Sunday, February 9, 2025

செவ்வாய்11. "ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்."(மாற்கு நற்செய்தி 7:5 )

செவ்வாய்11.                                            

"ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்."
(மாற்கு நற்செய்தி 7:5 )


ஒரு முறை இயேசுவின் சீடர்கள் கை கழுவாமல் உணவு உண்பதைப் பார்த்த பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் இயேசுவைப் பார்த்து,

"உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்."

அவர்கள் கேள்வி அவர்களுடைய அறியாமையின் விளைவு.

கைகளை கழுவி உண்பதும், பாத்திரங்களை கழுவுவதும் சுகாதாரத்தைச் சார்ந்த நல்ல பழக்கங்கள், ஆன்மீகத்தைச் சார்ந்த சட்டங்கள் அல்ல.

உடலை அசுத்தமாக்குவது  அழுக்கு, சுத்தமாக்கத் தண்ணீர் தேவை.

ஆன்மாவை அசுத்தமாக்குவது பாவம். ஆன்மாவைச் சுத்தப்படுத்தத் தேவைப்படுவது மனஸ்தாபமும், பாவ மன்னிப்பும்.

இயேசு உலகுக்கு வந்தது ஆன்மாவைப் பாவத்திலிருந்து மீட்க, உடலைத் தண்ணீரால் கழுவ அல்ல.

நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆன்மாவின் பரிசுத்தத் தனத்துக்கு.

பரிசேயர்கள் அதைப் பற்றி அக்கரைப் படாமல், கை கழுவாமல் சாப்பிட்டதை மரபு மீறுதலாகக் கருதினார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,

"நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு 

மனித மரபைப் பின்பற்றி வருகிறீர்கள்.

உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணிக்கிறீர்கள்."

என்று கூறினார்.

நாம் எந்த விதத்திலாவது பரிசேயர்களைப் போல் நடந்து கொள்கிறோமா?

ஞாயிற்றுக் கிழமை காலையில் பெற்றோர் பிள்ளைகளைப் பார்த்து,

" குளித்து விட்டு சுத்தமான ஆடை அணிந்து கோவிலுக்குப் புறப்படுங்கள்" என்று கூறுகிறார்கள்.

எந்தப் பெற்றோராவது,
 
"எட்டு மணிக்குப் பூசை, ஏழரை மணிக்கே கோவிலுக்குச் சென்று, பூசைக்கு முன்பு பாவ சங்கீர்த்தனம் செய்யுங்கள். பரிசுத்தமான இருதயத்தோடு நன்மை எடுக்க வேண்டும்" என்று சொல்கிறார்களா?

அவர்களும் அதைச் செய்கிறார்களா?

அநேகர் ஆன்மீகச் சுத்தத்தை விட உடல் சுத்தத்துக்கு தானே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கோவிலில் ஏதாவது விழா வந்தால் நாம் ஆசைப் படுவது,

"கோவிலை வெள்ளையடித்தல், அலங்காரம் செய்தல்,  சப்பரம் தூக்குதல், வரிப் பிரித்தல், அசன உணவு ஆகியவற்றைப் பற்றி தான் அக்கரைப் படுகிறோம்."

பாவ சங்கீர்த்தனம்?

யாரும் இதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை.

அலங்காரம், ஆடம்பரம், கொண்டாட்டம் ஆகியவை ஆன்மீக வாழ்வைச் சாராதவை.

விழா எடுப்பது ஆன்மீக வாழ்வுக்கு.

ஆன்மீக வாழ்வு புறக்கணிக்கப் பட்டால் விழா வீண்.(waste.)

திருமணம் ஒரு தேவத் திரவிய அனுமானம். அதற்கான தயாரிப்புக்கும் இதே நிலைதான்.

அதனால்தான் கருக்கலைப்பு,
 விவாக ரத்து ஆகியவை சாதாரணமாகி விட்டன.

குற்றாலம் அருவியில் குளிக்கப் போகிறோம்.
.
காரில் குற்றாலத்துக்குப் போய்,
ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு,

கடைகளை ரசித்து விட்டு, 

குரங்குகளையும் பார்த்து ரசித்து விட்டு, 

பூங்காவில் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு,

ஹோட்டலில் வித விதமாய்ச் சாப்பிட்டு விட்டு,

அருவிப் பக்கமே போகாமல்

போன வழியே, போனபடியே திரும்பி வந்து விட்டால்

உடம்பு எப்படி இருக்கும்?


உடம்பு முழுவதும் வியர்வையும்.
அதில்  ஒட்டிய அழுக்கும் இருக்கும்.

குற்றாலத்துக்குப் போய் குளிக்காமல் வருவது போன்றதுதான்

உலகில் பிறந்து, உலக ஆடம்பரத்தை அனுபவித்து விட்டு, ஆன்மாவைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்ந்து விட்டு

இறுதியில் உலகை விட்டுப் போவதும்.

நாம் உலகத்தில் பிறந்தது உலக வாழ்க்கையை அனுபவிப்பதற்காக அல்ல,   ஆன்மாவை விண்ணக வாழ்வுக்காகத் தயாரிப்பதற்காக.

அதைத்தான் ஆன்மீக வாழ்வு என்கிறோம்.

உலக மரபுகளும். உலக வாழ்க்கையும் நமது மரணத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.

ஆகவே நித்திய காலம் தொடரும் ஆன்மீக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment