"அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். "
(மத்தேயு 5:24)
நல்லுறவு = சமாதானம்.
இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைத்த போது
அவருக்கும் அவர்களுக்கும் இடையே நல்லுறவு, அதாவது, சமாதானம் நிலவியது.
ஆனால் அவர்கள் விலக்கப்பட்ட கனியைத் தின்று பாவம் செய்ததால் அவர்கள் அவரோடு கொண்டிருந்த உறவு முறிந்தது.
அதாவது
அவர்களுக்கு அவர் மேல் மனத்தாங்கல் ஏற்பட்டது.
ஆனால் கடவுள் மாறாதவர்.
அவர் அவர்களோடு கொண்டிருந்த உறவு முறியவில்லை.
அவர் அவர்களைப் படைத்த போது எப்படி நேசித்தாரோ அப்படியே தொடர்ந்து நேசித்தார்.
அவர்கள் முறித்த நல்லுறவை மீண்டும் ஏற்படுத்த
அவர்களைப் போல் மனுவுரு எடுத்து அவர்களைத் தேடி உலகுக்கு வந்தார்.
நல்லுறவை மீண்டும் ஏற்படுத்துவதற்காக
தனது பாடுகள் மூலமும், சிலுவை மரணத்தின் மூலமும்
அவர்களது பாவத்துக்கு அவரே பரிகாரம் செய்தார்.
அவரது சிலுவை மரணத்தின் பலனாகிய பாவ மன்னிப்பை
ஞானஸ்நானத்தின் மூலமும், பாவ சங்கீர்த்தனத்தின் மூலமும் நாம் பெறுகிறோம்.
கடவுளை நாம் நேசிப்பது போலவே நமது அயலானையும் நாம் நேசிக்க வேண்டுமென்பது அவரது கட்டளை.
அதாவது நமக்கும் நமது அயலானுக்குமிடையே நல்லுறவு, அதாவது சமாதானம் நிலவ வேண்டும்.
நமது அயலானுக்கு நம்மீது மனத்தாங்கல் ஏற்பட்டிருப்பதாக நாம் அறிந்தால்
நாமே அவனைத் தேடிச் சென்று சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்விசயத்தில் நாம் கடவுளைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
கடவுள் நமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.
நாம்தான் அவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
ஆனால் அவர்தான் நம்மைத் தேடி வந்தார்.
அதேபோல
நமக்கு நமது அயலான்மீது மனத்தாங்கல் எதுவும் இல்லாவிட்டாலும்,
அவனுக்கு நம்மீது மனத்தாங்கல் இருப்பதாகத் தெரிந்தால்
நாமே அவனைத் தேடிச் சென்று நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது அயலானோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்ட பிறகு தான் கோயிலில் நமது காணிக்கையைச் செலுத்த வேண்டும்.
"ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். "
(மத்தேயு 5:23,24)
என்று இயேசு சொல்கிறார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணவர்கள் பாடிய கீதம்,
"விண்ணுலகில் இறைவனுக்கு மகிமை,
மண்ணுலகில் நல்மனதோர்க்குச் சமாதானம்."
விண்ணுலகில் இறைவன் நித்திய காலமாக மகிமையோடுதான் வாழ்கிறார்.
அவர் அளவில்லாத மகிமையுள்ளவர்.
அவருடைய மகிமையை நம்மால் கூட்டவோ குறைக்கவோ முடியாது.
அவரது மகிமைக்காக நாம் செயல் புரியும் போது பயனடைவது நாம் தான், அவரல்ல.
அளவில்லாத மகிமையை எப்படிக் கூட்ட முடியும்?
அவரது அதிமிக மகிமைக்காக நாம் வாழ்ந்தால் நமது விண்ணகப் பேரின்பத்தின் அளவு அதிகரிக்கும்.
நமது செயல்களின் தன்மையால் நேரடியாகப் பயன் பெறப் போவதோ,
எதிர்மறையாகப் பாதிக்கப் படப்போவதோ நாம் தான்.
லூசிபரும் அவனது சகாக்களும் இறைவனை எதிர்த்த போது இழந்தவர்கள் அவர்கள் தான்.
பூவுலகில் நாம் நல்மனதுடன் வாழ்ந்தால் நமக்கு இறைவனோடு சமாதானம் ஏற்படும்.
சமாதானத்திற்கான சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.
நல்மனதின் தரத்திற்கேற்ப நமது பேரின்பத்தின் அளவும் இருக்கும்.
விண்ணுலகில் மனிதர்களுள் மிக அதிகமான பேரின்பத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது நமது அருள் நிறைந்த அன்னை மரியாள் தான்.
இறைவனின் பேரின்பம் அளவில்லாதது.
இறைவனின் அன்பு தன்னலமற்றது.
அவர் நினைப்பதும், செயல் புரிவதும் நமது நன்மைக்காக மட்டுமே.
நம்மை நித்திய மரணத்திலிருந்து காப்பாற்றவே அவர் சிலுவையில் மரணம் அடைந்தார்.
நம்மை நித்திய வேதனையிலிருந்து காப்பாற்றவே அவர் பாடுகளின் வேதனையை ஏற்றுக் கொண்டார்.
அவர் நமக்குச் செய்தது போல நாம் நமது அயலானுக்குச் செய்ய வேண்டும்.
நாம் உண்ணா நோன்பிருந்து நமது அயலானுக்கு உணவு கொடுக்க வேண்டும்.
நாம் நடந்து சென்றாவது நடக்க முடியாத நமது அயலானுக்கு உதவ வேண்டும்.
நம்மிடம் உயர்ந்த விலைக்கு உடை வாங்க பணம் இருந்தாலும்,
நமக்குக் குறைந்த விலைக்கு உடை வாங்கிக் கொண்டு அயலானுக்கும் உடை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
இயேசு நமக்காகத் தியாகம் செய்தார்.
நாம் நமது அயலானுக்காகத் தியாகம் செய்யும் போது இயேசுவுக்காகவே தியாகம் செய்கிறோம்.
நாம் நமது அயலானுக்கு என்ன செய்தாலும் அதை இயேசுவுக்காகவே செய்கிறோம்.
அயலானோடு சமாதானமாக வாழ்ந்தால் இயேசுவோடே சமாதானமாக வாழ்கிறோம்.
பாவமில்லாத நல்ல மனதுடன் சமாதானமாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment