Sunday, February 18, 2024

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத். 25:40)

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" 
(மத். 25:40)

''எனது சகோதரர் சகோதரிகளுக்கு செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்." என்று இயேசு சொல்கிறார்.

யார் இயேசுவின் சகோதரர் சகோதரிகள்?

தந்தை இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் இயேசுவின் சகோதரர் சகோதரிகள்.

அதாவது நமது தந்தையால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர் சகோதரிகள்.

இயேசுவின் சொற்படி நாம் ஒருவரை ஒருவர் நேசித்தால் இயேசுவை நேசிக்கிறோம்.

இயேசுவை நேசித்தால் மோட்சம் உறுதி.

இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து சிந்தித்துப் பார்த்தால் மோட்சத்திற்குப் போவது எவ்வளவு எளிது,

எளிது மட்டுமல்ல,

இனியானது என்பது விளங்கும்.

யாராவது கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா?

கரும்பைக் கொடுத்து, தின்னக் கூலியும் கொடுத்தால் எப்படி இருக்கும்?

யாராவது வேண்டாம் என்பார்களா?

வாழ்க்கையிலேயே மிகவும் இனிமையான செயல் அன்பு செய்வதுதான்.

அன்பு செய்வது நமது இயல்பு.

பெற்ற பிள்ளையைத் தாயால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

குழந்தை பிறந்தவுடன் அது செய்யும் முதல் வேலை தன் தாயை நேசிப்பது தான்.

இயேசு நமக்கு அன்பு செய்ய இயல்பையும் கொடுத்து,

அன்பு செய்வதற்கு பரிசும் கொடுக்கிறார்.

சாதாரணப் பரிசு அல்ல, நித்திய பேரின்ப வாழ்வையே பரிசாகக் கொடுக்கிறார்,

கரும்பு தின்னக் கூலி கொடுப்பது போல.

எப்படி அன்பு செய்யச் சொல்கிறார்?

நம்மை நாம் நேசிப்பது போல.

கடவுள் எவ்வளவு இரக்கம் உள்ளவர் என்பதை நினைத்துப் பாருங்கள்!

நாம் செய்ய எளிதான, 
இயல்பான,
 இனிமையான, 
பள்ளிக்கூடப் படிப்பு தேவையில்லாத,
 சம்பளம் கொடுத்து பயிற்சி பெறத் தேவையில்லாத

 ஒரு வேலையை கொடுத்து,

அதற்கு சன்மானமாக நித்திய பேரின்ப வாழ்வைக் கொடுக்கிறார்,

பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காமல்.

பிறரை நேசிப்பது கடினமான காரியம் அல்ல.

நம்மை நாம் நேசிப்பது போலவே பிறரையும் நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பது கடினமான செயலா?

பசித்தவுடன் நாம் சாப்பிடுகிறோம்,
ஏனெனில் நாம் நம்மை நேசிக்கிறோம்.

இதைத் தானே மற்றவர்கள் விஷயத்திலும் செய்ய வேண்டும்!

நமக்கு நாம் உணவைக் கொடுப்பது போல மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்,

 இதற்கான சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.

நாம் தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பது போல,

 மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

இதற்கான சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.

நாம் சுகமில்லாமல் இருக்கும்போது மற்றவர்கள் நமக்கு ஆறுதல் கூற விரும்புகிறோம்,

அதே போல் மற்றவர்கள் சுகம் இல்லாமல் இருக்கும்போது நாம் அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்.

 இதற்கான சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.

ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் 

நாம் நம்மை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசித்தால் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வு சன்மானமாகக் கிடைக்கும்.

மனிதர்கள் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்,

 ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள்,

ஒருவரை ஒருவர் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் நேசித்தாலே போதும்,

 நித்திய பேரின்ப வாழ்வு.

கரும்பு தின்னக் கூலி,

அன்பு செய்ய நிலை வாழ்வு.

இறைவனது தாராளமன குணத்திற்காக அவருக்கு நன்றி சொல்லுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment