Monday, February 5, 2024

தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்.

தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். 

 The beginning of wisdom is the fear of the LORD.
(Proverbs 9:10)

"தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். "

என்ற இறைவாக்கை வாசித்து விட்டு நண்பர் ஒருவர் கேட்டார்,

''மனிதன் தனக்கு தீங்கு விளைவிக்கும் ஒருவரை அல்லது ஒரு பொருளைப் பார்த்துதான் பயப்படுவான்.

கடவுள் அன்புமயமானவர். 

 நாம் அன்பு செய்ய வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுத்திருப்பவர்.

ஒரு குழந்தை தனது தாயைப் பார்த்து பயப்படுமா?

நமது தாய் நம்மை நேசிப்பதை விட எண்ணிறந்த மடங்கு அதிகமாக நம்மை நேசிக்கும் கடவுள் மேல் நமக்கு எப்படிப் பயம் வரும் ?"

பயம், ஞானம் ஆகிய வார்த்தைகளின் பொருளை உணர்ந்தவர்கள் இந்த கேள்வியைக் கேட்க மாட்டார்கள்.

ஞானம் என்றால் என்ன?

மிருகங்களுக்கு ஐந்தறிவு.

மனிதர்களுக்கு ஆறறிவு.

மனிதனை மிருகத்திடமிருந்து வேறு படுத்துவது அவனிடம் உள்ள புத்தி.

மிருகத்துக்கு புத்தி இல்லை. அதற்கு சிந்திக்கத் தெரியாது.

மிருகம் சிந்தித்து செயல்படுவது இல்லை.

அதனுடைய உள்ளுணர்வு (Instinct) மூலம் மட்டுமே செயல்படுகிறது.

மனிதனிடமும் உள்ளுணர்வு இருக்கிறது.

"பாம்பு" என்று சொன்னவுடன் மனிதனிடம் பயம் ஏற்படுவது அவனுடைய உள்ளுணர்வின் காரணமாகத்தான்.

ஆனாலும் மனிதன் செயல்படுவது அவனுடைய புத்தியின் காரணமாகத்தான்.

புத்தி சிந்திக்கும்.

சிந்தனை அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும்.

அதன்படி தான் அவன் செயல் படுவான்.

புத்தியைப் பயன்படுத்துபவன் பாம்பு என்ற வார்த்தையைக் கேட்டு பயப்பட மாட்டான்.

 பாம்பைப் பார்த்து அதுவால் தனக்கு ஆபத்து என்று தெரிந்தால் தான் பயப்படுவான்.

 நம்மிடமுள்ள புத்தியையும் சிந்தனையையும் பயன்படுத்தி தான் நாம் அறிவைச் சேகரிக்கிறோம்.

மிருகத்துக்கு அறிவு இல்லை.

மனிதனுக்கு அறிவு இருக்கிறது.

மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிக்கு காரணம் அவனிடம் உள்ள சிந்திக்கும் திறனும், அறிவும் தான்.

மிருகங்களுக்கு விஞ்ஞானம் என்றால் என்னவென்றே தெரியாது.

அறிவு உள்ளவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகச் செயல்படுவதில்லை.

அறிவை எந்த சூழ்நிலையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருப்பதே ஞானம்.

பைபிளை முழுவதும் வாசித்து, அதன் வசனங்களைப் பாராமல் படித்திருப்பவனுக்கு பைபிளைப் பற்றிய அறிவு இருக்கிறது.

ஆனால் இந்த அறிவு மட்டும் ஒருவனுக்கு மீட்பைத் தராது.

பைபிளை முழுவதும் படித்தவன் அதைச் சார்ந்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்.

வினாடி வினாக்களுக்கு உரிய பதிலைச் சொல்லலாம்.

தேர்வில் வெற்றி பெறுவதும், வினாக்களுக்குப் பதில் சொல்வதும் நமக்கு மீட்பை பெற்று தராது.

சாத்தானுக்கு நம்மை விட பைபிள் அறிவு அதிகம்.

அது பைபிள் வசனங்களைப் பயன்படுத்தி தான் கடவுளையே சோதித்தது.

பைபிள் வசனங்களை நமது வாழ்க்கையில் பயன்படுத்தத் தெரிவதுதான் ஞானம்.

"எல்லாவற்றையும் விட கடவுளை அதிகம் நேசிக்க வேண்டும்,
 நம்மை நேசிப்பதைப் போல் நம் அயலானையும் நேசிக்க வேண்டும்" என்று

 பைபிள் கூறுகிறது என்று

 கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனுக்கும் தெரியும்.

ஆனால் நாத்திகனிடம் ஞானம் இல்லை.

அதனால் பைபிள் வசனங்களை வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டான்.

"கடவுள் இருக்கிறார்" என்பதை பற்றி அறிந்திருப்பது அறிவு.

அந்த அறிவை பயன்படுத்தி கடவுளை நேசிப்பது ஞானம்.

அறிவு கோட்பாடு. (Theory)
ஞானம் செயல்பாடு. (Practice)

கடவுள் மனிதரை மீட்க மனிதனாகப் பிறப்பார் என்று சாத்தானுக்குத் தெரியும்.

இது அவனுக்கிருந்த அறிவு.

ஆனால் மனிதனாகப் பிறந்த இறைவன் தனது பாடுகளின் மூலமும் மரணத்தின் மூலமும் மனிதனை மீட்பார் என்று அதற்குத் தெரியாது.

அதற்கு ஞானம் இல்லை.

இருந்திருந்தால் அவரைக் காட்டிக் கொடுக்கும்படி யூதாசைத் தூண்டியிருக்க மாட்டான்.

இயேசுவைக் கொன்று விட்டால் மனிதனை மீட்பதிலிருந்து அவரைத் தடுத்துவிடலாம் என்று அவன் எண்ணினான்.

ஆக அறிவை பயன்படுத்தத் தெரிவது தான் ஞானம்.

அன்னை மரியாளை ஞானம் நிறைந்த கன்னிகை என்கிறோம்.

அவளது ஞானம் தான் இறைவனின் அடிமையாக அவளை
அர்ப்பணிக்கத் தூண்டியது.

"ஆண்டவருக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்."
Proverbs 31:30
என்பது இறைவாக்கு.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" 
(லூக்கா நற்செய்தி 1:28)
என்று வாழ்த்தினார்.

இந்த வாழ்த்திலிருந்தே அன்னை மரியாளிடம் இறை பயம் இருந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

"இறை பயம்" என்றால் என்ன?

நமது முழு மனதோடும், முழு இருதயத்தோடும் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிக்க வேண்டும் என்பது இறைவனது கட்டளை.

நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களது மனதை நோகச் செய்ய பயப்படுவோம்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அவரது மனதை நோகச் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம்.

நாம் கடவுளை முழு மனதோடு நேசித்தால் அவரது மனதை சிறிது கூட நோகச் செய்யப் பயப்படுவோம்.

கடவுளை நோகச் செய்வது நமது பாவம்.

ஆகவே பாவம் செய்யப் பயப்படுவது தான் இறை பயம்.

தனது தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போது பாவ மாசில்லாமல் உற்பவித்த நமது அன்னை 

தனது வாழ்நாள் முழுவதும் பாவமாசு சிறிது கூட இல்லாமல் வாழ்ந்தாள்.

நமது அன்னைக்கு இறை பயம் (Fear of God) இருந்தது என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

நமது அறிவை ஆன்மீக வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என தெரிந்திருப்பது தான் ஞானம்.

இந்த ஞானம் அன்னை மரியாளிடம் இருந்தது.

ஞானத்துக்கு ஆதாரமான இறை பயமும் அவளிடம் இருந்தது.

தாயைப் போல பிள்ளை இருக்க வேண்டும்.

நம்மிடமும் இறை பயம் இருக்க வேண்டும்,

அதாவது,

பாவம் செய்யப் பயப்பட வேண்டும்.

பாவம் செய்யப் பயப்படுபவர்களுக்குதான் 

தங்கள் இறையறிவை இறைவனது விருப்பத்திற்கு ஏற்ப எப்படி பயன்படுத்துவது என்பது தெரியும்.

பாவம் செய்ய பயப்படுபவர்களிடம் தான் ஞானம் இருக்கும்.

ஆகவே தான் தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம் என்று இறைவாக்கு கூறுகிறது.

இந்த இறைவாக்கை நாம் அறிந்தால் மட்டும் போதுமா?

இதை அறிவதால் மட்டும் நம்மால் மீட்பு பெற முடியுமா?

நிச்சயமாக முடியாது.

அந்த அறிவைப் பயன்படுத்தி,

பாவமே செய்யாமல் நம்மைப் பாதுகாத்துக் கொண்டால்தான் நம்மால் மீட்புப் பெற முடியும்.

சுயமாக தன்னை நாமே பாவமின்றி பாதுகாத்துக் கொள்ள முடியாது.

அதற்கு இறைவனது அருள் வேண்டும்.

இறைவனது அருளை வேண்டி ஒவ்வொரு வினாடியும் ஜெபிக்க வேண்டும்.

இறைவனோடு ஒன்றித்து வாழும் ஜெப வாழ்வுதான் நம்மைப் பாவத்திலிருந்து காப்பாற்றி நமக்கு மீட்பைப் பெற்றுத் தரும்.

இறைவன் அன்பு மயமானவர்.

அவர் நம்மைத் தண்டித்து விடுவாரோ என்ற பயம் தேவையில்லை.

பாவத்தினால் அவரது மனதை நோகச் செய்ய பயப்பட வேண்டும்.

இந்த தெய்வ பயம் தான் நாம் பாவம் செய்யாமல் வாழ வேண்டிய ஞானத்தை நமக்குத் தரும்.

"நமது பாவத்தினால் இறைவனது மனதை நோகச் செய்து விட்டோமே" என்று வருத்தப்படுவதே உத்தம மனஸ்தாபம்.

இறை பயத்தோடும்,
 இறை ஞானத்தோடும் வாழ்வோம்

ஞானம் நிறைந்த கன்னிகையான நமது அன்னையோடு 

அவளது திரு மகனுடன் நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment