Friday, February 28, 2025

இறந்த பின் இயேசு செய்த முதல் புதுமை.

இறந்த பின்  இயேசு செய்த முதல் புதுமை.


"தாத்தா, நான் இப்போது கேட்கப் போகும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது."

"'அப்படி என்ன கடினமான கேள்வி?"

"கேள்வி இலேசானது தான்.
பதில் சொல்வதுதான் கடினம்."

"'முதலில் கேள்வியைக் கேள்."

"இயேசு அவரது சித்தப்படி வாழ்பவர்களுக்கு விண்ணக வாழ்வைப் பரிசாக அளிக்கிறார்.

அவரது தந்தையின் சித்தம் நிறைவேற அவருக்கு உதவியவர்களுக்கு என்ன பரிசு அளித்தார்?"

"' முதலில் அவருக்கு உதவி செய்தவர்கள் யார் என்று கூறு."

"இயேசு தனது சிலுவை மரணத்தின் மூலம் நம்மை மீட்கப் தானே உலகுக்கு வந்தார்?"

"'ஆமா."

"பரிசேயர்கள், சதுசேயர்கள், யூத சமயக் குருக்கள், போஞ்சு பிலாத்து, செந்தூரியன், படை வீரர்கள் ஆகிய அனைவரும் தானே அவரைச்  சிலுவையில் அறைந்தார்கள்."

"'ஆமா."

"அப்படியானால் இயேசு வந்த நோக்கம் நிறைவேற அவர்கள் உதவினார்கள் என்று தானே அர்த்தம்."

"'இயேசு தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்லவர் என்று அர்த்தம்."

"அது சரிதான். ஆனாலும் அவர்கள் அவருக்கு எதிராகச்  செயல்பட்டிருக்கா விட்டால் அவரால் சிலுவையில் அறையப்பட்டு இறந்திருக்க முடியாதே."

"'வாதத்திற்காக நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இயேசு அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார் என்பது எனக்குத் தெரியாதா?"

"மன்னித்தார் என்பது தெரியும்.
ஏற்றுக் கொண்டார் என்றால்?"

"' நமது பாவங்கள் மன்னிக்கப் பட்டால் நாம் எங்கே செல்வோம்?"

"மோட்சத்துக்கு. அவர்கள் மோட்சத்துக்குப் போய் விட்டார்கள் என்று சொல்கிறீர்களா?"

"'யாரும் நரகத்திற்குச் சென்றிருக்கிறார்கள் என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை.

கடவுளின் அளவுகடந்த இரக்கத்தினால் மோட்சத்துக்குச் சென்றிருக்கிறார்கள் என்று நம்பினால் தப்பில்லை."

"நீங்கள் சொல்வதை நிரூபிக்க ஒரு ஆதாரமாவது இருக்கிறதா?"

"' இயேசுவின் சிலுவை மரணத்தில் செந்தூரியனின் பங்கு என்ன என்று தெரியுமா?"

"செந்தூரியன் என்றால் நூறு ரோமைப் படை வீரர்களுக்குத் தலைவன்.

இங்கே, ஆளுநரின் பொறுப்பிலுள்ள படைத் தலைவன்.

இயேசுவைச் சுற்றூணில் கட்டி வைத்து அடித்தவர்களும், முள் முடி சூட்டி அடித்தவர்களும் படை வீரர்கள் தான்."

"'உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை உறுப்புக்களும் இரத்த ஆறு ஓட காயங்கள் ஏற்படும் அளவுக்கு அடித்தார்கள்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக சிந்தப்பட்ட இரத்தம்.

அவரது முகத்தில் எச்சில் துப்பி அசிங்கப் படுத்தியதுமல்லாமல் கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தினர்.

பிலாத்து இயேசுவுக்கு சிலுவை மரணத் தீர்ப்பு அளித்தவுடன் அந்தப் பொறுப்பை செந்தூரியன் வசம் ஒப்படைத்தான்.

செந்தூரியனுக்கு ஒரு கண் தெரியாது.

இயேசுவின் மேல் பாரமான சிலுவையை ஏற்றினார்கள்.

தன் ரத்தத்தின் பெரும்பகுதியை அடிபடும் போதே இழந்துவிட்ட இயேசு உடலில் பலம் இல்லாததால் நடந்தபோது மூன்று முறை சிலுவையோடு கீழே விழுந்தார்.

கீழே விழுந்த மாட்டை  விவசாயி 
தார்க்கம்பால் குத்தி, சாட்டையால் அடித்து எழுப்புவது போல,

வீரர்கள் இயேசுவைக் காலால் உதைத்தும், சாட்டையால் அடித்தும் எழுப்பினர்.

அவர் நடந்து சென்று கொண்டிருந்த போதும் அவரைச் சாட்டையால் அடித்துக் கொண்டே சென்றனர்.

அன்னை மரியாள் தான் பத்து மாதம் சுமந்து பெற்று, பாலூட்டி, சீராட்டி,  உணவளித்து வளர்த்த தனது செல்ல மகனை வீரர்கள் அடித்த அடிகளின் வலியையும், சிலுவையையும் உள்ளத்தில் சுமந்து கொண்டு,

நமது பாவங்களுக்கு பரிகாரமாக தனது மகனின்  பாடுகளை விண்ணகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்துக்கொண்டே பின்னால் நடந்து சென்றாள்.

அவளது உறவினப் பெண்களும் அவளோடு அழுது கொண்டு சென்றார்கள்.

கட்டப்பட்டு கல்வாரி மலையை அடைந்த பின் செந்தூரியன் தலைமையில் வீரர்கள் இயேசுவை ஆணிகளால் சிலுவையில் அறைந்தார்கள்.

ஆணிகளின் பின்பகுதியை மடக்குவதற்காக சிலுவையை குப்புற மாற்றி போட்டார்கள்.

இயேசுவின் உடல் தரையிலும், பாரமான சிலுவை அவர் மேலும் இருக்க,

ஆணிகளை பின்பக்கம் அடிக்கும்போது அவரது உடல் சிலுவையின் பாரத்தால் தரையோடு தரையாக நைந்து கொண்டிருந்தது.

மீதமிருந்த ரத்தமும் கல்வாரி மலையில் ஆறாக ஓடியது.

பின் சிலுவையை நட்டமாக நிறுத்தினார்கள்.

மீதம் இருந்த ரத்தம் காயங்கள் வழியே வடிந்து கொண்டிருந்தது.

இந்த நிலையிலும் இயேசு,

 "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று தந்தையை நோக்கி வேண்டினார்.

அவரும் அவரது பாடுகளுக்குக் காரணமான அனைவரையும் மனதார மன்னித்தார்.

பிற்பகல் மூன்று மணியளவில்,

"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். 


இதைக் கண்ட செந்தூரியன்  "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து  இறக்குவதற்குமுன் அவர்  இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்வதற்காக செந்துரியன் ஒரு ஈட்டியால் இயேசுவின் விலாப் பகுதியில் குத்தினான்.

இதயத்தில் கொஞ்சமாக மீதி இருந்த ரத்தம் தண்ணீரோடு வெளியேறியது.

அந்த ரத்தத்தின் ஒரு சொட்டு செந்தூரியனின் பார்வையற்ற கண்ணின் மேல் விழுந்தது.

செந்தூரியன் உடனே பார்வை பெற்றான்.

இறந்த பின்பும் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போதே இயேசு ஒரு புதுமை செய்து தனது சிலுவை மரணத்தை வழி நடத்திய செந்தூரியனின் கண்ணை குணமாக்கினார்.

இது அவர் இறந்த பின் செய்த முதல் புதுமை.

தனக்குத் தீமை செய்தவனுக்கு நன்மை செய்ய அவர் செய்த புதுமை.

 முற்றிலும் குணமடைந்த செந்தூரியன் மனம் திரும்பி தனது பதவியை விட்டுவிட்டு நற்செய்தியை பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

அது மட்டுமல்ல நற்செய்தி பணிக்காக வேத சாட்சியாக மரித்தார்.

அவர் தான் புனித லோஞ்சினுஸ்.
Saint Longinus.

இப்போது சொல்லு, இயேசுவின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"

"எதிர்மறையாக செயல்பட்டாலும், தான் எந்த நோக்கத்துக்காக உலகுக்கு வந்தாரோ அது நிறைவேற உதவிய செந்தூரியனை மனம் திருப்பி,

அவரைப் புனிதராக மாற்றி
விண்ணக வாழ்வுக்குள் ஏற்றுக்கொண்டார்.

இப்போது புரிகிறது.

இயேசு தனக்கு தீமை செய்தவர்களைக் கூட மனம் திருப்பி அவர்களுக்கு விண்ணக வாழ்வைப் பரிசாக அளிப்பவர் என்று புரிகிறது."

"'செந்தூரியனின் மனமாற்றம் வரலாற்று பூர்வமான உண்மை. 
செந்தூரியன் அவர் வகித்த பதவியின் பெயர்.

புனிதராக அவர் பெயர் புனித லோஞ்சினுஸ். (Saint Longinus)

அவருடைய திருநாள் அக்டோபர் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது."

"பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்ற மற்றவர்கள் என்ன ஆனார்கள்?"

"'மற்றவர்களும் மனம் திரும்பி மீட்படைய இயேசு தனது அருளுதவியை வழங்கியிருப்பார் என்று நாம் நம்பலாம்.

பிலாத்துவின் மனைவி Claudia Proccula புனித சின்னப்பரின் சீடத்தியாக மாறி நற்செய்திப் பணியாற்றினார்.

இயேசு தான் போதித்தவை எல்லாவற்றையும் சாதித்துக் காட்டினார் என்பதற்கு வரலாறு சான்று பகர்கிறது."

"எனது சந்தேகத்தைத் தீர்த்தமைக்கு நன்றி, தாத்தா."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment