Thursday, February 29, 2024

"இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" . (லூக். 19:5)

"இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" . 
(லூக். 19:5)


 வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்த சக்கேயு இயேசுவைப் பார்க்க விரும்பினார்.

அதற்காக அவர் வரும் வழியில் 
ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். 

 அவ்வழியே வந்த இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன்,

 அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார். 

வரிதண்டுவோர் எல்லாம் பாவிகள் எனக் கருதப்பட்ட காலம் அது.

பாவி எனக் கருதப்பட்ட சக்கேயு பரிசுத்தராகிய இயேசுவைக் காண விரும்பினார்.

இயேசுவும் அவன் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்.

இயேசுவைப் புரியாதவர்கள் "பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்" என்று முணுமுணுத்தனர். 

ஆனால் இயேசு விருப்பமுடன் அவர் வீட்டுக்குச் சென்றார்.

 சக்கேயு இயேசுவைப் பார்த்து,

"ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; 

எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால்

 நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்"
 என்றார். 

 இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! 

இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" என்று சொன்னார்."

இயேசு கூறிய வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்.

இயேசு அபிரகாமின் வம்சத்தினர்.

மனம் திரும்பிய சக்கேயுவை,

"இவரும் ஆபிரகாமின் மகனே!"
என்கிறார். (லூக். 19:9)

அதாவது சக்கேயுவைத் தனது சகோதரராக ஏற்றுக் கொள்கிறார்.

சக்கேயு மட்டுமல்ல, நாமும் பாவிகள்.

நமது இல்லத்துக்கு இயேசு எழுந்தருளி வரத் தகுதி அற்றவர்கள் என்று நாமே கூறிக் கொள்கிறோம்.

ஆனால் திரு விருந்தின் போது இயேசு நம் ஆன்மாவாகிய இல்லத்திற்கு வருகிறார்.

நம் இல்லத்திற்கு வரும் இயேசுவிடம் சக்கேயு கூறிய வார்த்தைகளை நாம் கூறுகிறோமா?

கூறினால்தான் நாம் இயேசுவின் சகோதரர்கள் ஆகத் தகுதி பெறுவோம்.

திருவிருந்தின்போது நம்முள் வந்த இயேசு நாம் எங்கு சென்றாலும் நம்மோடு தான் வருகிறார்.

நாம் வீட்டிற்கு வந்து சாப்பிடும் போதும்,

பணி புரிய அலுவலகம் செல்லும் போதும்,

சிற்றுண்டி உண்ண ஹோட்டலுக்குச் செல்லும் போதும்

விளையாட மைதானத்திற்குச் செல்லும் போதும்,

நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போதும்,

நாம் என்ன செய்து கொண்டிருந்தாலும் இயேசு நம்மோடு தான் இருக்கிறார்.

நாம் அவருடைய பிரசன்னத்தில் இருப்பதை உணர்கிறோமா?

நாம் ஏதாவது தவறு செய்தாலும், பாவம் செய்தாலும் இயேசு நம்மோடு தான் இருக்கிறார்.

இதை உணர்கிறோமா?

உணர்ந்தால் நாம் பாவமே செய்ய மாட்டோம்.

இயேசுவை அருகில் வைத்துக் கொண்டு பாவம் செய்ய முடியுமா?

மாறாக இயேசுவை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக அவருக்கு விருப்பமானவற்றைச் செய்வோம்.

உணவு தேவைப் படுகிறவர்களுக்கு உணவு கொடுப்போம்.


உடை தேவைப் படுகிறவர்களுக்கு உடை கொடுப்போம்.

தவிப்பவர்களூக்குத் தண்ணீர் கொடுப்போம்.

கவலைப் படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்வோம்.

யாருக்கு என்ன தேவைப் பட்டாலும் இயேசுவுக்காகக் கொடுப்போம்.

இப்படியெல்லாம் நாம் செய்தால்,

"நீங்களும் அபிரகாமின் பிள்ளைகள் தானே."

அதாவது,

"எனது சகோதரர்கள் தானே"

என்று நம்மிடம் சொல்லுவார்.

அவருடைய விண்ணக வீட்டுக்கு நாமும் பங்காளிகள் ஆகிவிடுவோம்.

இயேசுவின் சகோதரர்களாக வாழ்வோம்.

விண்ணக வீடு நம் வீடு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment