Monday, February 26, 2024

"உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்."(மத்தேயு. 23:11)/

" உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்."
(மத்தேயு. 23:11)

விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்தவர் இயேசு.

அவரது போதனைகள் விண்ணைச் சார்ந்தவை.

அவரது போதனைகள் மண்ணைச் சார்ந்தவையாக இருந்தால் அவற்றால் விண்ணுக்கு வழி காட்ட முடியாது.

ஆகவே அவரது போதனைகள் மண்ணைச் சார்ந்த போதனைகளுக்கு நேர் எதிரானவை.

மண்ணக எண்ணப்படி பெரியவனாக இருப்பவன்

விண்ணக எண்ணப்படி சிறியவன்.

மண்ணக எண்ணப்படி சிறியவனாக இருப்பவன்

விண்ணக எண்ணப்படி பெரியவன்.

விண்ணகத்தில் பெரியவனாக இருக்க விரும்புகிறவன்

மண்ணகத்தில் தொண்டனாக இருக்க வேண்டும்.

ம. தொண்டன் = வி. பெரியவன்.

" தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். "
(மத்தேயு . 23:12)

அதாவது

பூமியில் தம்மைத்தாமே உயர்த்துகிறவர் மோட்சத்தில் தாழ்த்தப்பெறுவர்.

பூமியில் தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் மோட்சத்தில் உயர்த்தப்பெறுவர்.

அன்னை மரியாளே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மரியாள் பூமியில் தன்னைத்தானே அடிமையாகத் தாழ்த்தினார்.

மோட்சத்தில் அரசியாக உயர்த்தப் பட்டாள்.

பிதா பிதாக்களின் அரசியே,
தீர்க்கத்தரிசிகளின் அரசியே,
அப்போஸ்தலர்களின் அரசியே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்,

என்று தினமும் அவளை நோக்கி செபிக்கிறோம்.

விண்ணில் வாழும்
மறைசாட்சிகளுக்கும்
துதியர்களுக்கும்
கன்னியர்களுக்கும்
சகல புனிதர்களுக்கும்

மட்டுமல்ல,

விண்ணுக்காக மண்ணில் வாழும் நமக்கும் அவள்தான் அரசி.


விண்ணக, மண்ணக அரசி.

நாம் விண்ணுக்காக வாழ்கிறோமா, மண்ணுக்காக வாழ்கிறோமா?

மண்ணுக்காக வாழ்ந்தால் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் மண்ணைச் சார்ந்தவையாகவே இருக்கும்.

விண்ணுக்காக வாழ்ந்தால் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் விண்ணைச் சார்ந்தவையாகவே இருக்கும்.

மண்ணுலக வாழ்வு தற்காலிகமானது.

மண்ணுக்காக நாம் ஈட்டும் அனைத்தும் தற்காலிகமானவையே.

தற்காலிகமான நமது வாழ்வின் முடிவில் நாம் மண்ணுக்காக ஈட்டிய அனைத்தும் நம் கையை விட்டுப் போய் விடும்.

விண்ணுலக வாழ்வு நிரந்தரமானது, அழியாதது.

அதற்காக நாம் மண்ணுலகில் ஈட்டும் அருட் செல்வம் அழியாதது.

தற்காலிகமான இவ்வுலக வாழ்வு முடிந்து நாம் விண்ணுலகுக்குள் நுழையும் போது நாம் ஈட்டிய அருட்செல்வம் அனைத்தும் நம்முடன் வந்து,

நித்திய காலமும் நம்மோடிருக்கும்.

இவ்வுலக வாழ்வின் போது அழியாத அருட்செல்வத்துக்காக உழைக்க வேண்டுமா?

அழிந்து போகும் பொருட்செல்வத்துக்காக உழைக்க வேண்டுமா?

சிந்தித்துப்போம், செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment