Sunday, March 23, 2025

"அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்."(லூக்கா நற்செய்தி 4:30)



"அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்."
(லூக்கா நற்செய்தி 4:30)

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். 

"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் 



ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். " 

என்று வாசித்து விட்டு 

"நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். 

"இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினாலும் 

ஆன்மீக ரீதியாக அவர்களுக்கு விசுவாசம் ஏற்படவில்லை.

அவர்கள் அவரை யோசேப்பின் மகனாகப் பார்த்தார்கள், இறை மகனாகப் பார்க்கவில்லை.

அவர் மீது சீற்றங் கொண்டு

 எழுந்து, அவரை அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 

ஆக அவரது சொந்த ஊரினரே அவரைக் கொல்ல முயன்றனர்.

நமக்காகத் தன் உயிரைக் கொடுக்கவே உலகுக்கு வந்தாலும் அதற்குரிய நேரம் வரும் வரை பொறுத்திருக்க வேண்டியதிருந்தது.

அவராகக் கொடுத்தாலன்றி அவர் உயிரை யாராலும் எடுக்க முடியாது.

அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார். 

அவர்களால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவர் மீது விசுவாசம் கொள்ள முடியாமைக்கு எது காரணமாக இருந்திருக்கும்?

அவருக்கு முப்பது வயது ஆகும் வரை அவர் அவர்களோடு யோசேப்பின் மகனாகவே வாழ்ந்திருக்கிறார். 

அன்னை மரியாளின் தங்கை மரியாளின் (குளோப்பாவின் மனைவி.யோவான் நற்செய்தி 19:25) மக்களாகிய யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோரும் அவரோடு வாழ்ந்தவர்கள் தான்.

ஆக நாசரேத்தூர் மக்கள் அவரைத் தங்களோடு வாழ்ந்தவராகத்தான் கருதினார்கள்.

இயேசு முப்பது வயது வரை வாழ்ந்தது மறைந்த வாழ்வு.

அன்னை மரியாளுக்கும், யோசேப்புக்கு மட்டுமே அவர் இறைமகன் என்று தெரியும்.

சாத்தானுக்குக் கூட தெரியாது.
ஆகவே இயேசு நாற்பது நாட்கள் நோன்பிருந்த பின்

 அவர் மனிதனாகப் பிறந்த இறைமகன் தானா என்பதை உறுதி செய்து கொள்ள அது

"நீர் இறைமகன் என்றால்" என்று சொல்லி சோதனையை ஆரம்பித்தது.

"உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்று சொன்னவுடன் அவர் இறைமகன் என்பதை உறுதி செய்து கொண்டது.

அதன் பின்பு அவரைக் கொல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தது.

அதாவது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நமது மீட்புக்கு உதவி செய்ய ஆரம்பித்தது.

எந்த சாத்தான் நம்மைப் பாவத்தில் விழத்தாட்டியதோ அதே சாத்தான் இயேசு தனது சிலுவை மரணத்தால் நம்மை மீட்க உதவியது என்றால் ஆச்சரியமாக இல்லை!!!

இதன் மூலம் கடவுள் எல்லாம் வல்லவர், தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்கக் கூடியவர் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

நமது வட நாட்டில் கிறிஸ்தவ மத எதிர்ப்பாளர்கள் எத்தனை கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்திருப்பார்கள்!!!

அதனால் வேத சாட்சிகளாகக் கொல்லப் பட்ட அத்தனை பேரும் உலகத் துன்ப வாழ்வுக்கு "டாட்டா" காட்டி விட்டு நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைய அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள்!!!

வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை விட விசுவாசத்துக்காக மரித்தவர்கள் பாக்கியவான்கள்.

மத விரோதிகள் நம்மைக் கொன்று விடுவார்களே என்று பயப்பட வேண்டாம்.

மரணம் வரக்கூடிய நேரத்தில் தான் வரும்.

அது மத விரோதிகளால் வந்தால் நாம் பாக்கியவான்கள்.

வருவது வரட்டும்.

துன்பங்களா? நோய் நொடிகளா?

அவை உடலுக்கு வலியைக் கொடுக்கலாம், 

அவற்றைச் சிலுவைகளாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் அவை நாம் இறைவனோடு நெருக்கமாக வாழ நமக்கு உதவும் ஆசீர்வாதங்கள்.

யாரும் நம்மை அவமானப் படுத்துகிறார்களா?

அதை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால் அது அவமானம் அல்ல, ஆசீர்வாதம்.

யாராவது நம்மைப் பற்றி தப்பாக பேசுகிறார்களா ?

பரிசேயர்கள் இயேசுவைப் பற்றி பேசியதை விடவா அதிகமாக பேசிவிடப் போகிறார்கள்? 

இயேசு நமக்காக அவற்றைப் பொறுத்துக் கொண்டார். 

நாம் அவருக்காக அனைத்தையும் பொறுத்துக் கொள்வோம்.

இயேசுவுக்காக வாழ்பவர்களுக்கு உலகமே ஒரு ஆசீர்வாதம் தான்.

நாம் இறைவனுக்காக, ‌‌இறைவனுக்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment