Saturday, March 22, 2025

"அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" (லூக்கா நற்செய்தி 13:9)

"அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" 
(லூக்கா நற்செய்தி 13:9)

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்; "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. 
(லூக்கா நற்செய்தி 13:6)

இந்த உவமையில் திராட்சைத் தோட்டம் இஸ்ரேல் நாட்டைக் குறிக்கிறது.

அத்தி மரம் அங்கு வாழ்ந்த இஸ்ரேல் மக்களைக் குறிக்கிறது.

மூன்று ஆண்டுகளாகப் பழம் இல்லாத அத்திமரம் பாவ நிலையிலிருந்து மனம் திரும்பாத மக்களைக் குறிக்கிறது.

ஆன்மீக ரீதியில் கனிகள்  ஆன்மீக நோக்கத்தோடு மக்கள் செய்யும் நற்செயல்களைக் குறிக்கும்.

இயேசு தனது நற்செய்தியால் காய்க்காத அத்தி மரத்துக்கு உரமிட்டு, தனது அருள் என்னும் நீர்ப் பாய்ச்சுகிறார்.

நற்செய்தி உரத்தை அருள் நீரால் உண்டு மரம் காய்க்க வேண்டும்,

அதாவது,

மக்கள் மனம் திரும்பி ஆன்மீகக் கனிகளாகிய நற்செயல்கள் செய்ய வேண்டும்.

தவறினால் விண்ணக வாழ்வை இழக்க நேரிடும்.

இயேசு அவர்களுக்கு மனம் திரும்ப கால அவகாசம் கொடுக்கிறார்.


 சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த யூதர்களான கலிலேயரைப் பிலாத்து கொன்ற  செய்தியை அறிவித்தபோது அவர் அத்தி மர உவமையைக் கூறினார்.

மனம் திரும்பாத மற்ற யூதர்களும் அழிவார்கள் என்ற கருத்தை எடுத்துரைக்கவே இந்த உவமை.

இது மனம் திரும்பாத  யூதர்களுக்கு மட்டுமல்ல,  மனம் திரும்பாத அனைத்து மக்களும் இந்த உவமை பொறுந்தும்.

நாம் அனைவரும் பாவிகள்தான்.

நாம் மனம் திரும்ப வேண்டும் என்று இயேசு அழைக்கிறார். 

மனம் திரும்பி நற்செயல்களாகிய கனிகளைக் கொடுக்க வேண்டும்.

அதற்கு உதவிகரமாக  இருப்பதற்காகத்தான் இயேசுவின்  நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 

அது நம் உள்ளத்தில் செயல்புரிவதற்காக ஆண்டவர் தனது அருள் வரத்தை அளிக்கிறார்.

ஆண்டவரின் அருள் உதவியோடு நாம் நற்செய்தியை நமது வாழ்வாக்க வேண்டும். 

அதாவது நமது வாழ்வு 
நற்செயல்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

நற்செய்தியை அறிந்தும், இயேசுவின் அருளைப் பெற்றும் நற்செயல்களாகிய கனிகளைக் கொக்காதவர்களால் மீட்புப் பெற முடியாது.

தினமும் நற்செய்தியை வாசித்தால் மட்டும் போதாது. 

தினமும் திருப்பலிக்குச் சென்று 
குருவானவரின் மறை‌ உரையைக் கேட்டால் மட்டும் போதாது.

இயேசுவின் திரு உடலை உணவாகப் பெற வேண்டுமென்றால் அவருடைய நற்செய்தியை வாழ்கின்றவர்களாக இருக்க வேண்டும். 

கேட்ட நற்செய்தியும், அருந்திய திருவிருந்தும் நமது வாழ்வில் ஆன்மீக வளர்ச்சியைத் தர வேண்டும்.

ஆன்மீக உணவை அருந்திய பின்பும் நமது ஆன்மா ஆன்மீகத்தில் வளரவில்லை என்றால் நாம் தகுந்த முறையில் திரு விருந்தை அருந்தவில்லை என்று அர்த்தம்.

அறிவதற்காக மட்டுமல்ல, வாழ்வதற்காகவும் நற்செய்தியை வாசிக்க வேண்டும்.

கிடைக்கிறது என்பதற்காக அல்ல, ஆன்மீகத்தில் வளர வேண்டும் என்பதற்காக திரு விருந்தை அருந்த வேண்டும். 

திரு விருந்தை அருந்துவோம். இறையருள் பெற்று வாழ்வோம்.

வெறும் அத்தி மரமாக அல்ல, கனிதரும் அத்தி மரமாக வாழ்வோம்.

நமது வாழ்வு மறு உலகில் இறைவனோடு தொடரும். 

லூர்து செல்வம்

No comments:

Post a Comment