"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."
(மத்தேயு நற்செய்தி 6:1)
"தாத்தா, "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."
என்று இயேசு சொன்னார்.
அதற்கு என்ன அர்த்தம்?"
"'ஒளியை யாரும் மறைக்க முடியாது.
ஒளி பட்ட பொருட்கள் நமது கண்களுக்குத் தெரியும்.
நமது ஒளியில் மக்கள் தாங்கள் பின்பற்ற வேண்டிய இயேசுவைக் காண்பார்கள்.
நாம் நமது சிந்தனை, சொல், செயல்களால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும்.
நமது நற்செயல்கள் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும்.
நமது நற்செயல்களைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டும்.
கண்டு நமது முன்மாதிரிகையைப் பின்பற்றி அவர்களும் இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
போதுமா?"
"நமது நற்செயல்களைப் பார்த்தால் தானே நம்மில் இயேசுவைக் காண முடியும்?
எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர்.
மரக்காலுக்குள் வைத்தால் விளக்கால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
இதெல்லாம் புரிகிறது.
ஆனால்
"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்."
இந்த வசனம் தான் புரியவில்லை.
மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் நம் அறச் செயல்களைச் செய்யாவிட்டால்
நம்மில் பிரதிபலிக்கும் இயேசுவை மக்கள் எப்படிப் பார்க்க முடியும்?"
"'உனக்கு இதுதான் பிரச்சினையா?
தினமும் சாப்பிடுகிறாயா?"
"தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறேன்."
"'ஏன் சாப்பிடுகிறாய்?"
"சாப்பிடாவிட்டால் எப்படி உயிர் வாழ முடியும்?"
"'கேள்விக்குப் பதில் சொல்லு."
"உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன்."
"'எப்படிப் பட்ட உணவைச் சாப்பிடுகிறாய்?"
"சத்துள்ள, ருசியான உணவைச் சாப்பிடுகிறேன்."
"'சத்துள்ள, சரி. எதற்கு ருசியான?"
'' ருசி இல்லாவிட்டால் எப்படிச் சாப்பிட முடியும்?"
"'ஒரு தட்டில் சத்துள்ள, ஆனால் ருசியில்லாத உணவு இருக்கிறது.
இன்னொரு தட்டில் இரசாயனப் பொருட்களால் ருசியேற்றப்பட்ட Fast food இருக்கிறது.
இரண்டில் எதைச் சாப்பிடுவாய்?"
"முதல் தட்டிலுள்ள உணவைத் தான் சாப்பிடுவேன்.
இரசாயனப் பொருட்களால் ருசியேற்றப்பட்ட Fast food உடல் நலத்துக்குக் கெடுதி, மருந்தே இல்லாத நோய்களை உண்டாக்கும்."
"'Very good. இப்போ நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் சொல்லி விடலாம்.
எங்கே, சொல்லு பார்ப்போம்."
"வழி தெரியவில்லை என்று சொன்னால் வழி காண்பிக்க
கூட வருவீர்கள் என்று நினைத்தேன்.
நீங்கள் வழியைச் சொல்லிவிட்டு இந்த வழியே போ என்கிறீர்கள்.
பரவாயில்லை. போகிறேன்.
உயிர் வாழச் சாப்பிட வேண்டும், ருசிக்காக மட்டும் சாப்பிடக் கூடாது.
ருசிக்காக மட்டும் சாப்பிட்டால் நீண்டநாள் உயிர் வாழ முடியாது,
நோய் வந்து குறுகிய காலத்துக்குள் சாக நேரிடும்.
அதேபோல கடவுளுக்காக அறச் செய்ய வேண்டும். அவற்றைப் பார்க்கும் மக்கள் நம்மில் கடவுளைக் காண்பார்கள்.
மக்கள் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அறச் செயல்களைச் செய்யக் கூடாது.
நமது நோக்கம் இயேசுவைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் நம்மை அல்ல.
அதாவது மக்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் முன் அறச் செயல்கள் செய்யக் கூடாது.
நாம் செய்வதை மக்கள் பார்ப்பார்கள்,
ஆனால், நம்மைப் பார்ப்பதற்காகச் செய்யக் கூடாது.
நமது செயல்களில் இயேசுவை, நம்மில் வாழும் இயேசுவைப், பார்ப்பதற்காகச் செய்ய வேண்டும்.
உயிர் வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும்,
சாப்பிடுவதற்காக உயிர் வாழக் கூடாது.
போதுமா? இன்னுங் கொஞ்சம் வேணுமா?"
"'ஒரு உதாரணம் கொடுத்து விளக்கு."
"மருத்துவ மனைக்குச் சென்று சுகமில்லாதவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவது ஒரு அறச் செயல்.
நாம் மனிதர்கள், ஆவி அல்ல.
நாம் போவதை, வருவதை மக்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
ஆனால் அவர்கள் பார்க்க வேண்டும், நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்லக் கூடாது.
மற்றவர்கள் வர்கள் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்றால் நாம் செல்வதற்கு ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் இல்லை.
நமது செயலின் தன்மையைத் தீர்மானிப்பது நமது உள்ளத்தில் உள்ள நோக்கம்.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்”
நமது மனதில் மாசில்லா விட்டால் நாம் செய்வது அறச் செயல்.
மனதில் தற்பெருமை என்ற பாவம் இருந்தால் நாம் செய்வது அறத்துக்கு எதிரான செயல்.
நம்மைப் பற்றி நாம் பெருமையாகப் பேசிக்கொண்டு திரியக் கூடாது.
மற்றவர்கள் பேச வேண்டும் என்று ஆசைப்படவும் கூடாது."
"'Good. ஒரு முறை ஒரு உபதேசியார் கோவில் கட்டுவதற்கு நன்கொடை பிரிக்கச் சென்றிருந்தார்.
வசதியுள்ள ஒருவர் வீட்டுக்குச் சென்று, நன்கொடை நோட்டை அவர் கையில் கொடுத்து விட்டு,
"நீங்கள் தரும் தொகையை எழுதுங்கள். ஐயாயிரம் ரூபாயும், அதற்கு மேலும் எழுதினால் உங்கள் பெயர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப் படும்." என்றார்.
அவர் நோட்டில் பெயர் எழுதி,
4500 என்று எழுதி, ரூபாயைக் கையில் கொடுத்து விட்டார்.
"இன்னும் 500 எழுதினால் உங்கள் பெயர்......"
"மன்னிக்கவும், நான் கொடுப்பது கோவிலுக்குக் காணிக்கை, கல் வெட்டுக்கு அல்ல."
தனது பெயரை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கொடுத்தால் அது அறச்செயல் அல்ல.
"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.
செய்தால் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது." என்று ஆண்டவர் கூறுகிறார்.
நமது ஒவ்வொரு சொல்லும் விண்ணகத் தந்தையின் மகிழ்ச்சிக்காக இருக்க வேண்டும்,
நம்மை நாமே மகிழ்ச்சிப் படுத்துத்துவதற்காக அல்ல.
நல்ல சமாரியன் உவமையில் அடிபட்டுக் கிடந்த மனிதனுக்கு உதவி செய்த சமாரியன் அவன்மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே உதவி செய்தான்.
அன்பிலிருந்து பிறந்தது இரக்கம்.
இறைவன் நம்மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக பாவத்தால் அருள் வாழ்வை இழந்த நம்மீது இரங்கி மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு தன்னையே பலியாக்கி நம்மை மீட்டார்.
நமக்காகத் தன்னையே பலியாக்கியதால் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை.
அவருடைய அன்பு நிபந்தனை அற்றது.
தன்னுடைய அன்பைத்தான் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த அன்பின் அடிப்படையில் அவரது சாயலில் வாழும் நாம் நமது அயலானுக்கு இரக்கத்தால் உந்தப்பட்டு உதவி செய்ய வேண்டும், சுய விளம்பரத்துக்காக அல்ல.
இரக்கத்தினால் செய்யப்பட்ட உதவியில் அவன் இயேசுவைக் காண வேண்டும்.
இயேசுவைப்போல நாமும் இரக்கம் உள்ளவர்களாக இருப்போம்.
பிறர் மீது நாம் இரங்குவதில் விண்ணகத்திற்கு ஏறுவதற்கான ஏணி இருக்கிறது.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment