"ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்றார்."
(மத்.26: 24)
"தாத்தா, போன வாரம் நீங்கள் என்னோடு பேசும்போது யூதாஸ் பணத்துக்காக மட்டுமே இயேசுவை காட்டிக் கொடுத்தான்.
ஆகவே இயேசு மரண தீர்ப்பு இடப்பட்டு விட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன்
"மாசில்லா ரத்தத்தை காட்டி கொடுத்து விட்டேனே!"
என்று மனம் வருந்தி பணத்தை வீசி எறிந்து விட்டு நாண்டு கொண்டு செத்தான்.
ஆனாலும் தனது பாடுகளுக்குக் காரணமான அனைவரையும் மன்னித்த இயேசு
யூதாசின் இறுதி வினாடியில் அவனுக்கு பாவத்திற்கான மனஸ்தாபத்தை கொடுத்திருப்பார்,
அவனும் மனஸ்தாபப்பட்டிருப்பான் கடவுளும் அவனை மன்னித்திருப்பார்,
ஆகவே அவன் நரகத்துக்கு போயிருக்க மாட்டான்,
என்று சொன்னது நினைவிருக்கிறதா?"
"'ஆமா. அதற்கு என்ன இப்போ?"
"அதை என் நண்பனிடம் சொன்னேன்.
அவன் "ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்ற இயேசுவின் வார்த்தைகளை காரணம் காட்டி
யூதாஸ் மீட்பு அடைந்திருக்க மாட்டான் என்கிறான்.
அதற்கு உங்கள் பதில் என்ன?"
"'ஒருவரது வார்த்தைகளுக்கான பொருளை எதை அடிப்படையாக வைத்துக் காண வேண்டும்?"
"சொன்னவரின் குணத்தை."
"'நீ பாடம் படிக்காதிருப்பதை பார்த்து உன்னுடைய அப்பா,
'இப்படி படிச்சா கட்டாயம் நீ பரிட்சையில் Fail ஆகி விடுவாய்"
என்று சொன்னால் அது சாபமா?"
"மகன் மீது அன்புள்ள தகப்பனால் மகனை சபிக்க முடியாது. நன்கு படிக்க வேண்டியது அவசியத்தை மகனுக்கு சொல்கிறார். அவ்வளவுதான்."
"'அப்படியானால் இயேசு அன்பே இல்லாதவர் என்று உன் நண்பன் நினைக்கிறானா?"
"அப்படி நினைத்திருக்க மாட்டான். அவன் வசனத்தை மட்டும் பார்த்திருப்பான்."
"'ஐயோ கேடு என்ற வார்த்தைகளை இயேசு வேறு எங்காவது பயன் படுத்தியிருக்கிறாரா?"
"பரிசேயர்களை பற்றி, மறைநூல் அறிஞர்களைப் பற்றி பேசும்போது இவ்வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்."
"'இயேசுவுக்கு அவர்கள் மீது அன்பு இல்லையா?"
"இயேசு கடவுள். அவரால் படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் அளவு கடந்த விதமாக அன்பு செய்கிறார்.
அவரால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.
அன்பு அவருடைய இயல்பு."
"'பிறகு ஏன் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்?"
"அவர்களுடைய வெளிவேடக்காரத் தனத்தின் தீமையைச் சுட்டிக் காட்ட, அவர்களை நல்லவர்களாக மாற்ற."
"'அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு யார் தெரியுமா?"
"தெரியுமே. யூதர்களின் தலைமைச் சங்க உறுப்பினர். ஒரு மறை நூல் அறிஞர். அவர் இயேசுவைப் பின்பற்றியவர்.
அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். இயேசு மரித்தபின் அவரது உடலை வாங்கி கல்லறையில் அடக்கம் செய்தவர் அவர்தான்."
"'அவர் மீட்படைந்திருப்பார் என்று நம்புகிறாயா? அவர் ஒரு பரிசேயர்."
"உறுதியாக நம்புகிறேன்."
"' ஆக, 'ஐயோ கேடு' என்ற வார்த்தைகளை இயேசு யாரையும் சபிப்பதற்காகப் பயன்படுத்தவில்லை.
சம்பந்தப்பட்டவர்களின் குற்றத்தின் கனாகனத்தை சுட்டிக் காண்பிக்கவே பயன்படுத்தினார்.
இப்போ சொல்லு, இயேசு யூதாசை பற்றி பேசும்போது ஏன் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார்?"
"குருவைக் காட்டிக்கொடுத்தல் என்ற குற்றத்தின் கனாகனத்தைச் சுட்டிக் காண்பிக்கவே.
அது சரி. ஏன் "அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" என்று சொன்னார்?"
"'யூதாஸ் தானாகவே பிறந்தானா?"
''இல்லை. கடவுள் படைத்ததனால் பிறந்தான்."
"'இயேசு, 'நான் அவனைப் படைக்காதிருந்தால் நலமாயிருந்திருக்கும்' என்று சொல்வாரா?"
"கட்டாயம் சொல்ல மாட்டார். கடவுளால் தவறு செய்ய முடியாது.
செய்ய முடியாத தவறைச் செய்யாதிருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று எப்படிச் சொல்வார்?
இதுவும் யூதாஸ் செய்யவிருந்த தவற்றின் கனாகனத்தை சுட்டிக் காட்டவே.
இப்போது புரிகிறது. இயேசுவின் வார்த்தைகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று புரிகிறது.
தாத்தா, இதே மாதிரியான வசனங்கள் பைபிளில் வேறு எங்காவது இருக்கின்றனவா?"
"'இதே மாதிரியான என்றால்?"
" பைபிளை ஒழுங்காக வாசிக்க தெரியாதவர்கள் தவறாக புரிந்து கொள்ளும் வசனங்கள்."
"'பைபிளைத் திறந்து தொடக்கநூல் 6 ஆம் அதிகாரம்
6ஆம் வசனத்தை வாசி"
"மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது."
"'இப்போ கவனி. கடவுளால் மனம் வருந்த முடியுமா?"
"அவர் மகிழ்ச்சியே உருவானவர். அவரால் ஒருபோதும் மனம் வருந்த முடியாது."
"'பிறகு ஏன் மோசே ஏன் இவ்வாறு எழுதினார்?"
"மண்ணுலகில் மனிதர் செய்த தீமைகளின் கனாகனத்தை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி எழுதினார்."
"'ஒரு தீமையின் தன்மையை புரிந்து கொள்ள அதை மிகைப்படுத்தி கூறுவதும்,
நன்மையின் தன்மையை புரிந்து கொள்ள உயர்வு நவிர்ச்சி அணியை பயன்படுத்துவதும்
மனிதர்களுக்கு வழக்கம்.
பைபிள் மனித மொழியில் எழுதப் பட்டிருக்கிறது.
பைபிள் வாசிப்பவர்கள் உண்மையை அறிந்து கொள்ளும் நோக்கோடு வாசிக்க வேண்டும்.
மனதில் ஒரு தவறான எண்ணத்தை வைத்துக் கொண்டு அதற்கு ஆதாரம் தேட பைபிள் வாசிக்கக் கூடாது.
நமது பிரிவினைச் சகோதரர்கள் இப்படித்தான் வாசிக்கிறார்கள்.
அவர்களுக்கு அன்னை மரியாளைப் பிடிக்காது.
இயேசு தன் தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டு அதற்கான ஆதாரங்களை பைபிளில் தேடி அலைகிறார்கள்.
கானாவூர்க் கல்யாணத்தில் இயேசு தன் அன்னையை, "பெண்ணே" (woman) என்று அழைத்ததை சுட்டி காண்பித்து,
'இயேசு மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் 'தாயே' என்றல்லவா அழைத்திருப்பார்?' என்கிறார்கள்.
ஆனால் 'பெண்ணே' என்ற வார்த்தையில் அடங்கி இருக்கும் மறை உண்மை நமக்குத் தெரியும்.
"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் உன் தலையை நசுக்குவாள்.
(தொடக்கநூல் 3:15)
மேற்படி வசனத்தில் சாத்தானின் தலையை நசுக்கப் போவதாக கூறப்பட்டிருக்கும் பெண் தான் அன்னை மரியாள் (சென்மப்பாவ மாசின்றி பிறந்தவள்) என்ற மறை உண்மையை நமக்குப் புரிய வைக்கவே இயேசு 'பெண்ணே' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
அன்னை மரியாள் இரண்டாவது ஏவாள்.
அருள் நிறைந்தவள்.
இந்த மறை உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிரிவினை சபையினர் தங்கள் விருப்பத்திற்கு அதற்கு பொருள் கொடுக்கின்றனர்.
நமது தாயைப் பற்றி பிள்ளைகளாகிய நமக்குத் தெரியும், மற்றவர்களைப் பற்றி நமக்கு கவலை இல்லை.
ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்று கூறியபோது,
இயேசு தம் சீடர் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே.
விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்று கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி
பிரிவினை சகோதரர்கள் இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை தனது தாய்க்குக் கொடுக்கவில்லை, நாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இவர்கள் புத்தி இருந்தும் பயன்படுத்த தெரியாதவர்கள்.
பட்டினி கிடந்த ஒருவர் தனக்கு உணவு கொடுத்த பெண்ணைப் பார்த்து,
"நீங்கள் எனது தாய்" என்று கூறினால் தன்னை பெற்ற தாயை அவமதிப்பதாக அர்த்தமா?
இயேசு தனது சீடர்களை உயர்த்திப் பேசுவதால் தாயைக் குறைத்துப் பேசுவதாக அர்த்தம் ஆகாது.
அன்னை மரியாள் இயேசுவைப் பெற்றாள்,
சீடர்கள் அவரது வார்த்தைகளைச் செயல்களாகப் பெறப் போகிறார்கள்.
இயேசு தனது வார்த்தைகளால் வெளிப்படுத்துவது தனது தந்தையின் சித்தத்தைத் தான்.
அதை ஏற்றுக்கொள்ளும் தனது சீடர்கள் தந்தையின் சித்தத்தை தங்கள் வாழ்வாக்கப் போகிறார்கள்.
அன்னை மரியாள் தந்தையின் சித்தத்தை ஏற்றுக் கொண்டதால் தான் இயேசுவை பெற்றெடுத்தாள்.
சீடர்களும் தந்தையின் சித்தத்தை ஏற்றுக்கொண்டு, இயேசுவைப் பெற்று
உலகுக்குத் தரப்போகிறார்கள்.
இதனால் சீடர்கள் தாய்க்குரிய பெருமையை பெறுகிறார்கள்.
இன்று திருப்பலி பீடத்தில் இயேசுவைப் பெற்று நமக்குத் தருபவர் யார்?
குருவானவர் இயேசுவின் சீடர் தானே.
தந்தையின் சித்தப்படி நடந்தால் நாமும் இயேசுவுக்கு தாய் தான்.
தாயைப் போல பிள்ளை, அன்னை மரியாளைப் போல நாமும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment