புதன்12. .
வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்.
(மாற்கு நற்செய்தி 7:15)
தீட்டு ஆன்மீக ரீதியாக பயன்படுத்தப் படும் சொல்.
அழுக்கு உடல் ரீதியாக பயன்படுத்தப் படும் சொல்.
பாவம் செய்யும் போது ஆன்மா தீட்டுப் படும்.
வேலை செய்யும் போது உடல் உறுப்புக்கள் அழுக்காகும்.
பரிசேயர்கள் அழுக்கான கையைத் தீட்டு பட்ட கை என்று கூறியதால் இயேசு அது பற்றி சில விளக்கங்கள் கொடுக்கிறார்
கை கழுவி விட்டு உண்டாலும், கழுவாமல் உண்டாலும் வாய் வழியாக உள்ளே செல்லும் எந்தப் பொருளும் ஆன்மாவைத் தீட்டு படுத்தாது.
வாய் வழியாக உள்ளே சென்ற உணவுப் பொருளின் கழிவு குதம் வழியாக வெளியேறி விடும்.
மனித உள்ளத்திலுள்ள பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை,
தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் தான் ஆன்மாவைத் தீட்டுப் படுத்துகின்றன.
உள்ளம் தூயதாக இருந்தால் ஆன்மா தீட்டு படாது.
உடலும் ஆன்மாவும் உள்ள நாம் உடல் சுத்தத்தை விட ஆன்மாவின் சுத்தத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உடல் எவ்வளவு அழுக்காக இருந்தாலும் ஆன்மா சுத்தமாக இருந்தால் நமக்கு விண்ணக வாழ்வு உறுதி.
ஆனால் உடல் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் ஆன்மாவில் பாவத் தீட்டு இருக்குமானால் ஆன்மா மீட்பு அடைய முடியாது.
கைகள், கால்கள் சுத்தமாக இருப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட
உள்ளம் சுத்தமாக இருப்பதற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும்.
உடலைத் தண்ணீரால் கழுவி, சுத்தமான உடையணிந்து நடமாடுவதை விட தூய உள்ளத்தோடு நடமாடுவதுதான் சிறந்தது.
நமது உள்ளம் வெளியே தெரியாது. உடல் வெளியே தெரியும்.
ஆகவேதான் தீய எண்ணங்கள் உள்ள சிலர் நல்லவர்கள் போல் நடமாடுகிறார்கள்.
அவர்களை நம்புபவர்களும் கெட்டுப் போகிறார்கள்.
உள்ளத்தில் பரிசுத்தமாக வாழ்பவர்களின் சொல்லும் செயலும் பரிசுத்தமாகவே இருக்கும்.
சிலர் உள்ளத்தில் அசுத்தமான எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் சொல்லிலும், செயலிலும் நல்லவர்கள் போல் நடிப்பார்கள்.
அரசியல்வாதிகளில் அநேகர் ஓட்டு வாங்குவதற்காக உள்ளொன்று வைத்துக் கொண்டு புறமொன்று பேசுவார்கள்.
ஆனால் செயல்கள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும்.
நாம் சுத்தமான எண்ணமும், சுத்தமான பேச்சும், சுத்தமான செயலும் உள்ளவர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment