"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்."
(மத்தேயு நற்செய்தி 25:40)
"எல்லாவற்றுக்கும் மேலாக என்னை (இறைவனை) நேசியுங்கள்"
என்று கற்பித்த இயேசு,
"நீங்கள் உங்களை நேசிப்பது போல உங்கள் அயலானையும் நேசியங்கள்"
என்றும் கற்பித்தார்.
அயலான்கள் என்று நாம் நினைப்பவர்கள் இயேசுவின் சகோதர சகோதரிகள்.
விண்ணகத் தந்தை நமது தந்தை,
அந்த உறவின் அடிப்படையில் இயேசு நமது மூத்த சகோதரர், அவரால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் நமது சகோதர சகோதரிகள்.
விண்ணிலும், மண்ணிலும் வாழும் அனைவரும் இறைக் குடும்பத்தின் உறுப்பினர்கள்.
"புனிதர்களுடைய சமூக உறவை விசுவசிக்கிறேன்."
நம்மை படைத்த இறைவனை நமது புறக்கண்ணால் பார்க்க முடியாது.
அகக் கண்ணால் மட்டுமே உணர முடியும்.
ஆனாலும் நம்மை படைத்தவரை அவரால் படைக்கப்பட்வர்களில் காணலாம்.
தந்தையை நேசிப்பவர்களால் தங்களது சகோதர சகோதரிகளை நேசிக்காமலிருக்க முடியாது.
இறைவனை நேசிக்கும் போது நமது அயலான்களையும் நேசிக்கிறோம்.
நமது அயலானை நேசிக்கும் போது இறைவனையும் நேசிக்கிறோம்.
தந்தைக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுக்க ஆசைப்பட்டால்
நமது அயலானுக்கு அதைக் கொடுத்தால் அவர்கள் மூலம் தந்தையே அதை ஏற்றுக் கொள்கிறார்.
நமது அயலானுக்குக் கொடுக்கிறோம் என்றாலும், தந்தைக்குக் கொடுக்கிறோம் என்றாலும் பொருள் ஒன்று தான்.
ஆகவே தான் இயேசு,
"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்." என்கிறார்.
அயலானுக்கு ஏதாவது கொடுக்கும்போது, அல்லது, எதையாவது செய்யும் போது அதை இறைவனுக்காக கொடுக்க வேண்டும், செய்ய வேண்டும்.
நமது சுய திருப்திக்காக அல்லது சுய விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடாது.
படைத்தவர் இறைவன், ஆகவே புகழும், மகிமையும் அவருக்கே.
ஒருவருக்கு உரியதை மற்றவர்கள் எடுத்தால் அதற்குப் பெயர் அபகரித்தல்.
"சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்"
இவை இயேசுவின் வார்த்தைகள்.
(மத்தேயு நற்செய்தி 22:21)
கடவுளுக்கு உரியவை எவை?
நாம் வாழும் பிரபஞ்சத்தை
"உண்டாகுக" என்ற ஒற்றை வார்த்தையால் படைத்தவர் கடவுள்.
எப்படி உலகரீதியாக ஒரு விவசாயி உழுது, விதைத்து, உரமிட்டு, நீர்ப்பாய்ச்சி பயிரிட்ட நிலத்திலுள்ள வருமானம் அவனுக்கு உரியதோ,
அதே போல
கடவுள் படைத்த பிரபஞ்சத்தில் அவருடைய அருளால் நிகழும் அத்தனை நன்மைகளுக்கும் அவர் ஒருவரே உரிமையாளர்.
விவசாயியின் உடல் உழைப்பால் வரும் வயல் வருமானம் உலகியல் ரீதியாக அவனுக்கு உரியது என்றாலும்,
ஆன்மீக ரீதியாக அது இறைவனுக்கு உரியது.
விவசாயி கடவுளுக்கு நன்றி கூற வேண்டும், ஏனைனில் நிலமும் அதிலிருந்து வருவதும் அவரது வல்லமையால் தான்.
நாம் கடவுளுக்குச் சொந்தம். நம்மைப் படைத்ததற்காகவும், பராமரித்து வருவதற்காகவும் அவருக்கு நன்றி கூற வேண்டும்.
நமது நன்றியை சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் செலுத்த வேண்டும்.
எப்படிச் செலுத்த வேண்டும்?
அதற்கும் கடவுள் வழி காட்டுகிறார்.
"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்."
"நீங்கள் எனக்குச் செய்ய வேண்டியதை என் சகோதரர், சகோதரிகளான உங்கள் அயலாருக்குச் செய்யுங்கள்."
ஆக நாம் நமது அயலாருக்கு நற்செயல் செய்து இறைவனுக்கு நம் நன்றியைத் தெரிவிப்போம்.
நமது அயலானுக்கு நன்மை செய்தால் அது இறைவனுக்கு கூறும் நன்றி.
நமது அயலானுக்கு எதிராகத் தீமை செய்தால்?
அது கடவுளுக்கு எதிரான பாவம்.
நமது அயலானை நேசித்தால் அது கடவுளுக்கு நாம் கூறும் நன்றி.
நமது அயலானை வெறுத்தால் அது கடவுளுக்கு எதிரான பாவம்.
நமது அயலானை துன்புறுத்தினால் அது கடவுளுக்கு எதிரான பாவம்.
நமது அயலானுக்கு எதிராக என்ன தீமை செய்தாலும் அது கடவுளுக்கு எதிரான பாவம் தான்.
நமது அயலானுக்கு எதிராக தீமை செய்திருந்தால் முதலில் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அடுத்து இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இறைவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் நமது பிறருக்குச் செய்வோம்.
இரண்டு தண்டவாளங்களில் ஒன்று சரியில்லை என்றாலும் இரயில் ஓடாது.
ஆன்மீகத்திலும் அப்படித்தான்.
இயேசு தந்த இரண்டு கட்டளைகளில் ஒன்றை மீறினாலும் மீட்பு கிடைக்காது.
கடவுளை நேசிக்காமல் பிறரை நேசிக்க முடியாது.
பிறரை நேசிக்காமல் கடவுளை நேசிக்க முடியாது.
கடவுளையும், பிறரையும் நேசிப்பது தான் உண்மையான நேசம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment