Saturday, March 8, 2025

"மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" (லூக்கா நற்செய்தி 4:4)


 "மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" 
(லூக்கா நற்செய்தி 4:4)

மனிதன் ஆன்மாவோடும், உடலோடும் படைக்கப்பட்டவன்.

ஆன்மா ஆவி. (Spirit)
உடல் சடப்பொருள். (Matter)

ஆன்மாவும் வாழ வேண்டும்.
உடலும் வாழ வேண்டும்.

ஆன்மா அழியாதது, உடல் வாழ்ந்து முடிந்த பின்பும் ஆன்மா அழியாமல் நித்திய காலமும் வாழும்.

ஆன்மாவின் வாழ்க்கையை ஆன்மீக வாழ்வு(Spiritual life) என்போம்.

உடலின் வாழ்க்கை உலகில் முடிந்து போவதால் அதை லௌகீக வாழ்வு(Worldly life) என்போம்.

உடல் மண்ணிலிருந்து உருவாக்கப் பட்டதால் அது வாழ மண்ணிலிருந்து வரும் உணவுப் பொருள் தேவை. சாத்தான் இயேசுவைச் சோதிக்கும் போது குறிப்பிடும் 'அப்பம்' மண்ணில் விளையும் கோதுமையிலிருந்து தயாரிக்கப் படுவது.

ஆன்மா நித்திய விண்ணக வாழ்வுக்காக இறைவனின் சாயலில் படைக்கப்பட்டதால் அது வாழ இறைவனின் அருள்தான் உணவு. இறைவன் வார்த்தையின் படி ஆன்மா வாழ்ந்தால் அதற்கு இறையருள் உணவாகக் கிடைக்கும்.

இயேசு நாற்பது நாள் எதுவும் சாப்பிடாமல உபவாசம் இருந்த பின் அவரைச் சோதித்த சாத்தான்

 "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்றது. 

இயேசு,"மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே"
(இணைச் சட்டம் 8:3)

என்ற இறைவாக்கைப் பதிலாகச் சொன்னார்.

"மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார்" என்பது இறைவாக்கு.

இயேசு மனிதனுடைய ஆன்மீக வாழ்வைக் குறிப்பிடுகிறார். 

ஆன்மீக வாழ்வு தான் மனிதனுடைய உண்மையான வாழ்வு.

அதற்கு உதவவே உடல், உதவி முடித்துவிட்டு அது மண்ணுக்குள் போய்விடும்.

ஆன்மா அதன் வாழ்வைத் தொடரும்.

மனிதனை மனிதனாக்குவது அவனை இயக்கிக் கொண்டிருக்கும் அவனது ஆன்மா.

மனிதன் வாழ வேண்டுமென்றால் 
ஆன்மீக ரீதியாக அவனுடைய ஆன்மா வாழ வேண்டும் என்பது பொருள்.

உடல் வாழ்வது லௌகீக வாழ்வு.

லௌகீக வாழ்வு இவ்வுலகில் முடிந்துவிடும், மறு உலகில் தொடராது. 

அப்பம் அழியக்கூடியது, அதை உண்ணும் உடலும் அழியக் கூடியது.

ஆனால் ஆன்மீக வாழ்வுக்கு முடிவு இல்லை. 

இவ்வுலகில் உடலோடு வாழும் ஆன்மா இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் மறுவுலக நிரந்தரமான வாழ்வை ஆரம்பித்து விடும்.

இயேசு "மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார்" என்று சொன்னபோது 

மனிதனின் லௌகீக வாழ்வை விட ஆன்மீக வாழ்வே முக்கியமானது அதை வாழ்வதற்காகவே மனிதன் உலகில் பிறந்திருக்கிறான் என்பதை குறிப்பிடுகிறார்.

உணவு, உடை, இருப்பிடம் போன்ற பொருள் சார்ந்த தேவைகள் மனிதனின் உயிர்வாழ்விற்கு அவசியமானவை.

ஆனால், இந்தத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வது மனித வாழ்வின் முழுமையான அர்த்தத்தை தராது.

 அன்பு, கருணை, நம்பிக்கை, அமைதி போன்ற ஆன்மீகத் தேவைகளைப்    பூர்த்தி செய்வதன் மூலமே 

மனிதன் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் அடைய முடியும்.


கடவுளின் வார்த்தை மனிதனின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யுக்கூடியது.

 இதுதான் மனிதனுடைய ஆன்மாவை திடப்படுத்துவதோடு 
அதைச் சரியான விண்ணகப் பாதையில் வழி நடத்துகிறது.

நமது விசுவாசத்தையும் நம்பிக்கையையும், இறையன்பையும் வளர்த்து

 இயேசு பிறந்த நாளில் வான தூதர்கள் போற்றிய சமாதான வாழ்வை நமக்குத் தருகிறது. 

இறைவனோடு நாம் வாழும் சமாதான வாழ்வே நமக்கு நித்திய பேரின்ப வாழ்வை தரும்.

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் எதைத் தேடி ஓடுகிறார்கள், 

இறைவனின் அருளையா, உலகின் பொருளையா?

படிப்பது, பட்டம் பெறுவது, வேலை தேடுவது அனைத்தும் பொருள் ஈட்டத்தானே!

பொருள் ஈட்டுவதில் தவறு இல்லை 

ஆனால் ஈட்டிய பொருளின் உதவியால் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் இறை அருளை ஈட்ட வேண்டும். 

ஆனால் நம்மில் அநேகர் பிறருக்கு உதவி செய்யாமல் பொருள் ஈட்ட மட்டும் உதவி செய்ய இறைவனை வேண்டுகிறார்கள்.

அருள் ஈட்ட உதவாத பொருள் waste!

பொருளும் இறைவன் தந்தது தான். 

பொருளை பிறர் அன்பு பணிகளில் செலவழித்து இறையருளை ஈட்டுவோம்.

ஈட்டுக அருளை 
பொருள் கொண்டு, 
ஈட்டாக்கால் பொருளால் 
என்ன பயன்?

மனிதன் அப்பத்தினால் அல்ல, இறையருளால் வாழ்கிறான். 

லூர்து செல்வம்

No comments:

Post a Comment