அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது" என்று கூறினார்.
(மாற்கு நற்செய்தி 12:33)
"அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று இயேசுவிடம் கேட்ட மறைநூல் அறிஞர்
இறைவனை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும், நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானை நேசிக்க வேண்டும் என்று இயேசு கூறியதைக் கேட்ட பின் இவ்வாறு கூறினார்.
அவர் கூறிய வார்த்தைகளைத் தியானிப்போம்.
"கடவுடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும்,
தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும்
எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது"
ஒவ்வொரு மனிதனும் முழுமையாகக் கடவுளால் படைக்கப்பட்டான்.
அவன் முழுமையாகக் கடவுளுக்குச் சொந்தம்.
அவனுடைய ஒரு சிறு முடி கூட அவனுக்குச் சொந்தமானது அல்ல.
கடவுளுக்குச் சொந்தமான ஒவ்வொரு உறுப்பையும் அவன் கடவுளுக்காக மட்டும் பயன்படுத்த அவன் கடமைப் பட்டிருக்கிறான்.
மனிதன் உயிர் வாழ நூறு சதவீதம் அத்தியாவசியமான இருதயம் முற்றிலும் கடவுளுக்குச் சொந்தம்.
இருதயம் அன்பின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.
அப்படியானால் நமது அன்பு முழுவதும் கடவுளுக்கே சொந்தம் என்பது சொல்லாமலே விளங்கும்.
கடவுள் அன்பு மயமானவர்.
அவரது அன்பைத் தான் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடவுள் நம்மை அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.
நாம் நமது இதயத்தை அவரை மட்டும் அன்பு செய்யப் பயன்படுத்த வேண்டும்.
ஆகவேதான்
"உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்று இயேசு கூறுகிறார்.
நமது உள்ளம் உணர்வுகளின் (Feelings, emotions) இருப்பிடம்.
மனம் எண்ணங்களின் (Thoughts) இருப்பிடம்.
எண்ணங்களும், உணர்வுகளும் தொடர்புடையவை.
ஆருயிர் நண்பனை நினைத்துப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளுக்கும்,
நம்மைக் கெடுப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் பகைவனை நினைத்துப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளுக்கும்
உள்ள வித்தியாசம் நமக்குத் தெரியும்.
நமது மனது கடவுளைப் பற்றிய எண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டும்.
அந்த எண்ணங்கள் உள்ளத்தை பக்தி உணர்ச்சிகளால் நிறப்பும்.
நமது உள்ளத்தையும், மனதையும் முழுவதுமாகக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.
ஆற்றல்=சக்தி.
நமது முழு சக்தியையும் பயன்படுத்தி கடவுளை நேசிக்க வேண்டும்.
முழு இருதயத்தையும், முழு உள்ளத்தையும், முழு மனதையும், முழு ஆற்றலையும் கடவுளுக்குக் கொடுத்தபின் நம்மையும், பிறனையும் எதைக்கொண்டு அன்பு செய்ய?
நாம் கடவுளுக்குச் சொந்தம். அவருள் வாழ்கிறோம். நாம் கடவுளை நேசிக்கும் போது அவருள் வாழும் நம்மையும் பிறனையும் சேர்த்து தான் நேசிக்கிறோம்.
நீரால் நிறைந்த ஒரு பெரிய அண்டாவுக்குள் ஒரு சிறிய தம்ளரைப் போட்டுவிட்டால் தம்ளரும் நிறைந்து விடுகிறது அல்லவா?
நாம் கடவுளை நேசிக்கும் போது அவருள் வாழும் நம்மையும், நமது பிறனையும் நேசிக்கிறோம்.
கடவுளைக் கண்ணால் பார்க்க முடியாது.
கண்ணால் காணக்கூடிய நமது பிறனை நேசிக்கும் போது கடவுளையும் நேசிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது பிறன்மீது நமக்கு அன்பு ஏற்படாவிட்டால் நாம் கடவுளை அன்பு செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது பிறனுக்கு நாம் செய்யும் உதவிதான் நாம் கடவுளுக்குக் கொடுக்கும் காணிக்கை.
பிறனுக்குக் கொடுக்காமல் அதை கோயில் உண்டியலில் போட்டால் உண்டியல் நிறையும், அதைக் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
நாம் கடவுளுக்குச் செலுத்தும் பலிகளை விட நாம் செய்யும் அன்பு தான் பெரியது.
கடவுளையும், பிறனையும் நேசிக்காமல் நாம் செலுத்தும் பலியை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும்
கடவுளையும், பிறனையும் அன்பு செய்வோம்.
அதற்குப் பின்தான் மற்றதெல்லாம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment