி கூறாமல் இருக்க முடியாது.
உலகில் நமது செயல்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1.இறைவனுக்கு ஏற்றவை.
2.நமக்கு மட்டும் பிடித்தமானவை
3.இறைவனுக்கு ஏற்காதவை.
முதல் வகை செயல்களை நாம் இறைவனது மகிமைக்காகச் செய்கிறோம்.
இரண்டாவது வகை செயல்களை இறைவனைப் பற்றி கவலைப்படாமல் நமது மகிழ்ச்சிக்காக மட்டும் செய்கிறோம்.
மூன்றாவது வகை செயல்கள் நாம் செய்யும் பாவங்கள்.
நாம் செய்யும் செயல்களைத் தவிர
இயற்கை நிகழ்வுகளும், நம்மைச் சுற்றி வாழ்வோர் செய்யும் செயல்களும் நம்மைப் பாதிக்கின்றன.
நமது செயல்களைப் பொருத்த மட்டில் நாம் இறைவனது மகிமைக்காக மட்டும் செய்யும் செயல்கள் மட்டுமே நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகின்றன.
நமக்கு மட்டும் பிடித்தமான நமது செயல்களால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படலாம்,
ஆனால் அவை இறைவனுக்குப் பிடித்தமான உண்மையான மகிழ்ச்சி அல்ல.
நமது பாவங்களால் நமக்குச் சிற்றின்பம் ஏற்படலாம், மகிழ்ச்சி ஏற்பட முடியாது. அவை கடவுளுக்கு எதிரானவை.
நம்மைச் சுற்றி வாழ்வோர் செய்யும் செயல்களால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதா, ஏற்படவில்லையா என்பது அவற்றை ஏற்றுக்கொள்ளும் நமது மனநிலையை பொறுத்தது.
பாவத்தைத் தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் நமக்கு மகிழ்ச்சி தருகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொண்டால்,
அவற்றுக்காக நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு வினாடியும் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருப்பதால்
ஒவ்வொரு வினாடியும் நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூற வேண்டுமென்பது கடவுளின்
திருவுளம்.
நம் வாழ்வில் பாவம் தவிர எது நடந்தாலும் அது நமது நன்மைக்காகவே என்பதை ஏற்றுக் கொண்டால்
நாம் என்ன நடந்தாலும் நன்றி கூறுவோம்.
என்ன நடந்தாலும் அது நமக்கு இறைவன் தரும் ஆசீர்வாதமே.
"இறைவா, நீர் ஒவ்வொரு வினாடியும் என்னை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறீர்.
ஒவ்வொரு வினாடியும் உமக்கு நன்றி கூறுகிறேன்.
எனக்கு நல்ல மனைவியைத் தந்தீர், இறைவா, உமக்கு நன்றி.
எனக்கு நீர் தந்த மனைவி ஒரு வாயாடி. பொறுமையை கற்றுக்கொள்ள எனக்கு சந்தர்ப்பம் தந்து உதவியமைக்கு நன்றி.
நான் ஆண் குழந்தை வேண்டுமென்று
ன கேட்டேன். நீர் மூன்று பெண் குழந்தைகளைத் தந்திருக்கிறீர்.
உமது சித்தத்தை ஏற்றுக் கொள்கிறேன், நன்றி.
தேர்வில் வெற்றி பெற முயற்சி செய்து படித்தேன். ஆனால் பாஸ் மார்க் வாங்க முடியவில்லை. ஏதாவது நன்மைக்காகத்தான் இருக்கும். நன்றி.
தொடர்ந்து முயற்சி செய்து படிப்பேன்.
நான் கேட்ட வேலை கிடைக்கவில்லை, நீர் கொடுத்த வேலையை ஏற்றுக்கொள்கிறேன். உமது சித்தம் என்னில் நிறைவேறட்டும். நன்றி.
எனக்கு நான்கு நாட்களாகக் காய்ச்சல். எனது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்க உதவியமைக்கு, இறைவா, உமக்கு நன்றி.
வெற்றியோ, தோல்வியோ எது நடந்தாலும் உமது மகிமைக்காக ஏற்றுக்கொள்கிறேன்.
ஏற்றுக் கொள்வது தான் ஆன்மீகத்தில் எனக்குக் கிடைக்கும் வெற்றி.
என்ன நடந்தாலும், இறைவா, உமக்கு நன்றி."
"இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்." என்பது இறைவாக்கு.
இறைவனது விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக் கொள்ள நமக்கு உதவும் படி
இறைவனிடம் இடைவிடாது வேண்டுவோம்.
என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.
எப்போதும் நன்றி கூறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment