அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார்.
(மாற்கு நற்செய்தி 10:28)
இயேசு சீடர்களிடம், "செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.
அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்று கூறியபோது
இராயப்பர் இயேசுவிடம்
"நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே"
கூறினார்.
"நாங்கள் செல்வந்தர்கள் அல்ல, இருந்தாலும் எங்களிடம் உள்ளதை எல்லாம் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியிருக்கிறோமே, எங்களுக்கு என்ன ஆகும்" என்ற பொருளில் கூறுகிறார்.
அதற்கு இயேசு சீடர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்
இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்." என்றார்.
இராயப்பர் சீடர்கள் விட்டு வந்த லௌகீகப் பொருட்களைக் குறிப்பிடுகிறார்.
இயேசு அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஆன்மீக பிரதிபலன்களைக் குறிப்பிடுகிறார்.
அவர்கள் விட்டு வந்தது லௌகீக ரீதியிலான குடியிருந்த வீடு, பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் உடமைகள்.
பிரதிபலன்களாகக் கிடைக்கப் போவது உலகிலுள்ள அனைத்து உறவுகளும், ஆன்மீக ரீதியாக.
விட்டு வந்தது ஒரு வீடு. இனி நாட்டிலுள்ள அனைத்து வீடுகளும் அவர்களுடையவைதான், அதிலுள்ள அனைத்து மக்களும் அவர்களுடைய உறவினர்கள் தான். எல்லோரும் ஆன்மீக உறவினர்கள். எல்லோரும் இறையன்பினாலும்,
பிறரன்பினாலும் பிணைக்கப் பட்டவர்கள்
உலகமே வீடு, வானமே கூரை, மக்கள் அனைவரும் உறவினர்கள்.
இயேசுவுக்காக வாழ வந்தவர்களுக்கு
கிடைக்கவிருக்கும் முக்கிய மான பிரதிபலன் இன்னல்கள், துன்பங்கள்.
இயேசு துன்பங்களை அவரைப் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாக் குறிப்பிடுகிறார்.
அவர் பட்ட பாடுகளும், சிலுவை மரணமும் தான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
ஆன்மீக ரீதியாக அவைகள் நமக்கு ஆசீர்வாதங்கள்.
இயேசுவின் பணியில் தங்களை அர்ப்பணித்திருக்கும் குருமார்கள் நம்மை சிலுவை அடையாளத்தால் தான் ஆசீர்வதிக்கிறார்கள்.
நாம் நமது நெற்றியில் சிலுவை அடையாளம் போடும்போது இயேசுவின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்கிறது.
துன்பங்களாகிய சிலுவைகளைச் சுமந்துகொண்டு தான் இயேசுவின் சீடர்களாக வாழ முடியும்.
இயேசுவின் வாழ்வில் சிலுவைக்குப் பின்தான் உயிர்ப்பு.
புனித வெள்ளிக்குப் பிறகுதான் உயிர்த்த ஞாயிறு.
நமக்கும் சிலுவையின் மூலம் தான் நித்திய பேரின்ப வாழ்வு.
எந்த அளவுக்கு இந்த உலகில் இயேசுவுக்காகத் துன்பங்களை அனுபவிக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நித்திய பேரின்பமும் இருக்கும்.
உலகைத் துறந்து இயேசுவுக்காக வாழ்பவர்களுக்கு இவ்வுலகில் சிலுவை, மறு உலகில் நிலை வாழ்வு.
லௌகீக ரீதியில் துன்பங்கள் நமது உடல் விருப்பத்திற்கு எதிரானவை.
உடலுக்கு வலியைக் கொடுக்கும் நோய் நொடிகள், பசி, பட்டினி போன்றவற்றையும்,
மற்றவர்கள் நமக்குத் தரும் துன்பங்களையும்,
இயேசுவுக்கு எதிரானவர்கள் நமக்கு தரும் தொந்தரவுகளையும்,
மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் செயல்பாடுகளால் நாம் படும் துன்பங்களையும்
பொறுமையுடன் சகித்துக் கொண்டு அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால் அவை நாம் விண்ணக வாழ்வுக்குள் நுழைவதற்காக அருள் உதவியைப் பெற்றுத் தருகின்றன.
இந்த காலகட்டத்தில் இயேசுவுக்கு எதிரானவர்களால் ஏற்படும் துன்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
கோவில்கள் இடிக்கப்படுகின்றன.
புனிதர்களின் சுருபங்கள் உடைக்கப்படுகின்றன.
வழிபாடு செய்பவர்கள் அடிக்கப்படுகின்றனர்.
இவற்றையெல்லாம் உலகம் தனது வெற்றியாகக் கருதுகிறது.
இவற்றை நாம் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும் போது இவை நாம் பெரும் ஆன்மீக வெற்றிகள்.
நமக்காக இயேசு சிந்திய ரத்தம் நமக்கு மீட்பைத் தந்தது.
இயேசுவுக்காக நாம் சிந்தும் ரத்தம் திருச்சபையை வளர்க்கிறது.
இவ்வுலகில் நாம் படும் துன்பங்கள் தற்காலிகமானவை.
ஆனால் அவற்றின் காரணமாக நாம் பெரும் மறு உலக வாழ்வு நிலையானது.
இயேசுவுக்காகச் சொந்தங்களை விட்டு வருபவர்களுக்கு உலகமே சொந்தமாகி விடுகிறது.
அன்று பன்னிரு சீடர்களும் தங்கள் வீடுகளையும் ரத்த உறவுகளையும் விட்டு வந்தது போல
இன்று நம்மிடையே பணியாற்றும் குருக்கள் தங்கள் வீடுகளையும் ரத்த உறவுகளையும் விட்டு வந்திருக்கிறார்கள்.
நாம் அவர்களுக்கு பெற்றோராகவும் சகோதர சகோதரிகளாகவும் செயல்பட வேண்டும்.
அவர்களை நமது குடும்பத்தின் அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நமது ரத்த சொந்தங்களை நாம் நேசிப்பது போல ஆன்மீக சொந்தங்களாகிய அவர்களையும் நேசிக்க வேண்டும்.
நமது ஆன்மீக வாழ்வு பற்றி அவர்களோடு மனம் திறந்து பேச வேண்டும்.
நமக்காக வந்திருப்பவர்களை நம்மவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும் என்பது திருச்சபையின் கட்டளை.
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அவர்களை நமது உடன் பிறந்தவர்களாக் கருத வேண்டும்.
இதுவே இயேசுவின் விருப்பம்.
இயேசுவின் விருப்பமே நமது விருப்பமாக இருக்க வேண்டும்.
விருப்பம் செயலாக மாற வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment