''எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்."
(மத்தேயு நற்செய்தி 6:12)
செபம் சொல்லும் போது வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வர வேண்டும்.
சிந்தனையும், சொல்லும், செயலும் ஒன்று போல் இருக்க வேண்டும்.
நமது உள்ளத்தை இறைவனை நோக்கி எழுப்புவது தான் செபம்.
நமது உள்ளமும் இறைவனின் உள்ளமும் இணைவதுதான் செபம்.
கர்த்தர் கற்பித்த செபத்தை ஒரு முறை சிந்தனை, சொல், செயல் மூன்றும் இணைய செபித்தால் நாம் புனிதர் ஆகி விடலாம்.
அதிலுள்ள ஏழு மன்றாட்டுக்களில் ஒன்றை இன்று தியானிக்க எடுத்துக் கொள்வோம்.
"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்."
"புனிதர்களின் சமூக உறவை விசுவசிக்கிறேன்."
"I believe in the communion of Saints."
எங்கெல்லாம் உள்ள புனிதர்கள்?
மோட்சம், உத்தரிக்கிற தலம், உலகம்.
உலகிலுள்ள புனிதர்கள் விசுவாசிகளாகிய நம்மை குறிக்கிறது.
புனிதர்களாக வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
புனிதர் என்று அழைக்கப்பட நாம் பாவம் இன்றி வாழ வேண்டும், அதற்காகத்தான் ஏழு தேவத் திரவிய அனுமானங்கள்.
பாவம் செய்ய நேரிட்டால் பாவ சங்கீர்த்தனம் மூலம் பாவ மன்னிப்புப் பெற வேண்டும்.
கடவுள் நமது பாவத்தை மன்னிக்க வேண்டுமென்றால் இயேசு அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார்.
நாம் பரம தந்தையிடம் பாவ மன்னிப்பு கேட்க இவ்வாறு செபிக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்:
"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்."
இதன் உண்மையான பொருள் அதை மாற்றிச் சொன்னால் புரியும்.
"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னிக்கா விட்டால் எங்கள் குற்றங்களை மன்னிக்க வேண்டாம்."
நமக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் இறைத் தந்தையில் நமது சகோதர சகோதரிகள்.
நாம் எல்லாம் இறை உறவில் ஒரே குடும்பத்தினர்.
ஒரே குடும்பத்தினர் சமாதானமாக வாழ வேண்டுமென்றால் ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ வேண்டும்.
நாம் நமது சகோதர சகோதரிகளை மன்னித்தால் தான் தந்தை நமது பாவங்களை மன்னிப்பார்.
உலகினர் அனைவரும் ஒருவரை ஒருவர் மன்னித்து விட்டால் உலகில் பாவம் என்பதே இருக்காது.
நாம் ஒவ்வொருவரும் நம்மை ஆன்ம பரிசோதனை செய்வோம்.
நாம் நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களில் எத்தனை பேரை மனதார மன்னித்திருக்கிறோம்?
நம்மோடு பழகியவர்களில் ஒவ்வொருவராக நினைத்துப் பார்ப்போம்.
யாரையாவது மன்னியாதிருந்தால் உடனடியாக மன்னிப்போம்.
அவர் நம்மிடம் மன்னிப்புக் கேட்காவிட்டாலும் நாம் மன்னிப்போம்.
மன்னித்தால் தான் கர்த்தர் கற்பித்த செபத்தைப் பக்தியுடன் சொல்ல முடியும்.
இந்த ஒரு மன்றாட்டை சிந்தனை, சொல், செயல் மூன்றும் இணைய நாம் செபித்தால்,
அதாவது
மனதார மன்னித்து,
சொல்லால் அதைச் சம்பந்தப் பட்டவர்களுக்குச் சொல்லி,
செயலில் நூறு சதவீதம் நட்போடு வாழ்ந்தால்
நாம் அனைவரும் புனிதர்கள் தான்.
நாமும் யாருக்கும் எதிராகக் குற்றம் செய்திருந்தால், நாம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்கும் முன் அவர்களிடம் மன்னிப்பு கேட்போம்.
மன்னிப்புக் கேட்கவும் வெட்கப்பட வேண்டாம். மன்னிக்கவும் தயங்க வேண்டாம்.
இயேசு தனது சிலுவை மரணத்தால் நமக்குத் தந்த மன்னிப்பு தான் மீட்பைத் தருகிறது.
மன்னிப்பு இல்லாவிட்டால் மீட்பு இல்லை.
மன்னிப்பு என்ற டிக்கெட் இல்லாமல் விண்ணக இரயிலில் ஏற முடியாது.
விவசாயி நிலத்தில் பயிரிடுமுன் அதைப் பண்படுத்துகிறான்.
நாமும் மன்னிப்பின் மூலம் ஆன்மாவைப் பண்படுத்தி, புண்ணியப் பயிரிட்டு,
ஒன்றுக்கு நூறாய் அறுவடை செய்வோம்.
அறுவடை செய்து விண்ணகக் களஞ்சியத்தில் சேர்ப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment