Saturday, March 29, 2025

"நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்."(2 கொரிந்தியர் 5:21)



"நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்."
(2 கொரிந்தியர் 5:21)

இவை புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு, அதோடு நமக்கும், எழுதிய வார்த்தைகள்.

ஒரு ஊரில் ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார்.

அவருக்கு ஒரு தென்னந் தோப்பு இருந்தது.

ஒரு நாள் ஒரு பையன் இளநீர் குடிக்க ஆசைப்பட்டு தென்னந் தோப்புக்குப் போய் ஒரு குட்டையான மரத்தில் ஏறி, ஒரு தேங்காயைப் பறித்துப் போட்டான்.

அவன் மரத்திலிருந்து இறங்கி தேங்காயை எடுத்துக் கொண்டிருந்த போது காவல் காரன் பார்த்து விட்டான்.

அவன் பார்த்ததைப் பையன் பார்த்து விட்டான்.

உடனே தேங்காயை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

காவல்காரன் அவனை விரட்டிக் கொண்டு ஓடினான்.

பையன் வேகமாக ஓடி வீட்டுக்குள் நுழைந்து விட்டான்.

பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் நடந்ததைச் கூறி விட்டு, அவனது அறைக்குள் புகுந்து கதவை உட்புறம் பூட்டி விட்டான்.

கொஞ்ச நேரத்தில் காவல் காரன் வந்து,

"உங்கள் பையன்  எங்கள் தோட்டத்தில் தோட்டத்தில் தேங்காய்த் திருடி விட்டான். அவனை வெளியே அனுப்புங்கள்."

"நான் இளநீர் வாங்கி வா என்று அனுப்பினேன். என் ஆசையை நிறைவேற்ற அவன் தேங்காய் திருடியிருக்கிறான்.

குற்றம் என்னுடையது.

ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் எனக்குக் கொடுங்கள்."

"ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டுங்கள். பையனை விட்டு விடுகிறோம்."

தந்தையும் மகன் சார்பில் மன்னிப்புக் கேட்டு விட்டு ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் கட்டினார்.

"இனி பையனைத் தோட்டத்தின் பக்கம் வர விடாதீர்கள். வந்தால் பிடித்துப் போலீசிடம் ஒப்படைத்து விடுவோம்."

"இனி வர மாட்டான்."

காவல்காரன் போய் விட்டான்.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த பையனுக்கு அழுகை அழுகையாய் வந்தது.

வெளியே வந்து,

"அப்பா, மன்னித்துக் கொள்ளுங்கள். நான் செய்த குற்றத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு, நான் அனுபவிக்க வேண்டிய தண்டனையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்.

நான் பறித்த தேங்காயும் வேண்டாம். இனி இந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்.

மன்னித்துக் கொள்ளுங்கள்."

தேங்காயை வீசி எறிந்து விட்டான்.

"மன்னிப்புக் கேட்டு திருந்தியிருக்கிறாய்.   நல்ல பையன். இனி தப்பு செய்யக்கூடாது."

"செய்ய மாட்டேன், அப்பா.


கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்தது நாம்.

நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தைச் செய்தது இறைமகன்.

பரிகாரம் செய்வதற்காக மனிதனாகப் பிறந்து,

நமது பாவச் சுமையை முழுவதும் சிலுவை வடிவில் சுமந்து,

பாவச் சுமையோடு கல்வாரி மலையில் ஏறி,

அதே சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு,

சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே நம்மை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டி,

தன்னை நமது பாவங்களுக்காகப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

இயேசு தனது தந்தையிடம் வேண்டும் விதத்தைப் பாருங்கள்.

நாம் ஏதாவது தப்பு செய்யும் போது நமது அம்மா அப்பாவிடம் நமக்காகப் பரிந்து பேசும்போது,

"பையன் தெரியாமல் செய்து விட்டான், மன்னியுங்கள்." என்று சொல்வது போல,

இயேசுவும் நம் விண்ணகத் தந்தையிடம்,

"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்."
(லூக்கா நற்செய்தி 23:34)

இவ்வார்த்தைகளில் இயேசு நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பும், இரக்கமும் வெளிப்படுகிறது.

உலகம் உண்டான நாள் முதல் உலகம் முடியும் வரை வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் அத்தனை கோடி மக்களின் கோடிக்கணக்கான பாவங்களும் தந்தையால் மன்னிக்கப்பட இந்த சிறு செபம் போதுமானது.

இது அவ்வளவு வல்லமை உள்ள செபம்.

அத்தனை கோடி மக்களுக்கான மன்னிப்பும் தந்தையிடம் ரெடி.

நாம் கேட்டுப் பெற வேண்டும்.

"கேளுங்கள், கொடுக்கப்படும்."

இயேசுவின் சிலுவைப் பலியால் தந்தையிடம் தயாராக உள்ள பாவ மன்னிப்பை நாம் கேட்டுப் பெற வேண்டும்.

வெயில் காலத்தில் அம்மா வெற்றுக் காலோடு வெயில் சுடச்சுட மைல்கணக்கில் நடந்து எடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கும் தண்ணீரை

ஒரு தம்ளரை எடுத்து கோதிக் குடிக்க மனமில்லாதவர்களை என்ன செய்யலாம்?

தந்தையின் பாவ மன்னிப்பு கத்தோலிக்க திருச்சபையையின் குருக்களிடம் தயார் நிலையில் உள்ளது.

பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் அதைப் பெற்று பரிசுத்தவான்களாக மாறுவோம்.

விண்ணக வாழ்வைச் சுதந்தரித்துக் கொள்வோம்.

கேட்போம்.

பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment