Tuesday, February 20, 2024

விண்ணகத் தந்தையிடம் நாம் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள்.

விண்ணகத் தந்தையிடம் நாம் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள்.

கர்த்தர் கற்பித்த செபத்தின் முதல் பகுதியில் விண்ணகத் தந்தையைப் புகழ்ந்து விட்டு,

இரண்டாம் பகுதியில் பிள்ளைகளுக்குரிய பாசத்தோடு நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம்.

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்."

என்று தந்தையிடம் கேட்க வேண்டும் என்று இயேசு சொல்கிறார்.

 ,
 "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது" என்ற இயேசுவின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றன. (மத். 19:14)

குழந்தை பிறந்தவுடன் முதலில் தேடுவது தாய்ப்பாலைத்தான்.

குழந்தை அழுதவுடன் தாய் அதற்குப் பால் கொடுக்கிறாள்.

வயிறு நிறைந்தவுடன் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது.

திரும்ப பசிக்கும்போது தான் அழுகிறது.

நாள் முழுவதற்குமான பாலை குழந்தை ஒரே நேரத்தில் குடித்து விடுவதில்லை.

குழந்தை வளர்ந்து சிறியவன் ஆகும்போது கூட தனக்கு வேண்டியதைப் பெற்றோரிடம் கேட்கும் விசயத்தில் இதே நிலையைத்தான் குழந்தை கடைப்பிடிக்கிறது.

அப்பப்போதைக்கு வேண்டியதை அப்பப்போது கேட்கிறது.

அன்றன்றைக்கு வேண்டியதை அன்றன்றைக்குக் கேட்கிறது.

வருடம் முழுவதற்கும் வேண்டியதை ஒரே நேரத்தில் கேட்பதில்லை.

தனக்கு ஆண்டு முழுவதற்கும் தேவையானது பெற்றோரிடம் இருக்கிறது என்று அதற்குத் தெரியும்.

நாமும் நமக்கு வேண்டியதைத் தந்தையிடம் கேட்கும் விசயத்தில் இதே நிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

அதனால் தான் "எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்." என்று தந்தையிடம் கேட்கச் சொல்கிறார்.

நாளைக்கு வேண்டியதை நாளைக்குக் கேட்டால் 

பெற்றோரிடம் இருக்குமோ இருக்காதோ என்று சந்தேகப்படுகிறவர்கள் தான்

 நாளைக்கு வேண்டியதை இன்றே கேட்பார்கள்.

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பெற்றோர் மீது சந்தேகமே வராது.

கடவுளின் பராமரிப்பின் மீது முழு நம்பிக்கை உள்ளவர்கள் அன்றாட உணவைத்தான் கேட்பார்கள்.

வருடம் முழுவதற்குமான உணவைச் சேமித்து வைக்கிறவனுக்கு கடவுளின் பராமரிப்பின் மீது நம்பிக்கை இல்லை.


உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. 

வானத்துப் பறவைகளையும், 
காட்டுமலர்ச் செடிகளையும்    
பராமரித்து வரும் கடவுள் 

அவரது சாயலில் படைக்கப்பட்ட நம்மைப் பராமரிக்க மாட்டாரா?


" அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.

 அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்." ( மத். 6:33)

என்று இயேசுவே கூறியிருக்கிறார்.

உணவை மட்டுமல்ல, நமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையுமே கடவுள் தருவார்,

நாம் அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடினால்.

"எங்களுக்குத் தீமை செய்தோரை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களை பொறுத்தருளும்."

என்று விண்ணப்பிக்கிறோம்.

இயேசு மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, மரித்ததே நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.

நாம் இயேசுவின் சீடர்களாக வாழ வேண்டுமென்றால் நாம் நமக்கு விரோதமாக குற்றங்கள் புரியும் நமது அயலானை மன்னிக்க வேண்டும்.

"நாங்கள் எங்கள் அயலானை மன்னிப்பது போல எங்களை மன்னியும்" என்று தந்தையிடம் கேட்கிறோம்.

மன்னிக்கப் பிறந்தவர் கிறிஸ்து.
மன்னித்து வாழ்பவன்தான் கிறிஸ்தவன்.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்" என்று செபிக்கிறோம்.

சோதனைகள் வருவதைத் தவிர்க்க முடியாது.

இயேசுவே மூன்று முறை சோதிக்கப் பட்டார்.

சோதனைகளை வெல்வதற்கான அருள் வரத்தை தந்தையிடம் கேட்கிறோம்.

இவ்விசயத்தில் நாம் தந்தையுடன் ஒத்துழைக்க வேண்டும்.

நாம் சோதனைக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

"சோதனையில் விழ விடாதேயும்" என்று கூறிக் கொண்டு 

பாவ சந்தர்ப்பங்களைத் தேடிப் போகக்கூடாது.

குடியிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமானால் குடிகாரர்களின் உறவைத் தவிர்க்க வேண்டும்.

"தீமையினின்று எங்களை இரட்சித்தருளும்." என்று விண்ணப்பிக்கிறோம்.

தீமை என்றால் பாவம்.

நாம் பாவத்தில் விழாதபடி நம்மைக் காக்கும் படி தந்தையிடம்
வேண்டுகிறோம்.

பாவ நாட்டத்திலிருந்து நாம் விடுபட வேண்டுமானால் 

புண்ணியத்தை நாட வேண்டும்.

தற்பெருமை என்னும் பாவத்தில் விழாமலிருக்க வேண்டுமானால் 

தாழ்ச்சியோடு வாழ வேண்டும்.

விலக்கப்பட வேண்டிய தலையான பாவங்கள் 

1. அகங்காரம் 
2. கோபம் 
3. மோகம் 
4. லோபித்தனம் 
5. போசனப்பிரியம் 
6. காய்மகாரம் 
7. சோம்பல்.

வாழ வேண்டிய தலையான புண்ணியங்கள்.

1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. உதாரம் 
5. மட்டசனம் 
6. பிறர்சிநேகம் 
7. சுறுசுறுப்பு.

புண்ணியங்களை வாழ்வோம்,
பாவங்கள் நெருங்காது.

செபம் என்றாலே இறைவனோடு ஒன்றித்து வாழ்வதுதான்.

கர்த்தர் கற்பித்த செபத்தை வாழ்வோம்.

விண்ணகத்தில் வாழும் தந்தையோடு நித்திய காலம் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment