"இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.
(லூக்கா நற்செய்தி 11:29)
இன்றைய உலகம் உண்மையை விட அடையாளங்களை நம்புகிறது.
வேலைக்கான நேர்காணலுக்குச் செல்லும்போது நாம் எவ்வளவு படித்திருந்தாலும் நாம் வாயினால் உண்மையைச் சொன்னால் நம்ப மாட்டார்கள்.
அதற்கான அடையாளத்தை
(Certificate) காண்பித்தால் தான் நம்புவார்கள்.
ஆனால் உண்மை அடையாளத்தில் இல்லை.
அடையாளம் இல்லை என்றாலும் உண்மை உண்மைதான்.
ஆன்மீகத்தில் உண்மையை ஏற்றுக் கொள்ள விசுவசிக்க வேண்டும்.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள உறவு ஆன்மீக உறவு. அன்பை அடிப்படையாகக் கொண்டது.
ஒரு கணவன் தன் மனைவிக்குப் பிறந்த பிள்ளையைத் தன் பிள்ளை என்று ஏற்றுக் கொள்ள அடையாளத்தைக் கேட்பதில்லை, மனைவியை நம்புகிறான்.
தாய் தன் பிள்ளையிடம்,
"அம்மா, சொல்லு" என்று தன்னை அறிமுகப்படுத்தும் போது,
"நீங்கள் என் அம்மா என்பதற்கு என்ன அடையாளம்" என்று கேட்பதில்லை. அம்மா என்று ஏற்றுக் கொள்கிறது.
பெற்றோரை நம்பி வளரும் குழந்தைதான் உண்மையான வளர்ச்சியைப் பெறுகிறது.
ஆன்மீகத்தில் நம்பிக்கைக்கு உரியவர்கள் சொல்லும்போது நம்பி ஏற்றுக் கொள்வதுதான் விசுவாசம்.
இயேசுவின் காலத்திய நோயாளிகள் அவரை விசுவசித்ததால் குணம் பெற்றார்கள்.
அவர்களுடைய விசுவாசம் தான் அவர்களுக்கு குணம் அளித்தது என்று இயேசுவே சொல்கிறார்.
ஆனால் இயேசுவை விசுவசிக்க விரும்பாதவர்களும் அவர் காலத்தில் இருந்தார்கள்.
பரிசேயர்கள், சது சேயர்கள், மறைநூல் அறிஞர்கள் அவரை விசுவசிக்க விரும்பவில்லை.
விசுவசியாதவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள்.
இயேசு அவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார்.
கப்பலிலிருந்து கடலுக்குள் வீசப் பட்ட யோனாவை ஒரு பேரிய மீன் விழுங்கியது.
மூன்று நாட்கள் அவரைத் தன் வயிற்றில் வைத்திருந்து மூன்றாம் நாள் கரையில் கக்கியது.
இயேசு மரித்து அடக்கம் செய்யப் பட்டு மூன்றாம் நாள் உயிக்கப் போவதை தன்னை ஏற்றுக் கொள்ள அடையாளமாகக் கூறுகிறார்.
இயேசுவின் உயிர்ப்பு நமது விசுவாசத்தின் மையம்.
அவரது உயிர்ப்பின் மூலம் சாவை வென்றார்.
நமது ஆன்மீக சாவின் மேலான வெற்றிக்கும், அதாவது, நமது பாவத்தை வென்று மீட்படையவும்
இயேசுவின் மரணமும் உயிர்ப்பும் தான் காரணம்.
இயேசு ஒரு முறை தான் மரித்தார், ஒரு முறை தான் உயிர்த்தார்.
நாம் இயேசுவை விசுவசிக்கிறோம்.
கத்தோலிக்கத் திருச்சபை நமது தாய் என்பதையும் விசுவசிக்கிறோம்.
கத்தோலிக்கத் திருச்சபை மூலமாக இயேசு நமக்கு அறிவிப்பவை யாவற்றையும் அடையாளம் எதுவும் கேட்காமல் விசுவசிக்கிறோம்.
நமது விசுவச சத்தியங்கள் திருச்சபையால் தரப்பட்டவை.
நாம் வாசிக்கும் பைபிள் திருச்சபையால் தரப்பட்டது.
கத்தோலிக்கத் திருச்சபை மீது நமக்கு இருக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் பைபிள் வசனங்களுக்கு திருச்சபை கொடுக்கும் விளக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.
திருச்சபையின் பாரம்பரியத்தையும் விசுவசிக்கிறோம்.
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையை ஏற்றுக் விரும்பாமல் வெளியேறிய பிரிவினை சபையார் வைத்திருப்பது கத்தோலிக்கத் திருச்சபை தந்த பைபிள் அல்ல.
நாற்காலியின் ஒரு காலை எடுத்து விட்டு, "இதுதான் நாற்காலி" என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
அதில் உட்கார்ந்தால் கீழே விழ வேண்டியிருக்கும்.
கத்தோலிக்கத் திருச்சபை தந்த பைபிளில் மொத்தம் 73 புத்தகங்கள் உள்ளன.
விசுவாசத்துக்கு விசுவாசம் தான் அடிப்படை.
கத்தோலிக்கத் திருச்சபை நம்பிக்கைக்கு உரியது என்று விசுவசிக்கிறோம்.
அதன் அடிப்படையில் தான் திருச்சபை கூறுவதை விசுவசிக்கிறோம்.
'' காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்."
(அரு. 20:29)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment