Wednesday, February 28, 2024

"அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். "(லூக். 16:22)

"அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். "
(லூக். 16:22)

 இப்போது நாம் வாழும் உலகமும்,
மரணத்துக்குப் பின் வாழவிருக்கும் மறுவுலகமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை.

இவ்வுலகம் நேரம், இடத்துக்கு உட்பட்டது.

மறுவுலகத்தில் நேரமும், இடமும் கிடையாது.

இவ்வுலகம் நேரத்துக்கு உட்பட்டதால் அதற்கு துவக்கமும் முடிவும் உண்டு.

ஆகவே மண்ணக வாழ்வு தற்காலிகமானது.

மறுவுலகத்துக்கு துவக்கமும் முடிவும் இல்லாததால் அது நித்தியமானது, நிரந்தரமானது, அழிவில்லாதது.

மண்ணகத்தில் வாழ்வோர் அவரவர் விருப்பம் போல் வாழ்கிறார்கள்.

அவரவர் வாழ்வின் தன்மை அவர்களின் விண்ணக வாழ்வின் தன்மையைத் தீர்மானிக்கிறது.

மண்ணகத்தில் நல்லவர்களாக வாழ்வோர் விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வார்கள்.

மண்ணகத்தில் தங்கள் விருப்பம் போல் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வோர் விண்ணக பேரின்ப வாழ்வுக்குச் செல்ல மாட்டார்கள்.

நித்திய பேரிடர் வாழ்வுக்குச் செல்வார்கள்.

இயேசு கூறிய செல்வந்தன் ஏழை இலாசர் உவமையில்

பூமியில் இஷ்டம்போல் உண்டு வாழ்க்கையை அனுபவித்த செல்வந்தன் மறுவுலகில் நித்திய பேரிடர் வாழ்வுக்குள் நுழைகிறான்.

ஏழை இலாசர் மறுவுலகில் நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைகிறான்.

இவ்வுலகில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குப் போதிக்கவே இயேசு இந்த உவமையைக் கூறினார்.

பலமுறை இந்த உவமையை வாசித்திருப்போம், ஏதாவது பாடம் கற்றிருக்கிறோமா?

அல்லது நமது விருப்பம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

நமது விருப்பம் போல் வாழ கடவுள் நம்மைப் படைக்கவில்லை.

அவர் விருப்பம் போல், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழவே நம்மைப் படைத்திருக்கிறார்.

நமது விருப்பம் போல் வாழ்வது நமக்கு எளிது.

கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வது எளிதல்ல, கடினம்தான்.

ஆனாலும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவர்கள் தான் மறுவுலகில் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வார்கள்.

பூவுலகில் செல்வந்தர்களாக இருப்பது பாவமல்ல,

ஆனால் செல்வத்தைப் பயன்படுத்த வேண்டிய விதமாய்ப் பயன்படுத்தாததுதான் பாவம்.

கடவுள் நமக்குச் செல்வத்தைத் தந்திருப்பது நாம் சிற்றின்பத்தில் வாழ்ந்து வீணடிப்பதற்காக அல்ல,

இல்லாதாரோடு அதைப் பகிர்ந்து அவர்களையும் வாழ வைப்பதற்காக.

நம்மைப் போல நம்மிடம் உள்ள செல்வமும் கடவுளால் படைக்கப்பட்டதுதான்.

கடவுளால் படைக்கப்பட்டதை அவர் விருப்பப்படி பயன்படுத்துவதுதான் முறை.

நம்மிடம் இருப்பதை இல்லாதாரோடு பகிர்ந்துண்டு வாழ்வோம்.

இறைவனோடு நித்திய பேரின்ப வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment