Thursday, March 6, 2025

"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"(லூக்கா நற்செய்தி 9:25)


"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"
(லூக்கா நற்செய்தி 9:25)

விலையுயர்ந்த கார் ஒன்றுக்கு உரிமையாளர் ஒருவர் காரில் அலுவலகம் சென்று காரை வெளியே நிறுத்தி விட்டு அவரது பணியைச் செய்து கொண்டிருந்தார்.

11 மணியளவில் சட்டைப் பைக்குள் கையை விட்டபோது கார்ச் சாவி இல்லை.

அறைக்குள் தேடிப் பார்த்தார், காணவில்லை.

எங்கோ தொலைந்து விட்டது.

"சரி, போனால் போகட்டும், இன்னொரு சாவி வீட்டில் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்."

என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, Peon ஐக் கூப்பிட்டு,

"உனது சைக்கிளில் எனது வீட்டுக்குச் சென்று எனது மனைவியிடம் எனது கார்ச் சாவியை வாங்கி வா" என்றார்.

அவனும் வாங்கி வந்தான்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்ப வெளியே வந்த போது காரைக் காணவில்லை.

கார்த் திருடனுக்கு இரண்டு சாவிகள் தேவையில்லை.

சாவி சிறியதுதான், ஆனால் அது இல்லாவிட்டால் காருக்கும் பாதுகாப்பு இல்லை, வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லை.

"சாவி தானே, போனால் போகட்டும்" என்று நினைப்பவன் தனது உடமைகளை எல்லாம் இழக்க நேரிடும்.

ஆன்மீக வாழ்வில் நமது ஆன்மாவின் பாதுகாப்பு தான் நமது பாதுகாப்பு, உண்மையில் நமது ஆன்மா தான் நாம்.

ஆன்மாவை இழக்கும் போது நாம் நம்மையே இழந்து விடுகிறோம்.

நாம் சாவான பாவம் செய்யும் போது நமது ஆன்மாவை இழக்கிறோம்.

ஆன்மீக வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருவன் உலகத்துக்கே அதிபதி ஆகி விட்டாலும் அவனது பதவியால் அவனுக்கு எந்த ஆதாயமும் இல்லை.

ஞாயிறு திருப்பலியில் கலந்து கொள்ளாவிட்டால் சாவான பாவம்.

திருப்பலியில் கலந்து கொள்ளாமல் வியாபாரத்தில் இறங்குபவனுக்கு கோடிக்கணக்கில் ஆதாயம் கிடைத்தாலும் அதனால் அவனுக்கு எந்த ஆன்மீக ஆதாயமும் இல்லை.

"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

என்ற இறைவாக்கு தான் 

கல்லூரிப் பேராசிரியர் சவேரியாரை வேத போதகராகவும், புனித சவேரியாராகவும் மாற்றியது.

ஆன்மாவும் உடலும் சேர்ந்தவன் தான் மனிதன்.

ஆனாலும், ஆன்மாவுக்காக உடல் படைக்கப்பட்டது, உடலுக்காக ஆன்மா படைக்கப்படவில்லை.

ஆன்மா வாழ உடல் உதவிகரமாய் இருக்க வேண்டும்.

ஆன்மா தான் வாழ உடலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாவம் இல்லாத ஆன்மா உயிரோடு இருக்கிறது.

உயிரோடு இருந்தால் மட்டும் போதாது அது வாழ வேண்டும், வளர வேண்டும்.

ஆன்மீகத்தில் வளர 
நற்செயல்கள் அவசியம்.

நற்செயல்கள் செய்ய உடல் ஆன்மாவோடு ஒத்துழைக்க வேண்டும்.

நற்செயல்களால் ஆன்மா புண்ணிய வாழ்வில் வளரும்.

உடல் இச்சைகளைப்
 பூர்த்தி செய்ய உடல் ஆன்மாவை அழைப்பதுதான் சோதனை.

சோதனையில் விழாதபடி ஆன்மா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விழுவது பாவம்.

உடல் இச்சைகளுக்கு ஆன்மா இணங்கினால் அது நித்திய பேரின்ப வாழ்வை இழக்க நேரிடும்.

ஆகவே, நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஆன்மாவைப் பத்திரமாகப் பாதுகாத்து வாழ்ந்தால், வாழ்வின் இறுதியில் உடல் மண்ணுக்குள் போனாலும் ஆன்மா விண்ணுக்குப் பறந்து  விடும்.

ஆன்மாவை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

1. உடலை ஒறுத்து உடல் இச்சைகளுக்கு Good bye சொல்ல வேண்டும்.

2. ஆன்மா இறைவனையும், அயலானையும் நேசித்து இறைப் பணிக்காகவும், பிறர் அன்பு பணிக்காகவும் மட்டுமே வாழ வேண்டும்.

3.விண்ணகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே மண்ணகத்தில் வாழ வேண்டும்.

4.உலகில் வாழ்ந்தாலும் உலகிற்காக வாழக்கூடாது.

5.சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும்.

6. நமது அயலானில் இயேசுவைக் காண வேண்டும்.

7. உலகை இழந்தாவது ஆன்மாவைக் காப்போம்.

லூர்து செல்வம்.

1 comment: