"அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்."
(மத்தேயு நற்செய்தி 1:20)
நான் வாசித்த பைபிள் வசனங்களில் புரிந்து கொள்ள மிகவும் கடினமான வசனம் இதுதான்.
மரியாள் கோவிலில் வளரும் போதே கற்பு வார்த்தைப்பாடு கொடுத்து விட்டாள்.
கோவில் குரு அவளது கற்புக்குப் பாதுகாவலாக இருக்கக் கூடிய கணவனாக யோசேப்பை பரிசுத்த ஆவியின் உதவியுடன் தேர்ந்தெடுத்தார்.
யோசேப்பும் திருமண ஒப்பந்தத்தின் போதே மரியாளின் கற்புக்குப் பாதுகாவலாக இருப்பதாக வாக்களித்தார்.
யோசேப்பு தன் தொழில் காரணமாக வெளியூருக்குச் சென்றிருந்த போது கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி இறைவனின் திட்டத்தை வெளிப்படுத்தினார்.
மரியாள் இறைவனின் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் அவளது கற்புக்கு எந்த வித பாதிப்பும் இன்றி பரிசுத்த ஆவியின் வல்லமையால் இயேசுவைக் கருவுற்றாள்.
இந்த நிகழ்வு யோசேப்புக்குத் தெரியாது.
மரியாளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
யூத மதச் சட்டப்படி கணவனுக்குத் தெரியாமல் ஒரு பெண் கருவுற்றால் அவள் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.
வேலை முடிந்து வீடு திரும்பிய யோசேப்புக்கு மரியாள் கருத்தரித்திருப்பது தெரிய வந்தது.
அவர் அதிர்ச்சி அடைந்தார்.
யோசேப்பு சாதாரண மனிதராக இருந்திருந்தால் விபரத்தை விசாரணைக்கு கொண்டு வந்திருப்பார்.
ஆனால் அவர் நேர்மையாளர்.
பிறர் மனதை புண்படுத்த விரும்பாதவர்.
தன்னால் தன் மனைவிக்கு எந்த வித பாதிப்பும் வந்து வரக்கூடாது என்று எண்ணினார்.
நற்செய்தியாளர் கூற்றுப்படி,
"அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்."
இந்த வசனத்தை இன்றைய தியானத்துக்கு எடுத்துக் கொள்வோம்.
முதலில் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
யோசேப்பு நேர்மையாளர் என்பது புரிகிறது.
அவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை என்பதும் புரிகிறது.
நேர்மையாளருடைய குணம் அது.
"மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்."
அதாவது யாருக்கும் தெரியாமல், இரகசியமாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அகராதிப்படி பொருள் பார்த்தால் இவ்வாக்கியம் புரியாது.
மரியாளை விலக்கி விட்டால் அவள் அவளது பெற்றோர் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இரகசியமாக இதைச் செய்ய முடியாது.
அல்லது யோசேப்பு விலகிச் செல்ல வேண்டியிருக்கும்.
இதையும் இரகசியமாக இதைச் செய்ய முடியாது.
இரண்டிலும் மரியாளின் பெயருக்கு பழுது ஏற்படும்.
அவர் எடுக்கும் முடிவு அவரது நேர்மைத் தன்மைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
அவர் நேர்மையாளர் என்பதை அடிப்படையாகக் கொண்டு வசனத்துக்குப் பொருள் காண ஒரு வழிதான் இருக்கிறது.
அவர்களுக்கு திருமண ஒப்பந்தம் தான் (நமது மொழியில் "நிச்சயதார்த்தம்") ஆகியிருந்தது.
யூத வழக்கப்படி திருமண ஒப்பந்தம் ஆன ஒரு வருட காலத்தில் திருமணம் நடைபெற வேண்டும்.
திருமண வாழ்க்கை திருமணம் ஆன பிறகுதான்.
"ஆகவே வேறு யாருக்கும் தெரியாமல், மரியாளின் சம்மதத்தோடு, மனைவி உறவை விலக்கி விட்டு சகோதரியாக ஏற்று, குழந்தைக்குத் தாய் மாமனாக வாழத் திட்டமிட்டார்."
இது என் மனதில் தோன்றிய விளக்கம்.
அவர்கள் வாழப் போகும் ஊரில் உலகோர் கண்களுக்கு அவர்கள் கணவன், மனைவி.
(ஏற்கனவே திருமண ஒப்பந்தத்தின் போதே திருமண உறவு இல்லாமல் இருவரும் கற்புடன் வாழத்தான் தீர்மானித்திருந்தார்கள்)
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே தூங்கி விட்டார். ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்"; என்றார்.
யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
(மத்தேயு நற்செய்தி 1:21,22,24)
தூதரின் அறிவுரைக்குப் பின் யோசேப்பு தன் முடிவை மாற்றி,
மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
ஆயினும் வாழ்க்கை முழுவதும் சகோதர, சகோதரியாகவே வாழ்ந்தார்கள்.
அன்னை மரியாள்
கருவுறும் போதும் கன்னி.
குழந்தைப் பேற்றின் போதும் கன்னி.
குழந்தை பிறந்த பின்னும் கன்னி.
பெண்களுள் பிரசவ வேதனை சிறிதும் இல்லாமல் குழந்தையைப் பெற்ற ஒரே பெண் கன்னி மரியாள் தான்.
இயேசு மற்ற குழந்தைகள் பிறப்பது போல பிறக்கவில்லை.
ஒளி எவ்வாறு கண்ணாடியைச் சிறிதும் பாதிக்காமல் அதன் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் ஊடுருவிச் செல்கிறதோ,
அதேபோல,
குழந்தை இயேசுவும் தாயின் கன்னித் தன்மைக்கு சிறிதும் பழுது ஏற்படாமல் தாய் வயிற்றிலிருந்து பிறந்தார்.
புனித யோசேப்பிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?
அவர் நூற்றுக்கு நூறு கடவுள் சித்தப்படி வாழ்ந்த நீதிமான்.
கடவுளின் கட்டளைகளுக்கு விளக்கம் கேட்காமல் கீழ்ப்படிந்தவர்.
அவர் ஒரு வார்த்தை கூட பேசியதாகப் பைபிளில் இல்லை.
பேசாமல் கீழ்ப்படிந்தவர்.
அவரது கீழ்ப்படிதலுக்குச் சன்மானமாக இறை மகனின் மடியில் தலை வைத்து மரிக்கும் பாக்கியம் பெற்றவர்.
நல்மரணத்தின் பாதுகாவலர்.
புனித யோசேப்பைப் போலவே நாமும் இறைச் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து வாழ இறையருளைக் கேட்டு வேண்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment