எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
(மத்தேயு நற்செய்தி 21:43)
இயேசுவின் இறையாட்சி இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரியது.
உலகில் இறையாட்சியை நிறுவ மனிதனாக பிறக்க தீர்மானித்த இறைமகன் தான் பிறப்பதற்கென்று ஒரு வம்சத்தை தேர்ந்தெடுத்தார்.
அபிரகாமின் பேரனும், ஈராக்கின் மகனுமாகிய யாக்கோபு இஸ்ரேல் என்றும் அழைக்கப் பட்டார்.
அவரது பன்னிரண்டு மக்களின் வம்சத்தினர் இஸ்ரயேலர்கள்.
தான் மனிதனாகப் பிறக்க வேண்டிய வம்சமாக இஸ்ரேல் வம்சத்தை இறைமகன் தேர்ந்தெடுத்தார்.
இஸ்ரேல் வம்சத்தில் யூதாவின் கோத்திரத்தைத் தேர்வு செய்தார்.
தான் நிறுவவிருக்கும் இறையாட்சி அனைத்து மக்களுக்கும் உரியது என்பதற்கு முன் அடையாளமாக
அவருடைய மூதாதையர் பட்டியலில் இஸ்ரேல் இனத்தைச் சாராத இரண்டு பெண்மணிகளுக்கு இடம் கொடுத்தார்.
ராகாப்: இவர் எரிகோ நகரைச் சேர்ந்த கானானியப் பெண்.
இவர் திருமணத்துக்கு முன் விலை மாதமாக இருந்தவள்.
மனம் திருந்திய பின் ஒரு யூத ஆண் மகனை கணவனாக மணந்து கொண்டாள்.
இயேசு பாவிகளை நேசிப்பதற்கு அடையாளமாக தனது மூதாதையர் பட்டியலில் ராகாப்பைச் சேர்த்துக்கொண்டார்.
ரூத்: இவர் மோவாபியப் பெண்.
லோத்தின் மகனாகிய மோவாப்பின் வழி வந்தவர்.
ரூத்தின் வம்சத்தில்தான் தாவீது பிறந்தார்.
தாவீதின் வம்சத்தில் இயேசு பிறந்தார்.
இயேசு யூதாவின் கோத்திரத்தில் பிறந்த யூதர்.
யூதர்களும் இஸ்ரயேலர்கள்தான்.
இஸ்ரயேலர்கள் மோசே மூலம் கடவுள் கொடுத்த திருச் சட்டத்தின் படி வாழ்ந்து வந்தார்கள்.
மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் யூத மக்களுக்கு சட்டப்படி வாழ்வதற்கான வழி காட்டி வந்தார்கள்.
ஆனால் அவர்கள் வழி காட்ட மட்டும் செய்தார்கள், அவர்கள் அவ்வழியே செல்லவில்லை.
இறையாட்சி தங்களுக்கு மட்டுமே உரியது என்று இஸ்ரயேலர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அது அனைவருக்கும் உரியது என்பதை வலியுறுத்தவே இயேசு திராட்சைத் தோட்ட உவமையைக் கூறினார்.
திராட்சைத் தோட்டத்துக்கு உரிமையாளர்
அதை யார் பொறுப்பில் விட்டுச் சென்றாரோ அவர்களிடம்
பழங்களைப் பெற்று வரும் படி அனுப்பிய தனது பணியாளர்களையும், மகனையும்
அவர்கள் கொன்று போட்டார்கள்.
உரிமையாளர் பொறுப்பை அவர்களிடமிருந்து பிடுங்கி வேறு பொறுப்பாளவர்களிடம் ஒப்படைத்தார்.
இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபை உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரியது.
இயேசு எந்த வம்சத்தில் பிறந்தாரோ அந்த வம்சத்தில் அநேகர் இன்னும் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத இஸ்ரயேலர்களாகவே இருக்கின்றனர்.
அவர்களும் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் இயேசுவின் ஆசை.
அந்த ஆசை நிறைவேற நாம் வேண்டுவோம்.
இயேசு பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்தார்.
உலகில் வாழும் அனைத்து மக்களும் பாவிகள் தான்.
ஆகவே உலகில் அனைவரும் இயேசுவை அறிய வேண்டும்.
அனைவரின் பாவங்களும் மன்னிக்கப் பட்டு அனைவரும் மீட்புப் பெற வேண்டும் என்பது தான் இயேசுவின் ஆசை.
அதற்காக உழைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
இயேசுவின் ஆசை நிறைவேற அனைவரும் உழைப்போம்.
நாம் மனம் திரும்புவோம்.
அடுத்து மற்றவர்களை மனம் திருப்புவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment