"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."
(லூக்கா நற்செய்தி 6:38)
"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்."
(லூக்கா நற்செய்தி 6:36)
அன்பும் அதன் குழந்தை இரக்கமும் தான் நாம் செய்ய வேண்டிய எல்லா அறச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணங்கள்.
கடவுள் அளவு கடந்த அன்பு உள்ளவராக இருப்பதால்தான் தனது அன்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மனிதர்களைப் படைத்தார்.
அவருடைய இரக்கத்தின் காரணமாகத்தான்
மனிதன் பாவம் செய்து விண்ணக வாழ்வை இழக்கும் நிலையை அடைந்தபோது
பாவத்திலிருந்து அவனுக்கு விடுதலை கொடுத்து அவனை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்ல
அவரே மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.
கடவுள் நம்மை அவருடைய சாயலில் படைத்திருக்கிறார்.
ஆகவே அவருடைய பண்புகள் எல்லாம் நம்முடனும் இருக்கின்றன.
அவர் அன்பே உருவானவர், நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட அன்பு உள்ளது.
அவர் இரக்கமே உருவானவர், நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட இரக்கமும் உள்ளது.
நாம் பயன்பெறும் எல்லா நன்மைகளும் அவரால் நமக்குக் கொடுக்கப்பட்டவை.
நாம் மட்டும் பயன்பெறுவதற்காக நமக்கு கொடுக்கப்படவில்லை,
அவர் தன்னுடையதை எப்படி நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளாரோ அதேபோல நாமும் நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இருப்பதைக் கொடுத்தால் நமக்கு இன்னும் கொடுக்கப்படும்.
"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்." என்று அவரே சொல்கிறார்.
நாம் எந்த அளவையால் கொடுக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் கொடுக்கப்படும்.
நாம் தாராளமாகக் கொடுத்தால் நமக்கும் தாராளமாகக் கிடைக்கும்.
"அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடப்படும்." என்று ஆண்டவர் சொல்கிறார்.
நாம் பூமியில் வாழ்கிறோம். நமக்கு விஞ்ஞான ரீதியாக உதவிகரமாக இருப்பதற்காக கடவுள் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் படைத்துள்ளார்.
நமக்காகப் படைத்துள்ளார்.
இது அவருடைய தாராள மனதைக் காட்டுகிறது.
நமது உருவம் சிறியது.
நமக்கு ஒளி தர எவ்வளவு பெரிய சூரியன்!
நாம் சுவாசித்து வாழ எவ்வளவு அதிக காற்று!
நாம் நீர் அருந்த ஆண்டுதோறும் எவ்வளவு அதிகமாக மழை!
மேகங்களைத் தடுத்து மழை கொடுக்க எத்தனை மலைகள்!
நாம் நாடு விட்டு நாடு பயணிக்க எவ்வளவு பெரிய கடல்!
இவையெல்லாம் கடவுள் தாராளமாகத் தந்த இயற்கை வளங்கள்.
நாம் இயற்கையின் அழகை ரசித்தால் மட்டும் போதாது,
அதை பயன்படுத்தினால் மட்டும் போதாது,
அவற்றைத் தந்தமைக்காகக் கடவுளுக்கு நமது நன்றியைச் செலுத்த வேண்டும்.
வாயினால் நன்றி சொன்னால் போதாது, செயலாலும் சொல்ல வேண்டும்.
நாம் நமது அயலானுக்குத் தாராளமாகக் கொடுப்பதுதான் செயலால் கடவுளுக்கு நன்றி செலுத்தும் வழி.
தாராளமாகக் கொடுப்பவர்களுக்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாது.
இவ்வுலகில் நாம் கொடுப்பதற்குப் பரிசாக நமக்கு கடவுளால் நித்திய பேரின்ப வாழ்வு தரப்படும்.
நாம் எவ்வளவு கொடுத்தாலும் அதற்கு ஒரு அளவு உண்டு,
ஆனால் அதற்குப் பரிசாக கடவுள் தரும் பேரின்ப வாழ்வுக்கு அளவே இல்லை.
மனிதனின் உருவம் சிறியது.
ஆனால் அவன் வாழும் உலகம் எவ்வளவு பெரியது!
உலகில் உள்ள அத்தனை படைப்புகளையும் அவனால் ஆண்டு அனுபவிக்க முடியும்.
"படைத்தார் படைப்பெல்லாம் மனுவுக்காக" இது தமிழ்.
"மனுவைப் படைத்தார் தன்னை வணங்க." இது நமது கடமை.
"பகிர்ந்துண்டு வாழ்ந்தால் பசி தீரும்." இதுவும் தமிழ்.
"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்." இது இறை வாக்கு.
பகிர்வோம், அயலான் பசியாற்றுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment