Thursday, February 1, 2024

உண்மையான விசுவாசி(தொடர்ச்சி)

உண்மையான விசுவாசி
(தொடர்ச்சி)

அன்று ஞாயிற்றுக் கிழமை.

ஓய்வு நாள்.

காலை 8 மணிக்குத் திருப்பலி.

ஏழரை மணிக்கு ஜெபம் ஆரம்பிக்கும்.

வீட்டில் இருந்து ஏழு மணிக்குப்
 புறப்பட்டு விட்டேன்.

வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தபோது,

முந்திய நாள் ஹோட்டலில் சந்தித்த நண்பர் வந்து கொண்டிருந்தார்.

இருவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.

"தம்பி ஏழரைக்கு கோவிலில் இருக்க வேண்டும்."

"'போய்விடலாம் நடக்க 20 நிமிடங்கள் தான் ஆகும்."

கால் மணி நேரம் நடந்திருப்போம்.

நடுத் தெருவில் எங்கள் முன்னால் எதிரில் வந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மயங்கிக் கீழே விழுந்தார்.

நண்பர் ஓடிச்சென்று அவரைத் தாங்கி பிடித்தார்.

கைத் தாங்கலாக அவரைக் கீழே படுக்க வைத்தார்.

அவர் முழுமையான மயக்க நிலையில் இருந்தார்.

என்ன பிரச்சனை என்பது எங்களுக்குத் தெரியாது.

"தம்பி, இவரை இப்படியே போட்டு விட்டு கோவிலுக்குப் போக முடியாது.

Auto ஒன்று பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம்."

"சரி" என்றேன் நான்.

தற்செயலாக auto ஒன்று வந்தது.

அதை நிறுத்தி மயக்க நிலையில் இருந்த மனிதரை இருவரும் சேர்ந்து தூக்கி ஆட்டோவில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

மருத்துவரிடம் காண்பித்தோம்.

மருத்துவர் அவரை ICUவில் admit செய்து பரிசோதனை செய்தார்.

சுமார் அரை மணி நேரம் வெராண்டாவில் காத்திருந்தோம்.

கோவிலில் பூசை ஆரம்பித்திருக்கும்.

தாங்கள் செய்து கொண்டிருந்ததும் இறைப் பணி தானே.

"மயக்க நிலையில் தான் இருக்கிறார்.

ஆனாலும் நீங்கள் அவரைச் சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

பிந்தி வந்தால் பிரச்சனை ஆகியிருக்கும்."

ஒரு சீட்டைக் கையில் தந்து 

"Medical store க்குச் சென்று இந்த மருந்தை வாங்கி வாருங்கள்."

நண்பர் சீட்டைக் கையில் வாங்கிக் கொண்டார்.

நான் அவரைப் பார்த்தேன்.

''பணம் தானே. Gpay மூலம் கட்டி விடலாம்."

நண்பர் மருந்தை வாங்கி வந்து மருத்துவரிடம் கொடுத்தார்.

தொடர்ந்து வெராண்டாவில் காத்திருந்தோம்.

பாதிப் பூசை முடிந்திருக்கும். மனதில் நினைத்துக் கொண்டோம்.

இயேசுவையும் மனதில் நினைத்துக் கொண்டோம்.

அரை மணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார்.

"மயக்கம் தெளிந்து கண் விழித்து விட்டார். சென்று பாருங்கள்."

உள்ளே சென்றோம்.

படுத்திருந்தவர் என் நண்பரை உற்று நோக்கினார்.

"சார் நீங்களா?" மெதுவாகக் கேட்டார்.

மருத்துவச் சொன்னார், 

"அவர்தான் சரியான நேரத்தில் உங்களை மருத்துவ மனைக்கு அழைத்து வந்தார்."

"நாங்கள் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது நீங்கள் மயங்கி விழுந்தீர்கள்.

 உடனே உங்களை இங்கே அழைத்து வந்தோம்."

படுத்திருந்தவர் மெதுவாகப் பேசினார்,

"இன்று ஞாயிற்றுக்கிழமை. நீங்கள் கோவிலுக்கும் போய் கொண்டிருந்திருப்பீர்கள்.

என்னைப் பார்த்ததும் கோவிலுக்குப் போகாமல் இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள்.

மிகவும் நன்றி."

"கடவுளுக்கு நன்றி கூறுங்கள். அவர்தான் எங்கள் மூலம் உங்களைச் சரியான நேரத்தில் இங்கே அழைத்து வந்திருக்கிறார்."

படுத்திருந்தவர் பதில் எதுவும் கூறவில்லை.

நண்பர் பேசினார்,

"டாக்டர், மருத்துவச் செலவை Gpay மூலம் கட்டி விடுகிறேன். 

நண்பரை எப்போது அழைத்துக் கொண்டு போகலாம்."

"இன்னும் அரை மணி நேரம் கழித்து அழைத்துக் கொண்டு போகலாம்."

நாங்கள் அரை மணி நேரம் கட்டில் அருகில் காத்திருந்தோம்.

இப்போது பூசை முடிந்திருக்கும்.

போகும்போது கோவிலுக்குப் போய்விட்டுப் போக வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து மருத்துவர் கூறிய மருந்துகளை வாங்கி மயக்கம் தெளிந்தவரிடம் கொடுத்துவிட்டு,

 மருத்துவச் செலவையும் கட்டிவிட்டு,

அவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

ஆட்டோ வெளியே காத்துக் கொண்டிருந்தது.

நண்பர் என்னிடம் கேட்டார்,

"நண்பரை அழைத்துக் கொண்டு நேரடியாக அவரது வீட்டுக்குப் 
போவோமா, அல்லது கோயிலுக்குப் போய்விட்டு போவோமா?"

சுகமானவர் சொன்னார்,

" நானும் கோவிலுக்கு வருகிறேன்."

"உண்மையாகவா? என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை."


நான் கேட்டேன்,

"அவர் கூறியதை உங்களால் ஏன் நம்ப முடியவில்லை."

அவர் சொன்னார்,

"நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நண்பருக்குத் தெரியும்.

அவரோடு அடிக்கடி வாக்குவாதம் செய்வது உண்டு.

என்னைப் பற்றித் தெரிந்தும் கோவிலுக்குப் போகாமல் என்னை இங்கே அழைத்து வந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவர் என்னை இங்கே அழைத்து வந்தது தெரிந்த உடனே என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.

கடவுள் நம்பிக்கை உள்ளவர் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது தெரிந்தும் உதவியிருக்கிறார்.

நீ பதிலுக்கு என்ன செய்யப் போகிறாய்?

அந்தக் கேள்விக்கு பதில் காண முயன்று கொண்டிருக்கிறேன்."


"உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானை நேசி." என்ற இயேசுவின் போதனை தான் உங்களை இங்கே அழைத்து வந்தது.

பதிலுக்கு நீங்களும் அவரை நேசியுங்கள். அவருக்கு நன்றி கூறுங்கள்."

"நான் கடவுளை நம்ப ஆரம்பித்து விட்டேன். அவருக்கு என் நன்றி.
நன்றி செலுத்த நானும் கோவிலுக்கு வருகிறேன்."

மூவரும் கோவிலுக்குச் சென்றோம்.

இயேசுவுக்கு நன்றி கூறினோம்.

நான் நண்பரிடம் கூறினேன்,

"நேற்று இட்லி கேட்டீர்கள், தோசை வந்தது.

இன்று இயேசுவைப் பார்க்க கோவிலுக்குச் சென்றோம், 

அவர் நம்மை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்."

"நாம் எங்கே போகிறோம் என்பது முக்கியமல்ல.

யாரால் அனுப்பப்பட்டுப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.

நம்மை அனுப்பியவர் இறைமகன் இயேசு."

"நீங்கள் ஒரு உண்மையான விசுவாசி.

உங்கள் நட்பு கிடைத்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment