(மத்தேயு 5:48)
நமது விண்ணகத் தந்தை அவரது எல்லா பண்புகளிலும் நிறைவானவர்.
அளவில்லாத அன்பு,
அளவில்லாத நீதி,
அளவில்லாத ஞானம்,
அளவில்லாத. வல்லமை etcetera.
பண்புகளில் அளவில்லாத அவர் சர்வ வியாபி, எங்கும் நிறைந்தவர்.
நித்தியர், துவக்கமும், முடிவும் இல்லாதவர்.
அவரால் படைக்கப்பட்ட நாம் அளவுள்ளவர்கள்.
காலத்துக்கும், இடத்துக்கும் உட்பட்டவர்கள்.
ஆனால் நமது விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று நமது ஆண்டவராகிய இயேசு விரும்புகிறார்.
இயேசு இறை மகன்.
விண்ணகத் தந்தையின் ஒரே மகன்.
நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள், பெறப்பட்டவர்கள் அல்ல.
ஆனால் தனது தந்தையை
"உங்கள் விண்ணகத் தந்தை" இயேசு சொல்கிறார்.
அவருடன் பிறக்காத,
அவரால் படைக்கப்பட்ட நம்மைத் தனது சகோதரர்களாக ஏற்றுக் கொள்கிறார்.
அளவில்லாத அவருக்கு நாம் அளவுள்ளவர்கள் என்று தெரியும்.
நிறைவான அவருக்கு நாம் குறைவானவர்கள் என்று தெரியும்.
ஆனால் "உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
என்று அவர் சொல்கிறார்.
நம்மைப் பற்றிய இயேசுவின் ஆசைக்குக் காரணம் நம்மேல் அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பு,
அளவுள்ள நம்மேல் அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பு.
நம்மேல் அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாக
அவர் அளவுள்ள நம்மைப்போல் அளவுள்ள மனிதனாகப் பிறக்க ஆசைப்படுகிறார்.
இறைமகன் பரிசுத்த தம் திரித்துவத்தின் இரண்டாம் ஆள்.
நித்திய காலமுதல் அவரிடம் இருந்தது தேவ சுபாவம்.
நம்மீது அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாக மனித சுபாவத்தையும் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறார்.
அந்த ஆசையின் காரணமாக மனிதப் பிறவியான மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுக்கிறார்.
மனுவுரு எடுத்த நொடி முதல் இறை மகனுக்கு இரண்டு சுபாவங்கள்,
தேவ சுபாவம்,
மனித சுபாவம்.
ஆள் ஒன்று, சுபாவங்கள் இரண்டு.
தேவ ஆளாகிய இயேசு
முழுமையான கடவுளாகவும்,
முழுமையான மனிதனாகவும்
இருக்கிறார்.
Jesus is fully God and fully Man.
அளவுள்ள நம்மீது அவர் கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக
அளவில்லாத அவர் பிறப்பும், இறப்பும் உள்ள அளவுள்ள மனிதனாகப் பிறந்தார்.
பாவம் தவிர நம்முடைய மற்ற குறைகளை எல்லாம் தனது குறைகளாக ஏற்றுக் கொண்டார்.
துன்பமே பட முடியாத அவர் துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.
நிறைவான அவர் குறைவான மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.
இது அவரால் முடியும், ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.
ஆனால் நம்மால் எப்படி விண்ணகத் தந்தையைப் போல் நிறைவுள்ளவர்களாய் இருக்க முடியும்?
குறைவு எப்படி நிறைவாக இருக்க முடியும்?
நாம் அளவுள்ளவர்கள்.
ஆனால் நமக்கு அறிவுரை கூறுபவர் அளவில்லாதவர்.
ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மைப் படைத்த அவரால்
அவரது விருப்பப்படி நம்மை இருக்கச் செய்ய முடியாதா?
முடியும்.
நிறைவான அவர் ஏன் குறைவான மனிதனாகப் பிறந்தார்?
அவருக்கு எதிராகத் தீமை செய்தவர்களை அவர் அன்பு செய்ததால்.
நாமும் அதையே செய்தால் நம்மால் அவரது விருப்பப்படி இருக்க முடியும்.
"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்;
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்;
உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
"இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.
ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்.
நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். "
(மத். 5:44,45)
இது தான் அவர் காட்டும் வழி.
தாயைப் போல பிள்ளை.
நாம் விண்ணகத் தந்தையின் மக்களாக வேண்டுமென்றால்
நமது பகைவரிடமும் அன்பு கூரவேண்டும்.
நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்.
தந்தை நல்லோரையும் தீயோரையும்
நேர்மையுள்ளோரையும் நேர்மையற்றோரையும் நேசிப்பது போல
நாமும் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
நல்லோரையும், நேர்மையுள்ளோரையும் நேசிப்பது எளிது.
ஆனால் தீயோரையும், நேர்மையற்றோரையும் நேசிப்பது நமது இயல்புக்கு எதிரானது.
ஆனால் நமது விண்ணகத் தந்தைக்கு அது இயல்பானது.
நாம் தீயோரையும் நேர்மையற்றோரையும் நேசிக்க ஆரம்பித்தால் விண்ணகத்
தந்தையின் இயல்பில் பங்கு பெறுகிறோம்.
நஞ பகைவரிடமும் அன்பு கூர்ந்து, நம்மைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டும்போது,
"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
என்ற நமது ஆண்டவர் இயேசுவின் ஆசையை நிறைவேற்றுகிறோம்.
இயேசு அவருக்கு விரோதமாக பாவம் செய்த நம்மை நேசிப்பது போல
பகைமை உணர்வுடன் நமக்கு விரோதமாக செயல்படுபவர்களை நாம் நேசிப்போம்.
அப்படி செயல்படும்போது நாம் இயேசுவைப் போலாகிறோம்.
இயேசுவும், தந்தையும் ஒரே கடவுள் தானே.
இயேசுவைப் போலாகும் போது தந்தையைப் போலவும் ஆகிறோம்.
கடவுள் அவரைப் பகைப்பவர்களை நேசித்து அவர்களுக்கு நன்மை செய்வது போல
நாமும் நம்மைப் பகைப்பவர்களை நேசித்து அவர்களுக்கு நன்மை செய்வோம்.
நமது பகைவர்களை நேசித்து அவர்களுக்கு நன்மை செய்வதன் மூலம்
இயேசுவின் விருப்பப்படி
விண்ணகத் தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment