(லூக். 23:34)
இறை மகன் உலகில் மனு மகனாகப் பிறந்தது
பாடுகள் பட்டு,
சிலுவையில் அறையப்பட்டு,
மரித்து,
அதன் மூலம் நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.
"உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.
உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்."
(லூக்கா 6:27-29)
என்று போதித்ததை இயேசு வாழ்ந்து காட்டினார்.
அவரைப் பகைத்தவர்கள் அவரது கன்னத்தில் மட்டுமல்ல உச்சி முதல் உள்ளங்கால் வரை அவரை அடித்தார்கள்.
அடிகளை ஏற்றுக்கொண்டார்.
அவரது மேலுடையையும், அங்கியையும் அகற்றி அவரை நிர்வாணமாக்கினார்கள்.
அவர் தடுக்கவில்லை.
சிலுவையில் அறைந்தார்கள்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதே
அவரைச் சபித்தார்கள்.
அவரை இகழ்ந்து பேசினார்கள்.
அவர் அவர்களுக்காக தனது தந்தையிடம் வேண்டினார்.
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை."
தனது அனைத்துப் பாடுகளுக்கும், தனது சிலுவை மரணத்துக்கும் காரணமானவர்களை மன்னிக்கும்படித் தனது தந்தையிடம் வேண்டினார்.
ஒப்புக்காக வேண்டவில்லை.
உண்மையாகவே முழுமனையான மனதுடன்தான் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வேண்டினார்.
அவர் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டதே அவருக்கு விரோதமாக பாவம் செய்தவர்களை மன்னிப்பதற்காகத்தான்.
அதற்காகத்தான் அவரது தந்தையும் அவரை உலகுக்கு அனுப்பினார்.
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்."
(யோவான் 3:16,17)
தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம்,
ஏனெனில் அவர்கள் ஒரே கடவுள்.
இயேசு நினைத்ததைச் சொல்பவர், சொல்பவதைச் செய்பவர்.
ஆகவே அவரைக் காட்டி கொடுத்தவனிலிருந்து,
கடைசி துளி இரத்தம் சிந்தக் காரணமானவன் வரை
அத்தனை பேரையும்
பரிசுத்த தமதிரித்துவக் கடவுள் மன்னித்துவிட்டார் .
கடைசித் துளி இரத்தம் சிந்தக் காரணமாக இருந்தது
நூற்றுவர் தலைவர்.
பிலாத்து இயேசுவை மரணத்துக்கு தீர்வையிட்டபின்
அவரை ரோமை வீரர்களிடம் ஒப்படைத்து விட்டார்.
அவர்கள்தான் அவர் மீது சிலுவையை ஏற்றி கல்வாரி மலைக்கு அழைத்துச் சென்று அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்.
அந்த வீரர்களின் தலைவன் தான் செந்தூரியன் அதாவது நூற்றுவர் தலைவன்.
அவனுக்கு ஒரு கண் தெரியாது.
இயேசுவின் சடலத்தைச் சிலுவையிலிருந்து இறக்குமுன் அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்வதற்காக நூற்றுவர் தலைவன் தன்னுடைய ஈட்டியால் இயேசுவின் விலாவைக் குத்தினார்.
உடனே விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
இரத்தத்தின் ஒரு சொட்டு அவனுடைய குருட்டுக் கண்ணின் மேல் விழுந்தது.
உடனே அவன் பார்வை பெற்றான்.
இயேசு இறந்த பின்பும் தனது புதுமையால் தனது விலாவைக் குத்தியவன் கண்ணுக்குப் பார்வை கொடுத்து
தனக்குத் தீமை செய்தவனுக்கு நன்மை செய்தார்.
தன்னுடைய படை வீரர்களோடு இயேசுவின் சிலுவைப் பாதையை வழி நடத்திய நூற்றுவர் தலைவனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்பதற்கு
அவனது கண்கள் குணமடைந்தது ஒரு ஆதாரம்.
இயேசுவின் பொது வாழ்வின் போது அவரது கப்பர்நாகும் இல்லத்தில் முடக்குவாதமுற்றவனைக் குணமாக்கும் முன்
அவனிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"
என்று கூறியதை நினைவில் கொள்வோம்.
நூற்றுவர் தலைவன்
"இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
(லூக். 23:47)
அவர் மட்டுமல்ல அவரோடிருந்து
இயேசுவைக் காவல் காத்தவர்களும்
"இவர் உண்மையாகவே இறைமகன்" என்றார்கள்.
(மத். 27:54)
பாவங்கள் மன்னிக்கப்பட்ட நூற்றுவர் தலைவன் மனந்திரும்பி, கிறிஸ்தவராக மாறி, இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்.
அவர் புனிதராக மாறினார்.
அவரது (Saint Longinus)திருவிழா நமது கத்தோலிக்கத் திருச்சபையில் March 15ல் கொண்டாடப்படுகிறது.
இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸிலிருந்து,
மறை நூல் அறிஞர்கள், பரிசேயர்கள் உட்பட
அவர் இறந்த பின்பும் அவரது விலாவை ஈட்டியா குத்திய நூற்றுவர் தலைவன் Longinus வரை
அனைவரது பாவங்களையும் பரம தந்தை மன்னித்துவிட்டார் என்பதற்கு இயேசுவின் வேண்டுதலே ஆதாரம்.
இயேசு "தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை'' என்று சொல்கிறார்.
இயேசுவின் விரோதிகள் செய்தது கடவுள் கொலை. (Deicide)
மனிதர்கள் செய்யக்கூடிய பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம்.
ஆனால் இயேசுவைக் கொலை செய்யும்படி வற்புருத்திய யூத மதப் பெரியவர்களுக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இல்லை.
அவரை இறைமகன் என்றோ, மெசியா என்றோ அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மக்கள் அவரை மெசியா என்று ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
இதனால் தங்கள் செல்வாக்குக்கும், அதிகாரத்துக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து தான் அவரை கொலை செய்து விட திட்டம் போட்டார்கள்.
அதனால் தான் இயேசு
"அப்பா, அவர்கள் என்னை சிலுவையில் அறைந்தது மிகப்பெரிய பாவம் தான்.
ஆனாலும், ஐயோ பாவம், அவர்கள் அறியாமல் செய்துவிட்டார்கள்.
அவர்களை மன்னியுங்கள்."
என்று தனது தந்தையை நோக்கி வேண்டுகிறார்.
இன்னொன்றும் அவர்களுக்குத் தெரியாது.
தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமலேயே இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய அவருக்கு உதவியிருக்கிறார்கள்.
அவர்கள் செய்தது தீமை. ஆனால் அதிலிருந்து தான் நமக்கு மீட்பு என்ற மிகப்பெரிய நன்மையை இயேசு வரவழைத்திருக்கிறார்.
உலகினரின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய உலகில் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்று கடவுள் நித்திய காலமாக திட்டமிட்ட போதே
யூத மதத் தலைவர்கள் தன்னைக் கொல்வார்கள் என்று அவருக்குத் தெரியும்.
கடவுளின் ஞானம் அளவு கடந்தது.
தனது ஞானத்தினால் யூத மதத் தலைவர்களின் செயல்பாட்டைப் பற்றி அறிந்த உண்மையை
தனது மீட்பின் திட்டத்திற்கு இயேசு பயன்படுத்திக் கொண்டார்.
அவரது அன்பும், இரக்கமும், மன்னிக்கும் குணமும் அளவு கடந்தவை.
ஆகவேதான் தனது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது இரக்கப்பட்டு அவர்களை மன்னித்தார்.
இயேசு பட்ட பாடுகளின் பலனை நாமும் பெறுவோம்.
இரக்கமுள்ள விண்ணகத் தந்தையிடம் நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்போம்.
பாவத்தில் விழாதபடி நம்மைக் காப்பாற்ற வேண்டிய அருளையும் கேட்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment