திங்கள்10
"அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்."
(மாற்கு நற்செய்தி 6:56)
ஒவ்வொரு முறை நோயாளியைக் குணமாக்கிய போதும்,
"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்று இயேசு கூறுவது வழக்கம்.
குணம் பெற வேண்டும் என்று இயேசுவிடம் கேட்பவர்கள் மட்டுமல்ல, அவரிடம் கேட்காமலேயே விசுவாசத்துடன் அவரையோ, அவரது ஆடையைக் கூட தொட்டவர்கள் குணம் அடைந்தார்கள்.
மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி,
அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள்.
அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.
(மாற்கு நற்செய்தி 6:56)
ஒவ்வொரு முறை திருப்பலிக்குச் செல்லும் போதும் நாம் திவ்ய நற்கருணை வாங்கும் போதும் இயேசுவை நாவினால் தொடுகிறோம்.
நாவினால் மட்டுமல்ல,
நாம் உட்கொண்டபின் நமது இரத்த நாளங்கள் வழியாக
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமது உடலின் ஒவ்வொரு உள் உறுப்பும் இயேசுவைத் தொடுகிறது.
நம்மிடம் விசுவாசம் இருந்தால் நற்கருணை வாங்கியவுடன் நமது உடலிலுள்ள எல்லா வியாதிகளும் குணமாகும்.
குணமாகா விட்டால் நம்மிடம் விசுவாசம் இல்லை என்று தான் அர்த்தம்.
விசுவாசப் பிரமாணம் சொல்லும் போதெல்லாம் " விசுவசிக்கிறேன்" என்று சொல்கின்றோம்.
ஆனாலும் நன்மை வாங்கியவுடன் நோய் எதுவும் குணமாகவில்லை.
இயேசு கடவுள். அவரால் இல்லாததைச் சொல்ல முடியாது.
அப்படியானால் நம்மிடம் போதிய விசுவாசம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
விசுவசிக்கிறேன் என்று சொல்கிறோம், செய்வதில்லை.
நம்மிடம் உள்ள ஒரு முக்கிமான குணம் சொல்வதைச் செய்வதில்லை.
வாய்ச் சொல் வீரர்கள்,
செயல் வீரர்கள் அல்ல.
உணவு உட்கொண்டால் வயிறு நிரம்பி விடும் என்று சொன்னால்
நிரம்பி விடுமா?
சாப்பிட்டால்தான் வயிறு நிரம்பும்.
விசுவசிக்கிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் விசுவாசிகள் அல்ல,
விசுவாசத்தை வாழ்பவர்கள் மட்டுமே விசுவாசிகள்.
விசுவாசத்தை வாழ்பவர்களிடம் மட்டுமே விசுவாசம் இருக்கிறது.
விசுவாசத்தை எப்படி வாழ்வது?
தன் தாயிடம் பால் குடிக்கும் ஒரு குழந்தை மறுநாள் குடிப்பதற்கு முந்திய நாளே தாயிடமிருந்து பாலை வாங்கி ஏதாவது ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்குமா?
நிச்சயமாக வைக்காது.
அன்றன்றைக்கு வேண்டிய பாலை அன்றன்றைக்கு தாயிடமே குடிக்கும்.
தான் அழும்போதெல்லாம் அம்மா பால் தருவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அதற்கு இருக்கிறது.
அது தன் தாய் மேல் உள்ள நம்பிக்கையை வாழ்கிறது.
"பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன்."
என்று தினமும் சொல்கிறோம்.
கர்த்தர் கற்பித்த செபத்தில் விண்ணக தந்தையை நோக்கி,
"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்."
என்று வேண்டுகிறோம்.
தந்தை எல்லாம் வல்லவர் என்று விசுவசிக்கிறோம். ஆகவே அன்றாட உணவை அன்றன்று தருவார் என்றும் விசுவசிக்கிறோம்.
இந்த விசுவாசத்தை வாழ்கிறோமா?
வாழ்ந்தால் ஆண்டு முழுமைக்கும் வேண்டியதை இன்றே சேமித்து வைக்க மாட்டோம்.
அடுத்த ஆண்டு செலவுக்கு இப்போதே SB Account ல் பணத்தைப் போட்டு வைப்பது எதைக் காட்டுகிறது?
தந்தையின் மேல் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்த அடிப்படையில் சிந்தித்தால் கிறிஸ்தவர்கள் யாருமே தங்கள் விசுவாசத்தை வாழவில்லை.
உலக அடிப்படையில் சேமிப்புக்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம்.
ஆனால் விசுவாச அடிப்படையில் அவையெல்லாம் செல்லாது.
"நாளைய உணவை இன்றே சேமித்து வைக்க வரம் தாரும்" என்று வேண்ட கர்த்தர் கர்ப்பிக்கவில்லை.
நாம் விசுவசிக்கிறோம் என்று சொன்னாலும் விசுவாசமே இல்லாத உலகத்தார் போலவே வாழ்கிறோம்.
"அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்." என்ற வசனம் நம் வாழ்வில் செயல் படாமைக்குக் காரணம் நமது விசுவாசம் இன்மையே.
இயேசுவைப்போல் வாழ வேண்டும் என்று சொல்கிறோம்.
வாழ்கிறோமா?
அவரது ஏழ்மையை அப்படியே பின்பற்றுகிறோமா?
நமக்கு எதிராக தவறு செய்த அனைவரையும் மன்னிக்கிறோமா?
நமக்கு தீங்கிழைக்கிற அனைவருக்கும் நன்மை செய்கிறோமா?
யாராவது நம்மை அடித்தால் அடிக்க அனுமதிக்கிறோமா?
இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.
செய்தால் நாம் புனிதர்கள்.
புனிதர்களாக வாழவே அழைக்கப் பட்டிருக்கிறோம்.
வாழ வரம் கேட்டு இறைவனை மன்றாடுவோம்.
இறைவன் தரும் வரத்தைப் பயன்படுத்துவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment