Tuesday, March 25, 2025

"எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்."(மத்தேயு நற்செய்தி 5:19)

"எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்."
(மத்தேயு நற்செய்தி 5:19)

நல்லொழுக்கப் பாட வகுப்பில் ஆசிரியர்,

"உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நல்லொழுக்கம்.

நல்லொழுக்கம் உள்ளவர்களாக வாழ ஆன்மீகம் சார்ந்த இறைவனது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்,

மனசாட்சியின் குரலுக்கு செவி கொடுத்து அதன்படி வாழ வேண்டும்.

உடல் ஆரோக்கியம் உள்ளவர்களாக வாழ உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவை உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை.

பீடி, சிகரட் போன்றவைகளைக் கையால் தொடக்கூட கூடாது......"

அன்று நண்பகல் உணவுக்குப் பின் ஒரு மாணவன் பாடத்தில் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆசிரியரைத் தேடி ஆசிரியர்கள் அறைக்குச் சென்றான்.

சென்றவன் திரும்பி விட்டான்.

சக மாணவன் ஒருவன்,

''என்னடா, சந்தேகம் தீர்ந்ததா?"

"இல்லை. புதியதொரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது."

''ஆசிரியரைப் பார்த்தாயா?"

"பார்த்தேன், ஆகவேதான் புதிய சந்தேகம்."

"என்னடா சொல்ற?"

"ஆசிரியர் கையில் சிகரெட். வாயிலிருந்து சுருள் சுருளாகப் புகை. அறை முழுவதுமே புகை.
அவர் போதித்ததையே செய்ய முடியாத அவரால் எப்படி நம் சந்தேகத்தைத் தீர்க்க முடியும்?"

சொல்லும் செயலும் ஒத்து வராத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல!

ஆண்டவர் இயேசு தான் போதித்ததை எல்லாம் அவரது வாழ்க்கையில் நடந்து காட்டினார்.

"ஏழைகள் பாக்கியவான்கள்" என்றார்.

அவரே ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தார்.

"பகைவர்களை நேசியுங்கள்." என்றார்.

நமது பாவங்களால் அவரைப் பகைத்த நம்மை நேசித்ததுமல்லாமல் நாம் செய்த பாவங்களுக்கு அவர் உயிரைக் கொடுத்து பரிகாரம் செய்தார்.

"உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." என்றார்.

அவரைக் கற்றூணில் கட்டி வைத்து அடித்தவர்களையும், முள்முடி சூட்டி அடித்தவர்களையும், 
அவர்மீது பாரமான சிலுவையை ஏற்றியவர்களையும், 
சிலுவையில் அறைந்தவர்களையும், 
அவரது பாடுகளுக்குக் காரணமான அனைவரையும் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதே மன்னித்து விட்டார்.

நாம் அவருடைய சீடர்கள். அவரது நற்செய்தியை நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிக்கப் கடமைப் பட்டவர்கள்.

நாம் முதலில் நற்செய்தியை நமது வாழ்வாக மாற்றுவோம்.

அப்புறம் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்போம்.

மற்றவர்கள் நமது வாழ்வில் இயேசுவைக் காண வேண்டும்.

அப்போது தான் நாம் போதிப்பதை மற்றவர்கள் நம்புவார்கள்.

சாதித்துப் போதிப்பவர்களுக்குதான் விண்ணகத்தில் முதல் இடம்.

லூர்து செல்வம்.

1 comment: