ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்
(மத்தேயு நற்செய்தி 5:48)
கடவுள் நிறைவுள்ளவர். அளவுள்ள நாம் அளவில்லாத கடவுளின் அளவுக்கு நிறைவு உள்ளவர்களாக இருக்க முடியாது.
ஆனாலும் அவரைப் போல நிறைவுள்ளவர்களாய் இயேசு ஒரு வழி காட்டுகிறார்.
அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.
நல்லவர்களுக்கு உதவி செய்வது போலவே தீயவர்களுக்கும் உதவி செய்கிறார்.
நாமும் அப்படியே செய்ய நமக்கு அறிவுறுத்துகிறார்.
"நான் உங்களுக்குச் சொல்கிறேன்;
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்;
உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:44,45)
தந்தையைப் போல் பிள்ளைகளும் செயல்பட்டால் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள பண்புகளைப் பயன்படுத்துகிறவர்கள் ஆவோம்.
பிள்ளைகளுக்குத் தந்தையின் பண்புகள் இருப்பது இயல்பு தானே.
நம்மிடம் உள்ள தந்தையின் பண்புகளை நமது வாழ்வாக்கும்போது,
இயேசுவின் அறிவுரைப்படி தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக இருக்க முயற்சி செய்கிறோம்.
கடவுள் அளவில்லாத விதமாய் நிறைவுள்ளவர்.
நாம் நமது அளவுக்கு ஏற்ப நிறைவு உள்ளவர்களாக இருப்போம்.
சமுத்திரம் அதன் அளவுக்கு நிறைவு உள்ளதாக இருந்தால்
ஒரு சிறிய தம்ளர் அதன் அளவுக்கு நிறைவு உள்ளதாக இருக்கும்.
இயேசுவின் ஆசையை நிறைவேற்ற அவரிடமே உதவியைக் கேட்போம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment