Wednesday, March 19, 2025

அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். (லூக்கா நற்செய்தி 16:25)



அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 
(லூக்கா நற்செய்தி 16:25)

செல்வந்தன் இலாசர் உவமையில்

வாழ்நாளில் நலன்களையே அனுபவித்த செல்வந்தன் பேரிடர் நிலையை அனுபவிப்பதாகவும்,

இன்னல்களையே அனுபவித்த இலாசர் பேரின்ப நிலையை அனுபவிப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு உண்மையும் ஒரு மையக் கருத்தைக் கொண்டிருக்கும்.

 இந்த உண்மையின் மையக் கருத்து   பகிர்ந்து உண்ணுதல்.

செல்வந்தன் வயிறார உண்டு அனுபவிக்கிறான்.

ஏழை இலாசர் அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். 

விரும்பினார் என்று மட்டும் குறிப்பிடப் பட்டுள்ளது. விரும்பியது கிடைக்கவில்லை என்பதுதான் பொருள்.

வயிறார உண்டு அனுபவித்த செல்வந்தன் தான் உண்ட உணவை ஏழையோடு பகிர்ந்து கொள்ளவில்லை.

பிறரன்பு சிறிதும் அற்ற செல்வந்தன் பேரிடர் நிலையை அடைகிறான்.

ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே மரித்த இலாசர் பேரின்ப நிலையை அடைகிறான்.

ஒன்றைக் கவனிக்க வேண்டும், அவர்கள் செய்த வேறு பாவ புண்ணியங்கள் எதுவும் குறிப்பிடப் படவில்லை.

பகிர்ந்து கொள்ளாததே பாவம்தான்.

பிறரன்புக்கு எதிரான பாவம்.

இந்த உவமையின் மூலம் பிறரன்புடன் 

இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ வேண்டியதன் அவசியத்தை இயேசு வலியுறுத்துகிறார் என்பது புரிகிறது.


"அதற்கு ஆபிரகாம், "மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்" என்றார்."
(லூக்கா நற்செய்தி 16:29)

உவமையில் வரும் இந்த வசனத்தின் மூலம் நம்மோடு பூமியில் வாழும் இயேசுவின் பிரதிநிதிகளாகிய குருக்களுக்கு நாம் செவிசாய்க்க வேண்டியதன் அவசியத்தை இயேசு வலியுறுத்துகிறார்.

விண்ணகப் பாதையில் நம்மை வழிநடத்தவே இயேசு கத்தோலிக்க திருச்சபையை நிறுவினார்.

(கத்தோலிக்க திருச்சபையை மட்டுமே இயேசு நிறுவினார். மற்ற சபைகள் இயேசுவால் நிறுவப் பட்டவை அல்ல.)

எந்த இராயப்பர் மேல் இயேசு திருச்சபையைக் கட்டினாரோ அந்த இராயப்பரின் தலைமையில் இயங்கும் திருச்சபை தான் கத்தோலிக்கத் திருச்சபை.

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு நற்செய்தி 16:18)

திருச்சபையின் தலைவர் இராயப்பரின் வாரிசாகிய பாப்பரசர்.

அவரும், அவரின் கீழுள்ள ஆயர்களும், குருக்களும் தான் நமது ஆன்மீக வழிகாட்டிகள்.

நேரடியாக நமது தொடர்பில் உள்ளவர் நமது பங்குக் குரு.

நமது பங்குக் குருவுக்கு செவி சாய்க்கும்போது இயேசுவுக்கே செவி சாய்க்கிறோம்.

செவிசாய்க்காதவர்கள் உவமையில் வரும் செல்வந்தரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.


"ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! "
(2 கொரிந்தியர் 9:9)

இந்த வசனம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

"உங்களுக்குச் செவி சாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார்; உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார். " 
(லூக்கா நற்செய்தி 10:16)

இந்த வசனம் நமது ஞான மேய்ப்பவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

பகிர்ந்து வாழ்வோம் 
பரலோக வாழ்வடைய.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment