தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!
(மத்தேயு நற்செய்தி 7:11)
ஒரு உயர் நிலைப் நுழைவு வாயிலில் இப்படி ஒரு விளம்பரம் செய்யப் பட்டிருந்தது:
இன்று மாணவர் சேர்க்கை ஆரம்பமாகிறது.
ஒன்பதாவது வகுப்பில் சேர விரும்புவோர் வரவும்.
காலை பத்து மணிக்கே சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது.
பதினொரு மணியளவில் ஒரு தந்தை தன் மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக் கூடம் வந்தார்.
நேரே தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றார்.
"சார், என் மகனை ஒன்பதாவது வகுப்பில் சேர்க்க வேண்டும்."
"எட்டாவது வகுப்பு Record sheet ஐக் கொடுங்கள்?"
"அப்படின்னா?"
"எந்தப் பள்ளியில் எட்டாவது வகுப்புப் படித்தான்."
"அவன் இதுவரை எந்தப் பள்ளியிலும் படிக்கவில்லை."
"முதல் வகுப்பு?"
"அவன் படிக்கவேயில்லை. விளம்பரத்தைப் பார்த்து இந்தப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பில் சேர்க்கலாம் என்று ஆசைப்பட்டுக் கூட்டி வந்தேன்."
"ஐயா, முதலில் பையனை ஆரம்பப் பள்ளியில் சேருங்கள்.
ஐந்தாவது வகுப்பு முடித்த பின் கூட்டி வாருங்கள். 6வது வகுப்பில் சேர்த்துக் கொள்கிறேன்"
"நீங்கள் அப்படி விளம்பரத்தில் போடவில்லையே."
"நீங்கள் நான் சொன்னபடி செய்யுங்கள்."
பையனின் தகப்பனார் பள்ளிக்கூடம் போகாதவர், அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
விளம்பரத்துக்கும் தலைமை ஆசிரியர் கூறியதுக்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைத்துக் கொண்டு பையனோடு வீட்டுக்குப் போனார்.
" கேளுங்கள் கொடுக்கப் படும்" என்ற பைபிள் வசனத்தை வாசித்து விட்டு, கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டு
" கேட்டேன், கேட்டது கிடைக்க வில்லையே" என்று புலம்புவோர் இந்த தகப்பனாரைப் போன்றவர்கள் தான்.
ஒரு சவுளிக் கடையில் சேலைகள் பகுதியில்,
"எதை எடுத்தாலும் நூறு ரூபாய்."
அதை வாசித்த ஒரு மனிதர் அங்கு அமர்வதற்காக போட்டிருந்த ஒரு நாற்காலியை எடுத்து கடைக்காரரிடம், "இதை எடுத்துக் கொள்கிறேன்." என்று சொல்லிக் கொண்டு நூறு ரூபாயை நீட்டினாராம்.
"ஐயா சேலைகளில் எதை எடுத்தாலும் நூறு ரூபாய்.
நாற்காலி வந்தவர்கள் அமர்வதற்காக போடப்பட்டிருக்கிறது, விற்பனைக்காக அல்ல."
"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்னவர் மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு.
அவர் மனிதனாகப் பிறந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து அவற்றை மன்னித்து நம்மை பாவத்திலிருந்து மீட்க.
அவர் "கேளுங்கள்" என்று சொன்னது அவர் எதற்காக உலகிற்கு வந்தாரோ அது சம்பந்தப்பட்டவற்றைக் கேட்க.
அவரிடம் எதை எதை எல்லாம் கேட்கலாம்?
1. நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட வேண்டிய அருள் வரத்தைக் கேட்கலாம்.
2. நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கலாம்.
3. திரும்பவும் பாவத்தில் விழாதபடி நம்மைக் காப்பாற்ற வேண்டிய அருள் வரத்தைக் கேட்கலாம்.
4. இறைவனையும், பிறனையும் முழு மனதோடு நேசிக்கத் தேவையான அருள் வளத்தை கேட்கலாம்.
5. விண்ணக பாதையில் பாவமாசின்றிப் பயணிக்க உதவி செய்யும்படி கேட்கலாம்.
6. சிலுவையைச் சுமக்க போதிய ஆன்மீக சக்தியைத் தரும்படி கேட்கலாம்.
7. பரிசுத்தமாக வாழ்ந்து நல்ல மரணம் அடைய வரம் தரும்படி கேட்கலாம்.
8. அவருக்காக வாழ்ந்து மறு உலகில் அவரோடு வாழ வரம் தரும்படி கேட்கலாம்.
இயேசு மீட்பர். நாம் மீட்புப் பெற கேட்க வேண்டிய ஆன்மீக உதவிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
இந்த உதவிகளைக் கேட்கும் படி தான் ஆண்டவர் அறிவுறுத்தினார்.
அவர் தம்மிடம் கேட்கச் சொன்னது ஆன்மீக நன்மைகளை.
இவ்வுலகைச் சார்ந்த பொருட்கள் நமது ஆன்மீக வாழ்வில் உதவுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன.
உணவு - நான் உண்ணவும், மற்றவர்களுக்கு உண்ணக் கொடுக்கவும்.
பணம் - பிறரன்புப் பணிகளில் உதவ.
தேக ஆரோக்கியம்- தடங்கல் இன்றி இறைப் பணியாற்ற.
ஒவ்வொரு உலகப் பொருளுக்கும் ஒரு ஆன்மீகப் பணி இருக்கும்.
அவற்றை செய்ய நமக்கு உதவ பொருள் உதவி கேட்கலாம்.
ஆண்டவர் அருள் உதவியோடு பொருள் உதவியும் தருவார்.
நாம் கேட்கும் பொருள் உதவி ஆன்மீக வாழ்வுக்கு உதவாது
என்றிருந்தால் கேட்பதைத் தர மாட்டார்.
"கேளுங்கள் தரப்படும்" என்றால்
"உங்களது ஆன்மீக மீட்புக்கு தேவையானவற்றைக் கேளுங்கள், தரப்படும்." என்றுதான் பொருள்.
"தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!"
(மத்தேயு நற்செய்தி 7:11)
மனிதர்களாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு நல்லதை மட்டுமே கொடுக்க விரும்புகிறோம்.
நமது விண்ணகத் தந்தை நமக்கு எது நல்லதோ அதை மட்டுமே தருவார்.
நாம் கேட்பது நமது ஆன்மாவுக்குத் தீமை விளைவிப்பதாக இருந்தால் தரமாட்டார்.
ஆகவே நாம் கேட்டது கிடைக்காவிட்டால்
அது நமக்கு தீமை விளைவிக்கக் கூடியது
ஆகவே தான் தரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தராததுக்காக நன்றி கூற வேண்டும்.
ஆன்மீக உதவிகளை ஆர்வமுடன் கேட்போம், ஆண்டவரும் ஆசையுடன் தருவார்.
"ஆண்டவரே, நான் கேட்பது எனது ஆன்மாவுக்கு நலன் பயப்பதாக இருந்தால் தாரும்."
என்ற முன்னுரையோடு கேட்போம்.
நலன் பயப்பதாக இருந்தால் உறுதியாகக் கிடைக்கும்.
எப்போது கிடைக்கும்?
எப்போது நமக்குத் தேவையோ அப்போது கிடைக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment