Tuesday, March 4, 2025

"மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்."(மத்தேயு நற்செய்தி 6:16)


"மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்."
(மத்தேயு நற்செய்தி 6:16)

இன்று சாம்பற்புதன்.

தவக் காலத்தின் ஆரம்ப நாள்.

தவக் காலம் என்றால் தவம் செய்ய வேண்டிய காலம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

ஏனென்றால் நாம் நமது வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு வினாடியும் 
தவம் செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.

நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றை ஆன்மீக ரீதியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் தவம்.

அதற்காகத்தான் ஐம்புலன்களின் கட்டுப்பாடு.

இந்தத் தவத்துக்குக் காலவரையறை கிடையாது.

பார்க்கக் கூடாதவற்றைப் கண் பார்க்க ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

கேட்கக் கூடாதவற்றைப் காது கேட்க ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

பேசக் கூடாதவற்றைப் பேச வாய் 
ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

நினைக்கக் கூடாதவற்றை  நினைக்க மனது  
ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

அனுபவிக்கக் கூடாத இச்சைகளை உடல் 
அனுபவிக்க ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

தவ முயற்சிகளில் அடங்கும்.

பார்க்கக் கூடியவற்றை அளவோடு பார்ப்பதும்

பேசக் கூடியதை அளவோடு பேசுவதும்,

கேட்கக் கூடியதை அளவோடு கேட்பதும்,

சாப்பிடக்கூடியதை அளவோடு சாப்பிடுவதும், தவ முயற்சிகள் தான்.

நேரத்தை வீணாக்காமல் செபத்தில் ஈடுபடுவதும் தவமுயற்சிதான்.

நமது நேரத்தின் பெரும் பகுதியை நமக்காகச் செலவழிக்காமல் பிறர் அன்புப் பணிகளுக்காகச் செலவழிப்பதும் தவ முயற்சி தான்.

நமது விருப்பங்களைத் தியாகம் செய்து மற்றவர்களது விருப்பங்களை நிறைவேற்றுவதும் தவ முயற்சி தான்.

ஒரே வாக்கியத்தில், உடலையும் மனதையும் ஒறுத்து இறைவனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் தவ முயற்சிதான்.

இறைவனுக்காக வாழ்வதுதான் தவவாழ்வு.

இறைவனுக்காக வாழ்பவன் தன்னையே தியாகம் செய்து வாழ்வான்.

தியாகம் செய்வதில் தான் தவம் அடங்கியிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் முழுவதும் தவம் செய்ய வேண்டுமென்றால் எதற்காகத் தனியே தவக் காலம்?

ஆண்டு முழுவதும் சாப்பிடுகிறோம், ஆனாலும் வீட்டு விழா நாட்களில் விசேடமாக விருந்து சாப்பிடுகிறோம் அல்லவா,  அதேபோல் தான்.

தவம் ஆன்மீக ரீதியானது.

எந்த ஆன்மீக விழாவுக்குத் தயாரிப்பதற்காகத் தவக் காலம்?

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த புனித வெள்ளிக்காக நம்மைத் தயாரிக்கவா?

இயேசு உயிர்த்தெழுந்த விழாவுக்கு நம்மைத் தயாரிக்கவா?

இக்கேள்விக்கு விடை காணுமுன் வேறொரு கேள்வி.

பொதுவாக ஆண்டவர் மரித்த நாளை துக்கப் பண்டிகை என்று அழைப்போம்.

உலகியல் ரீதியாக பிறந்த நாளை மகிழ்ச்சியாகவும், இறந்த நாளைத் துக்கமாகவும்,  கொண்டாடுவது வழக்கம்.

கேட்கப் படக் கூடிய கேள்வி ஆன்மீக ரீதியானது.

உயிர்த்த ஞாயிறு மகிழ்ச்சியின் விழா. அதில் சந்தேகமில்லை.

ஆண்டவர் இறந்த நாள்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

முகம் வாட்டமாய் இருந்தால் அகத்தில் வருத்தம், துக்கம் இருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவர் முகவாட்டமாய் இருந்தால் நாமும் முகத்தை வாட்டமாய் வைத்துக் கொண்டு, "வீட்டில் ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்போம்.

சாதாரணமாக அமர்ந்திருக்கிற ஆளிடம் போய், "ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்போமா?

புனித வெள்ளிக்காக நம்மைத் தயாரிக்க நோன்பு இருந்தால்,
அது துக்கப் பண்டிகையாக இருந்தால்

அதை நினைத்து நோன்பு இருந்தால் நமது முகம் எப்படி இருக்க வேண்டும்?

வாட்டமாய் இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகம் சொல்கிறது,

"நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்."

மனதில் நமது பாவங்களுக்காக மனத்தாபப்பட்டு, இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நோன்பை ஒப்புக்கொடுக்க வேண்டும்,

பாவங்கள் மன்னிக்கப்படும்போது ஆன்மீக மகிழ்ச்சி பிறக்கும்.

சிலுவையில் இயேசு மரித்த போது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.

இது எதற்கு அடையாளம் ?


 யூத ஆலயத்தில், திரை என்பது மகா பரிசுத்த ஸ்தலத்தை சாதாரண மக்களிடமிருந்து பிரிக்கும் ஒரு தடையாக இருந்தது. 

இங்கு பிரதான ஆசாரியர் மட்டுமே செல்லலாம்.

இயேசுவின் மரணத்தின் மூலம், இந்தத் திரை கிழிந்தது, 

இது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான தடை நீங்கியது என்பதைக் குறிக்கிறது.

ஒரே வரியில்,

நாம் மீட்கப் பட்டோம்.

நமது மீட்பு துக்கமான செய்தியா? மகிழ்ச்சியான செய்தியா?

சிலுவையில் தொங்கிய நல்ல கள்ளன் இயேசு மரித்தவுடன் அவரோடு விண்ணகம் சென்று விட்டான்.

இயேசுவின் காலத்தில் உயிர் வாழ்ந்தவர்களுள் சிலுவை மரணத்தால் முதலில் மகிழ்ந்தவன் நல்ல கள்ளன்.

" இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 23:43)

பேரின்ப வீட்டுக்கு அழுது கொண்டா போயிருப்பார்?

ஆன்மீக மகிழ்ச்சியோடு போயிருப்பார்.

கெட்ட கள்ளன்?

நாமும் ஆன்மீக ரீதியாக கள்ளர்கள், பாவிகள் தான்.

நாம் நல்ல கள்ளர்களாக இருந்தால் ஆன்மீக ரீதியாக இயேசு மரித்த நேரம் மகிழ்ச்சிகரமான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

உலகியல் ரீதியாக துக்கமான நேரம், ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சிகரமான நேரம்.

நமக்கும் இயேசு இடையில் தடையாக இருந்த திரை கிழிந்த நேரம்.

நாம் மனம் திரும்பிய பாவிகளாக மரித்தால் நமக்கும் இயேசுவுக்கும் இடையில் தடையாக இருக்கும் திரையாகிய உடலைக் கிழித்துக் கொண்டு நமது ஆன்மா இயேசுவோடு சேரும்.

நாம் இப்போது நோன்பு இருப்பது நாம் மனம் திரும்பி அருள் வாழ்வில் வளர்ந்து இயேசுவோடு இணைவதற்காகத்தான்.

அப்படி இணைய வேண்டுமானால் நாமும் நாம் சுமந்து சென்று கொண்டிருக்கும் சிலுவையில் மரிக்க வேண்டும்.

அதற்காகத்தான் நாம் சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்.

நாம் இருக்கும் நோன்பு நமது சிலுவை தான்.

முகவாட்டமாக அல்ல, முக மலர்ச்சியோடு நோன்பிருந்து,

நமது சிலுவையையும் மகிழ்ச்சி யாக சுமப்போம்.


இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து போல நாமும் மரித்து உலக இறுதியில் உயிர்ப்போம்.

இயேசுவோடு இணைந்து நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

ஆக, இயேசு உயிர்த்தெழுந்த விழாவுக்கு நம்மைத் தயாரிக்கவே தவக்காலம்.

இயேசுவோடு மரித்து, இயேசுவோடு உயிர்க்கவே நோன்பு இருக்கிறோம்.

நாம் வருந்த வேண்டும், 
அழ வேண்டும், 
நாம் செய்த பாவங்களுக்காக. 

மகிழ வேண்டும் மீட்பு பெற்றமைக்காக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment