"தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்."
(மத்தேயு நற்செய்தி 23:12)
"மோசேயின் அதிகாரத்தைக் கொண்டுள்ள மறைநூல் அறிஞரும் பரிசேயரும்
என்னென்ன செய்யும்படி கூறுகிறார்களோ அதைச் செய்யுங்கள்,
ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள்."
என்று சொல்லிவிட்டு அவர்கள் செய்த சில செயல்களை இயேசு சுட்டிக் காட்டுகிறார்.
அவர்கள் செய்வதை நாம் செய்யக்கூடாது.
அவர்கள் செயல்களின் எதிர்ச் செயல்கள் நாம் செய்ய வேண்டிய செயல்கள்.
1.நாம் மற்றவர்களை ஆன்மீகப் பாதையில் வழி நடத்த வேண்டும். நாமும் அந்தப் பாதை வழியாக நடந்து மற்றவர்களுக்கு முன்மாதிரிகை காட்ட வேண்டும்.
2. மற்றவர்களுக்கு முன்மாதிரிகையாக நடக்க வேண்டும், ஆனால் மற்றவர்கள் நம்மைப் பார்த்து நம்மைப் பெருமையாகப் பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு நடக்கக்கூடாது.
3.மற்றவர்கள் நம்மைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு
தொழுகைக் கூடங்களில்
முதன்மையான இருக்கைகளைத் தேடக் கூடாது.
.4.மற்றவர்கள் நம்மை மதிப்போடு அழைக்க ஆசைப் படக் கூடாது. நாம் சாதாரண மக்கள்தான். சாதாரணமாக அழைக்கப்பட்டால் போதும்.
5.ஆன்மீகத்தில் போதகர் இயேசு மட்டுமே. உலகில் போதிப்பவர்கள் அவருடைய பிரதிநிதிகளே.
6. நமது தந்தை விண்ணகத் தந்தை மட்டுமே. நமது அருட் தந்தையர் அவருடைய பிரதிநிதிகள். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்கும்போது நாம் விண்ணக தந்தையின் வார்த்தைகளையே கேட்கிறோம்.
7. பெரியவர்களாய் இருப்பவர்கள் சேவை மனப்பான்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு சேவை செய்வதே தலைமைப் பண்பு.
8.அனைத்துக்கும் மேலாக நாம் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ வேண்டும்.
தங்கள் உண்மையான நிலையை உணர்ந்து தாழ்ச்சியோடு வாழ்பவர்கள் தான் ஆன்மீக வாழ்வில் உயர்ந்தவர்கள்.
அன்னை மரியாள்
தான் கடவுளின் தாயாக இருந்தாலும் தன்னைக் கடவுளின் அடிமையாகத்தான் கருதினாள்.
ஆகவேதான் கடவுள் அவளை விண்ணக, மண்ணக அரசியின் நிலைக்கு உயர்த்தினார்.
தன்னைத் தானே கடவுளுக்கு சரிசமமாக நினைத்த லூசிபெரை சாத்தான் நிலைக்குத் தாழ்த்தினார்.
நம்மை நாமே உயர்வாக நினைக்க சாத்தான் தான் சோதனை கொடுப்பான்.
அன்னை மரியாளின் உண்மையான பக்தர்கள் தம்மைத்தாமே தாழ்வாகவே நினைப்பார்கள்.
விண்ணகத்தில் அவர்கள்தான் உயர்த்தப்பெறுவர்.
கடைசி இடத்தில் இருப்பவனை கடவுள் முதலிடத்துக்கு அழைப்பார்.
தானாக முதலிடத்துக்கு வருபவன்
கடைசி இடத்துக்கு அனுப்பப் படுவான்.
ஆன்மீகத்தில், கடைசி நிலையில் உள்ளவர்கள் தான் முதல் நிலையினர்.
ஆகவே பணி செய்தே வாழ்வோம்,
அன்னை மரியாளைப் போலவும்,
அன்னைத் தெரசாவைப் போலவும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment