Tuesday, February 20, 2024

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. "(மத். 16:18)

" எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. "
(மத். 16:18)

 " நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு கேட்ட கேள்விக்கு 

 சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று கூறினார். 

அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 


எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."

இயேசு சீமோனைப் பாறை என்று அழைத்தது இது முதல் முறையல்ல.

முதல் முறை சீமோன் தன் சகோதரர் அந்திரேயாவுடன் இயேசுவைச் சந்தித்தபோது 

  இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். 

"கேபா" என்றால் "பாறை" என்பது பொருள். (அரு.1:42)

இயேசு இறைமகன்.

நித்தியர்.

அவரது எண்ணங்கள் நித்தியமானவை, அதாவது, துவக்கமும் முடிவும் இல்லாதவை.

ஆக யோவானின் மகன் சீமோன் பாறை என்று அழைக்கப்பட வேண்டுமென்று நித்திய காலமாகத் தீர்மானித்து விட்டார்.

அதை வெளிப்படையாகக் கூறியது அவரை முதல் முறைச் சந்தித்த போதும்,

சீமோன் "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று கூறியபோதும்.

பாறை உறுதியானது.

உறுதியான "இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு 16:18) என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவின் திருச்சபை பாறையின் மீது கட்டப்பட்ட வீடு.

எந்த சக்தியாலும் அதை அசைக்க முடியாது.

இயேசுவின் வார்த்தைகளிலிருந்து
எந்த சக்தியாலும்  அசைக்க முடியாத திருச்சபையின் தலைவர் சீமோன் இராயப்பர் என்பது உறுதியாகிறது.

மேலும்,

"என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" 

 "என் ஆடுகளை மேய்" . 

"என் ஆடுகளைப் பேணிவளர். 
(அரு. 21:15,16,17)

என்று இயேசு இராயப்பரைப் பார்த்து கூறிய வார்த்தைகள் இதை உறுதிப் படுத்துகின்றன.

ஆக இயேசு இராயப்பரின் தலைமையில் தான் தனது திருச்சபையை நிறுவினார்.

இயேசு ஒரே திருச்சபையைத் தான் நிறுவினார்.

இயேசு நிறுவிய ஏக, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபையின் முதல் தலைவர், அதாவது, முதல் பாப்பரசர் புனித இராயப்பர்.  

பதினாறாம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் தலைமையில் ஒரு பிரிவினர் பாப்பரசரின் தலைமையை ஏற்க மறுத்து கத்தோலிக்க திருச்சபையை விட்டு வெளியேறினர்.

கத்தோலிக்க பைபிளிலிருந்து தங்களுக்குப் பிடித்தமில்லாத ஏழு புத்தகங்களை அப்புறப்படுத்தி விட்டு,

மீதிப் புத்தகங்களை மட்டும் பைபிள் என்று கூறிக்கொண்டு

"மீட்புக்கு பைபிள் மட்டும் போதும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமையும், பாரம்பரியமும் வேண்டாம்"

எனக் கூறிக்கொண்டு தனித்து இயங்க ஆரம்பித்தனர்.

அதன் பிறகு பாப்பரசரின் தலைமையை ஏற்க மறுத்தவர்கள் தனித்தும், குழுவாகவும் நிறையவே வெளியேறினார்கள்.

இன்று பைபிளை மட்டும் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும் பிரிவினை சபைகள் 40,000 க்கும் மேல் உள்ளன.

அவைகள் தங்கள் இஷ்டப்படி பைபிளை மொழி பெயர்த்துக் கொள்வதோடு 

தங்கள் தவறான போதனைகளுக்கு

(பைபிள் வசனங்களுக்கு தங்கள் இஷ்டம்போல் விளக்கம் கொடுப்பதன் மூலம்)

பைபிளிலிருந்தே ஆதாரம் காண்பிக்கின்றனர்.

ஆண்டவர் " எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு;

 இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 
(மத்தேயு 16:18)


"உன் பெயர் 'பேதுரு; இந்தப்' பாறையின்மேல்"

அதாவது பேதுரு என்றப் பாறையின்மேல்

என்று தான் ஆண்டவர் சொல்கிறார்.

ஆனால் பிரிவினை சபையினர் 
"Peter" என்ற வார்த்தைக்கு கிரேக்க மூலம் "Petros". 

 Petros என்றால் சிறிய கல் 
(“a small stone”) என்றுதான் பொருள்.

ஆகவே Peter என்றால் பாறை அல்ல,
பாறை என்ற வார்த்தை இயேசுவையே குறிக்கும் என்று வாதிடுகின்றனர்.

ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.

 Peter" என்ற வார்த்தைக்கு கிரேக்க மூலம் "Petros". ஆக இருக்கலாம்.

ஆனால் இயேசு பேசியது அரமேய்க் மொழி, கிரேக்கம் அல்ல.

Peter" என்ற வார்த்தைக்கு அரமேய்க் மூலம் "கேபா ."
 
இயேசு பயன்படுத்திய வார்த்தை
 "கேபா ." "Petros".அல்ல.

" பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். "கேபா" என்றால் "பாறை" என்பது பொருள். 
(அரு. 1:42)

ஆக இயேசு யோவானின் மகனாகிய சீமோனுக்கு பாறை என்று தான் பெயரிட்டார்.

அந்தப் பாறையின் மீது தான் தனது திருச்சபையைக் கட்டினார்.

"விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்."
(மத். 16:19)

இராயப்பருக்கும், அவரது வாரிசான பாப்பரசருக்கும் திருச்சபை மீது முழு அதிகாரம் உண்டு என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

"புனித பேதுருவிலிருந்து தொடங்கிய திருத்தந்தையர் வரிசையில் இன்று பணிப்பொறுப்பில் உள்ள திருத்தந்தை பிரான்சிசு 266ஆம் திருத்தந்தை ஆவார்."

ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே இயேசுவால் நிறுவப்பட்ட ஒரே திருச்சபை,

அதன் ஒரே தலைவர் பாப்பரசர் என்பதை நினைவில் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment