"ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். "
(லூக்கா நற்செய்தி 18:13)
நமது செபங்களிலே மிகச்
சிறியதும், மிகச் சக்தி வாய்ந்ததுமான செபம்,
"கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்." என்ற மன வல்லப செபம் தான்.
இந்த சிறிய செபத்தில்,
1. நம்மைப் படைத்து பராமரித்து வரும் கடவுளை ஏற்றுக் கொள்கிறோம்.
2. நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
3. கடவுள் இரக்கம் உள்ளவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
4. கடவுள் நமது பாவங்களை மன்னிப்பார் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
5. பாவத்தில் விழுந்தாலும் கடவுள் உதவியோடு எழுந்து நடக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
பாவத்தில் விழுந்தவர்கள் எழுந்து நடக்க இயேசு உதவுவார் என்பதற்கு அடையாளமாகத்தான் அவர் நமது பாவங்களுக்காகப் பரிகாரம் செய்து நம்மை மீட்பதற்காக பாரமான சிலுவையச் சுமந்து சென்ற போது மூன்று முறைகள் சிலுவையின் பாரத்தால் கீழே விழுந்து எழுந்து நடந்தார்.
"இறைவா, பாவத்தில் விழாமல் புண்ணிய வாழ்க்கை வாழ்ந்து உம்மோடு பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என்னைப் படைத்தீர்.
ஆனால் நான் உமது விருப்பத்துக்கு மாறாக பாவத்தில் வீழ்ந்தேன்.
இதற்கு எனது பலகீனத்தைக் காரணம் சொல்ல மாட்டேன்.
ஏனேனில் எனது ஆன்மீக சக்தியை அதிகரிக்க நீர் அருள் வரங்களைக் தந்து உதவுவதோடு, ஆன்மீகச் சத்துணவாக உம்மையே எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர்.
எனது பாவத்துக்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம்.
ஆண்டவரே நீர் அளவில்லாத இரக்கம் உள்ளவர்.
"எழுந்து வா, மகனே." என்று உதவிக் கரம் நீட்டுகிறீர்.
இவ்வளவு அன்பும் இரக்கமும் உள்ள தந்தைக்கு விரோதமாக பாவம் செய்து விட்டேனே என்று உண்மையாகவே மனத்தாபப் படுகிறேன், அப்பா.
உமது அளவு கடந்த இரக்கத்தால் என் மீது இரங்கி என் பாவங்களை மன்னியும், தேவனே.
நான்பாவி, பெரும் பாவி.
ஆனால் உமது இரக்கம் என் பாவத்தை விடப் பெரியது.
பாவிகளாகிய எங்கள் பாவங்களை மன்னிப்பதற்கென்றே நீர் நிறுவியுள்ள பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் என் பாவங்களை அறிக்கையிடுகிறேன்.
இனி பாவம் செய்வதில்லை என்று உறுதி கூறுகிறேன்.
என்னைப் பாவத்தில் விழாதபடி பாதுகாக்க உமது அருள் வரத்தைத் தந்தருளும், சுவாமி.
எனக்கு உத்தம மனத்தாபத்தைத் தந்து உதவிய உமக்கு நன்றி."
பாவம் கடவுளுக்கு விரோதமாகச் செய்யப் படுகிறதா?
நமது அயலானுக்கு விரோதமாகச்
செய்யப் படுகிறதா?
நமக்கு விரோதமாகச்
செய்யப் படுகிறதா?
கடவுளுக்கு விரோதமாகச் செய்யப் படுவது தான் பாவம்.
அவரது கட்டளைகளை மீறுவது தானே பாவம்.
ஆனால் கடவுள் நமது பாவத்தால் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்.
அவர் மாறாதவர்.
ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது பாதிக்கப்பட்டது அவர்களும் அவர்களது பிள்ளைகளாகிய நாமும் தான்.
ஆகவே கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்யும்போது நமக்கும் விரோதமாகப் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஏனெனில் பாவம் இல்லாமல் இறந்தால் விண்ணக பேரின்ப வாழ்வை அடையப் போவதும், பாவத்தோடு இறந்தால் விண்ணக பேரின்ப வாழ்வை இழக்கப் போவதும் நாம்தான்.
மண்ணை அள்ளித் தன் முகத்தில் எறிந்தால் எறிந்தவன் கண் தான் தெரியாது.
பத்துக் கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் தான் இறைவனைச் சார்ந்தவை.
மற்ற ஏழும் நமது அயலானைச் சார்ந்தவை.
அவற்றை மீறும் போது நமது அயலானுக்கு எதிராகச் செயல்படுகிறோம்.
நமது அயலான் கடவுளுடைய பிள்ளையாக இருப்பதால் அவனுக்கு எதிராகச் செயல்படும் போது கடவுளுக்கு எதிராகச் செயல்படுகிறோம்.
அயலானுக்கு எதிராகப் பாவம் செய்து விட்டால்,
அந்தப் பாவத்துக்கு மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் முதலில் அயலானிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு அப்புறம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அயலானோடு சமாதானமானால்தான் கடவுளோடு சமாதானமாக முடியும்.
அயலான் நமக்கு எதிராகப் பாவம் செய்து விட்டால்,
அவன் நம்மிடம் மன்னிப்புக் கேட்காவிட்டாலும் நாம் அவனை மன்னித்து விட வேண்டும்.
அவனை மன்னித்தால் தான் கடவுள் நம்மை மன்னிப்பார்.
பிறர் மீது வன்மத்தை வைத்துக்கொண்டு பாவ சங்கீர்த்தனம் செய்தால் பயன் இல்லை.
"எங்களுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் பாவங்களை மன்னியும்" என்று தினமும் கடவுளிடம் வேண்டுகிறோம்.
"ஆண்டவரே, எனக்கு எதிராகப் பாவம் செய்த அனைவரையும் நான் மன்னித்து விட்டேன். தயவுசெய்து நீர் எனது எல்லா பாவங்களையும் மன்னியும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment