"அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:24)
"நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்."
இவை நமது ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்.
நம் ஒவ்வொருவருக்காகவும் கூறப்பட்டவை.
உலக சமாதானம் குழந்தை இயேசு நமக்குத் தந்த நன்கொடை.
"நன் மனதோற்குச் சமாதானம் " என்ற வாழ்த்தோடுதான் இயேசு பெத்லகேமில் பிறந்தார்.
நல்மனதோர் யார்?
நல்லதை மட்டும் நினைக்கும் மனதினர்.
இவர்கள் இறைவனையும், அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்பவர்கள்.
இவர்கள் மனதில் அன்பைச் சார்ந்த எண்ணங்கள் மட்டுமே இருக்கும்.
அனைத்து மக்களுடனும் நல்ல உறவுடன் இருப்பார்கள்.
எல்லோருடனும் நல்ல உறவுடன் இருக்கும் நிலை தான் சமாதான உறவு.
கடவுள் மனிதனைப் படைக்கும் போது தன்னுடன் சமாதான உறவு உள்ளவனாகவே படைத்தார்.
ஆனால் மனிதன் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்த போது மனிதன் சமாதான உறவை இழந்தான்.
இழந்த சமாதான உறவை மீட்டுக் கொடுக்கவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.
நாம் பிறக்கும் போது நமது ஆன்மாவில் சென்மப் பாவம் இருப்பதால் நாம் சமாதான உறவில் இல்லை.
திருமுழுக்கப் பெறும் போது சென்மப் பாவம் மன்னிக்கப் பட்டு சமாதான உறவுக்குள் வருகிறோம்.
திருமுழுக்கப் பெறும் போது பெற்ற சமாதான உறவோடு வாழ வேண்டும்.
நாம் சாவான பாவம் செய்யும் போது நமது சமாதான உறவை இழக்கிறோம்.
இழந்த உறவை மீண்டும் பெற பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற வேண்டும்.
கடவுளோடு சமாதான உறவில் இருப்பது போல நமது அயலானோடும் சமாதான உறவில் இருக்க வேண்டும்.
பிறரன்புக்கு எதிராகப் பாவம் செய்தால் நமது பிறனோடு உள்ள சமாதான உறவை இழக்கிறோம்.
நாம் இறைவனிடம் மன்னிப்பு கேட்பது போல நமது பிறனிடமும் மன்னிப்புக் கேட்டு இழந்த உறவை மீட்டுக் கொள்ள வேண்டும்.
நாம் இறைவனோடும் அயலானோடும் சமாதான உறவில் இருந்தால் தான் நாம் அவருக்குக் கொடுக்கும் காணிக்கையை அவர் ஏற்றுக் கொள்வார்.
ஆகவே இறைவனோடும் அயலானோடும் சமாதான உறவை ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் இறைவனுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும்.
பாவ நிலையில் கோவில் உண்டியலில் போடும் பணம் காணிக்கை அல்ல.
ஆகவேதான்
'நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
(மத்தேயு நற்செய்தி 5:23,24)
நமது அயலான் மீது நமக்கு கோபம் இருந்தால் மட்டுமல்ல,
அயலானுக்கு நம் மீது கோபம் இருந்தாலும் நாம் தான் சமாதான உறவை ஏற்படுத்த வேண்டும்.
கடவுள் மாறாதவர். நம்மைப் படைத்தபோது நம்மை எப்படி நேசித்தாரோ அதே அளவுதான் நாம் பாவம் செய்யும்போதும் நேசிக்கிறார்.
நாம் தான் நமது பாவத்தினால் அவரை விட்டுப் பிரிந்து வந்து விடுகிறோம்.
ஆனால் கடவுளின் அன்பில் மாற்றமில்லை.
அதனால்தான் பிரிந்து வந்தவர்களைத் திரும்பவும் தன்னோடு சேர்த்துக் கொள்ள மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டுத் தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.
"உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.'' என்று சொன்ன இயேசு
அவர் மீது மனத்தாங்கலோடு இருந்த நம்மை அவருடைய நல்லுறவுக்குள் கொண்டுவர நம்மிடம் வந்தார்.
இன்றும் திவ்ய நற்கருணை மூலமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரையே நமக்கு உணவாகத் தந்து நம்மையும் வாழ வைத்துக்
கொண்டிருக்கிறார்.
நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவதன் மூலம் அவரது உறவுக்குள் திரும்புவோம்.
நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்வோம்.
ஆன்மீக வாழ்வில் வளர்வோம். இன்றும் என்றும் அவரது உறவில் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment