"ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்."
(அருளப்பர் நற்செய்தி 5:13)
பெத்சதாக் குளக் கரையில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமின்றி படுத்ருந்த ஒருவருக்கு இயேசு யார் என்றே தெரியாது.
அவருக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இருந்திருக்காது.
தெரியாத ஒருவரை எப்படி விசுவசிக்க முடியும்?
ஆனாலும் அவர் கேளாமலேயே இயேசுவே முன் வந்து அவரை விசாரித்து குணமாக்குகிறார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
மக்களில் அநேகருக்கு கடவுளைப் பற்றி தெரியாவிட்டாலும் கடவுளுக்கு உலகிலுள்ள அனைவரைப் பற்றியும் தெரியும்.
ஏனெனில் அனைவரையும் படைத்தவர் அவர்.
தன்னை அறிந்து விசுவசிப்பவர்களுக்கு மட்டுமல்ல
விசுவசியாதவர்களுக்கும் கடவுள் உதவி செய்கிறார்.
உலகில் நடைபெறும் அத்தனை நன்மைகளுக்கும் காரணம் அவரே.
சுகமில்லாதவர்கள் சுகம் பெற மருத்துவ மனைக்குச் செல்கிறார்கள்.
மருந்து கொடுப்பது மருத்துவராக இருக்கலாம்.
குணமளிப்பவர் கடவுளே.
குணமாகாவிட்டால்?
அதுவும் கடவுள் சித்தம்தான்.
அவர் சித்தமின்றி அணுவும் அசையாது.
அதனால் என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
நீண்ட நாள் நோயாளி குணமானதை இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கலாம்.
" இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, "இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்" என்றார்."
அவர் பாவம் செய்யக் கூடாது என்று அவருக்குப் புத்திமதி சொல்லும் நோக்கத்தோடு தான் இயேசு அவரைக் குணமாக்கியிருக்கிறார்.
அவர் நோயில் விழுந்தது கூட கடவுளின் திட்டமாக இருக்கலாம்.
அவரைப் பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திருப்புவதற்காக அவருக்கு நீண்ட கால நோயைக் கொடுத்திருக்கலாம்.,
பின் அவரைக் குணமாக்கி, புத்திமதி சொல்லி,
அவரை நல்லவராக வாழ வைத்திருக்கலாம்.
நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நாம் கடவுளைத் தேட வைப்பதற்காக அவர் போடும் திட்டமாகத்தான் இருக்கும்.
நமக்கு துன்பம் எதுவும் வராவிட்டால் நாம் நம்மைப் படைத்தவரை மறக்க நேரிடலாம்.
அவரை மறக்காமலிருக்கவே அவர் நமக்குத் துன்பங்களை அனுமதிக்கலாம்.
எதையும் கடவுளின் கண்ணோக்கிலிருந்து பார்க்க வேண்டும்.
கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒருவர் பைக்கில் போகும்போது பைக் சறுக்கிக் கீழே விழுந்து விட்டார்.
விழும்போது அவர் வாயிலிருந்து அவரே அறியாமல் வந்த வார்த்தை, "கடவுளே!"
நாம் மறந்தாலும் கடவுள் நம்மை மறக்க மாட்டார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment