"சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது."
(மாற்கு நற்செய்தி 10:14)
சிறு பிள்ளைகளைப் போன்றவர்களுக்கே மோட்ச பேரின்ப வாழ்வு உரியது.
பாவம் அற்றவர்கள் தான் மோட்சத்துக்குள் நுழைய முடியும்.
பாவம் என்றால் என்ன என்று தேரியாதவர்களால் பாவம் செய்ய முடியாது.
சிறு பிள்ளைகளுக்கு ஒழுக்க நெறிகளைப் பற்றியோ, கடவுளுடைய கட்டளைகளைப் பற்றியோ எதுவும் தெரியாது.
ஆகவே அவர்களால் அவற்றை மீற முடியாது.
அவர்களுடைய ஆன்மா எப்போதும் பரிசுத்தமாக இருக்கும்.
அந்த நிலையில் அவர்கள் மரிக்க நேரிட்டால் விண்ணக வாழ்வை அடைவது உறுதி.
இயேசு குழந்தையாக பிறந்த சமயத்தில் ஏரோது மன்னனால் கொலை செய்யப்பட்ட அத்தனை மாசில்லாக் குழந்தைகளும் இப்போது விண்ணக பேரின்ப வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியவர்களும் சிறு பிள்ளைகளைப் போல பாவ மாசுமறு இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம்.
சிறு பிள்ளைகள் மோட்சத்துக்குள் நுழைய உத்தரிக்கிற தலம் வழியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் பெரியவர்களிடம் சாவான பாவம் இல்லாவிட்டாலும் அற்ப பாவங்கள் இருந்தால் அவர்கள் உத்தரிக்கிற தலம் சென்று உத்தரித்த பிறகு தான் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியும்.
நாம் விண்ணக வாழ்வுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம்,
பாவம் இல்லாமல் மரிப்பவர்களுக்கு விண்ணக வாழ்வு உறுதி,
மரிக்கும் சிறு பிள்ளைகள் உத்தரிக்கிற தலம் செல்லாமலேயே விண்ணக வாழ்வை அடைவார்கள்
என்ற மறை உண்மைகளின் அடிப்படையில் சிறிது தியானித்தால் நமது வாழ்க்கைக் கண்ணோட்டம் வித்தியாசமாக இருக்கும்.
ஒரு Wall poster ல் இவ்வாறு எழுதியிருந்தது:
"எங்கள் தந்தை இவ்வுலக துன்ப வாழ்வை விட்டு விட்டு நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிக்க இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்."
யாராவது " நான் பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறேன் என்ற செய்தியை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் " என்று சொன்னால் அவரைப் பற்றி என்ன நினைப்போம்?
அல்லது,
"எங்கள் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கண்ணீரோடு கேட்டுக்கொள்கிறோம்"
என்று அழைப்பு விடுப்பவர்களை பற்றி என்ன நினைப்போம்?
மனக் கோளாறு உள்ளவர்கள் என்று தான் நினைப்போம்.
மகிழ்ச்சியான செய்தியை மகிழ்ச்சியாக அறிவிக்க வேண்டும்.
துக்கமான செய்தியை வருத்தத்தோடு அறிவிக்க வேண்டும்.
நித்திய பேரின்ப வாழ்வை அடைய இறைவனடி சேர்வது மகிழ்ச்சியான செய்தியா?துக்கமான செய்தியா?
பேரின்ப வாழ்வை துக்கமான செய்தி என்று நினைப்பவர்களும் மனக் கோளாறு உள்ளவர்கள்தான்.
இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்.
இருவருக்கும் ஒரே வயது.
இருவரும் சிறு வயது முதலே நெருங்கிப் பழகி அன்பால் பிணைக்கப் பட்டிருந்தார்கள்.
எப்போதும் அவர்களை ஒன்றாகவே பார்க்கலாம்.
எப்போதும் மகிழ்ச்சியாக பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
இருபது வயது நடக்கும் போது இருவரில் ஒருவர் எதிர் பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்து விட்டார்.
வீடே அழுகையில் மூழ்கிக் கிடந்தது.
எல்லோரும் அழுது கொண்டிருந்தபோது நண்பன் மட்டும் எப்போதும்போல
மகிழ்ச்சியாக இருந்தான்.
இது மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஒருவர் அவனிடம், "நண்பன் இறந்து கிடக்கிறான். நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் உனக்கு உணர்ச்சியே இல்லையா?"
"உணர்ச்சி இருப்பதால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நண்பன் நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிக்கச் சென்றிருக்கிறான்.
கடவுளிடம் சென்றிருக்கிறான்.
உண்மையான உணர்ச்சி இல்லாதவர்கள்தான் நண்பனின் பேரின்ப வாழ்வை நினைத்து மகிழாமல் அழுது கொண்டிருக்கிறார்கள்."
லௌகீக உள்ளத்தோர்க்கு இந்த பதில் விளங்காது.
உண்மையான ஆன்மீக வாதிகளுக்குப் புரியும்.
நமது வாழ்வின் அனுபவங்களை ஆன்மீக் கண் கொண்டு நோக்குவோம்.
லௌகீக தோல்விகள் கூட ஆன்மீக வெற்றிக்கு அடித்தளம் ஆகலாம்.
புனித பிரான்சிஸ் அசிசி இளைஞனாக இருந்தபோது அவரது பெற்ற தந்தை அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்.
அவர் ''விண்ணகத் தந்தையே எனது தந்தை" என்று வாழ ஆரம்பித்தார்.
பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டே ஆன்மீக பணியாற்றினார்.
ஏழைகளின் சபையாகிய பிரான்சிஸ்கன் துறவற சபையை நிறுவினார்.
சிறு பிள்ளைகளின் மாசுமறுவற்ற தன்மை நமது ஆன்மீகமாக இருக்கட்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment