"இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்."
(அருளப்பர் நற்செய்தி 4:50)
இயேசு கலிலேயாவில் போதித்துக் கொண்டிருந்த போது அரசு அலுவலர் ஒருவர் அவரிடம் வந்து,
சாகும் தருவாயில் இருந்த தன் மகனைக் குணமாக்க வரும்படி வேண்டினார்.
இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார்.
அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவர் மகன் சுகம் அடைந்து விட்டான் என்ற செய்தி வந்தது.
இப்புதுமை விசுவாசத்தின் மகத்துவத்தை வலியுறுத்துகிறது.
விசுவாசம் என்றால்?
கடவுள் உண்மையே உருவானவர்.
(God is truth itself.)
அவர் தன்னை தானே வெளிப் படுத்தினாலன்றி அவரைப் பற்றி யாராலும் எதுவும் அறிய முடியாது.
இயேசுவின் வருகைக்கு முன் தன்னுடைய தீர்க்கத் தரிசிகளின் வாயிலாக கடவுள் தன்னை வெளிப்படுத்தினார்.
அவர் வெளிப்படுத்திய உண்மைகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன.
பழைய ஏற்பாடு - 46 புத்தகங்கள்.
மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு தனது பொது வாழ்வின் போது தன்னைப் பற்றிய இறையியல் உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.
அவரது வாழ்க்கையே ஒரு இறையியல் வெளிப்பாடு.
பொது வாழ்வின் போது வெளிப்படுத்திய உண்மைகள் பைபிளின் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன.
புதிய ஏற்பாட்டில் - 27 புத்தகங்கள்.
பைபிளில் 73 புத்தகங்கள்.
அவர் இராயப்பரின் தலைமையில் நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையின் மூலமாகவும் தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தினார்.
இவை கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தில்
அடங்கியுள்ளன.
இறைவனால் வெளிப்படுத்தப் பட்ட உண்மைகளை ஏற்று, அவற்றின் படி வாழ்வது விசுவாச வாழ்வு.
விசுவாசத்தையும் வாழ்க்கையையும் பிரிக்க முடியாது.
விசுவாசப் பிரமாணத்தை வாயினால் சொல்லிக் கொண்டு, அதன்படி வாழாதவன் விசுவாசி அல்ல.
கடவுளிடம் கேட்டது கிடைக்க வேண்டுமென்றால் நாம் விசுவாச வாழ்வு வாழ்பவர்களாக இருக்க வேண்டும்.
நாம் வாயினால் சொல்லும் விசுவாசப் பிரமாணத்துக்கும் நமது வாழ்க்கைக்கும் சமபந்தம் இல்லாவிட்டால்
"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற இறை வாக்குக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாமல் போய் விடும்.
இறைவாக்கு நாம் வாழ்வதற்காகத் தரப்பட்டுள்ளது. அதை வாழாமல் இறைவனிடம் கேட்பது பாடப்புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு அதைப் படிக்காமல் தேர்வு எழுதுவதற்குச் சமம்.
சிலர் பாடப் புத்தகத்தை தன் தலையணையாக வைத்துக் கொண்டு தூங்கினால் பாடமெல்லாம் தலைக்குள் ஏறிவிடும் என்று நினைக்கிறார்கள்.
பைபிளைக் கையில் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது, அதை வாழ வேண்டும்.
ஒவ்வொரு நாளும் காலையில் பைபிளை வாசிப்போம், பகலில் அதை வாழ்வோம்.
நாம் கேட்பது கிடைக்கும்.
ஆனால் நாம் கேட்பது இறைவாக்குக்கு எதிரானதாக இருந்து விடக்கூடாது.
இறைவாக்கு, நமது வாழ்க்கை, நமது விருப்பம் மூன்றும் இணைந்திருக்க வேண்டும்.
கேட்பது இறைவாக்குக்கு ஒத்திருக்க வேண்டும்.
இறை விருப்பத்துக்கு எதிரானதாக நமது விருப்பம் இருந்து விடக்கூடாது.
அப்போது தான் நமது வாழ்க்கையும் இறைவனுக்கு ஏற்றதாக இருக்கும்.
வேலை தேடுகிறவன் செய்தித் தாளில் விளம்பரப் பகுதியைப் பார்ப்பான்.
அரசியலில் ஆர்வம் உள்ளவன்
முன்னால் TV இருந்தால் அரசியல் செய்திகளைப் பார்ப்பான்.
பொழுதுபோக முன்னால் TV இருந்தால் படம் , சீரியல் பார்ப்பான்.
ஆன்மீக வாழ்வில் ஆர்வமுள்ளவன் ஆண்டவரிடம்
விசுவாச வாழ்வு சார்ந்த உதவிகளைக் கேட்பான்.
"தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! "
(லூக்கா நற்செய்தி 11:13)
விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது உறுதி!
நாமும் கேட்போம்.
விசுவாசத்தோடு கேட்போம்.
விசுவாச வாழ்வுக்கு அவசியமான உதவிகளைக் கேட்போம்.
நாம் கேட்பது உறுதியாகக் கிடைக்கும்.
கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment