வியாழன்20.
ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.
(மாற்கு நற்செய்தி 8:33)
"ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு சீடர்களைப் பார்த்து கேட்டபோது
சீமோன் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.
ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
என்று சொன்ன அதே இயேசு அதே சீமோனைப் பார்த்து,
"என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்."
என்று சொல்கிறார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால்
இயேசுவின் பார்வையில்
பேறுபெற்றவனாக இருந்த சீமோன் எப்படி திடீரென்று சாத்தானாக மாறினார்?
இயேசு மெசியா.
மெசியா உலகுக்கு வந்ததன் நோக்கம்
பாடுகள் பட்டு,
சிலுவையில் அறையப்பட்டு, மரித்து
மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்து
அவர்களை பாவத்திலிருந்து மீட்டு நித்திய பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்ல.
இராயப்பர் இயேசுவை மெசியா என்று ஏற்றுக் கொண்டதால் அவரைப் பேறு பெற்றவர் என்று அழைத்தார்.
ஆனால் இயேசு பாடுகள் படக் கூடாது என்று தடுத்ததால் அவரைச் சாத்தான் என்று அழைத்தார்.
மனிதர் மீட்பு பெறக் கூடாது என்று, அவர்களைப் பாவத்தில் விழச் செய்த சாத்தான் தானே விரும்புகிறது!
இயேசு இராயப்பரைப் பற்றி கூறிய வார்த்தைகள் அவருடைய சீடர்களாகிய நமக்கும் பொருந்தும்.
நாம் இயேசுவை உலகின் பாவங்களைப் போக்க வந்த மெசியா என்று ஏற்றுக் கொண்டு தான் திருமுழுக்கு பெற்று, கிறிஸ்தவர்களாக மாறினோம்.
அந்த வகையில் கிறிஸ்தவர்களாகிய நாம் பேறு பெற்றவர்கள்.
ஆனால் மீட்பு பெறும் வகையில் நாம் வாழாவிட்டால், நாம் சாத்தானுக்குச் சமமானவர்கள்.
இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.
அதன்படி வாழாதவர்கள் சாத்தான்கள்.
தனது பாவத்தினால் விண்ணகத்துக்குரிய நிலையை இழந்து பாதாளத்தில் வீழ்ந்தது சாத்தான்.
தன்னைப் போலவே மனிதர்களும் விழ வேண்டும் என்று அது விரும்புகிறது.
அன்று தனது சோதனையால் நமது முதல் பெற்றோரைப் பாவத்தில் விழச் செய்தது போல நமக்கும் சோதனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நாம் பலகீனமான மனிதர்கள்.
சோதனையில் விழாமலிருக்க நமக்கு உதவும்படி அருள் வரம் கேட்டு அடிக்கடி விண்ணகத் தந்தையிடம் செபிக்க வேண்டும்.
பாவத்தில் விழாமலிருந்தால் மட்டும் போதாது. புண்ணியத்தில் வளர வேண்டும்.
அதற்காக நற்செயல்கள் செய்ய வேண்டும்.
நற்செயல்கள் செய்யவும் இறைவன் அருள் வேண்டும்.
அதற்காகவும் தந்தையிடம் வேண்ட வேண்டும்.
நாம் கர்ப்பித்த செபம் சொல்லும் போது முதலில்
"எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்"
என்று வேண்டி விட்டு,
"தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்."
என்று வேண்டுகிறோம்.
இரண்டாவது வேண்டுதலை கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதற்குள் வேறொரு வேண்டுதலும் இருப்பது புரியும்.
வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டின் தலைவி,
"சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று கேட்கிறாள்.
"திடப்பொருள் எதுவும் வேண்டாம்"
என்று வந்தவர் சொல்கிறார்.
அப்படியென்றால் என்ன அர்த்தம்?
" திரவமாக கொண்டு வாருங்கள்" என்று தானே அர்த்தம்.
"தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்."
தீமைக்கு எதிர்ப்பதம் நன்மை.
இந்த வேண்டுதலில் அடங்கியுள்ள மற்றொரு வேண்டுதல்
" நாங்கள் தீமை செய்யாமல் நன்மை செய்ய வரம் தாரும்."
அதாவது,
"நான் மற்றவர்களுக்கு நன்மை, அதாவது, உதவிகள் செய்ய வேண்டிய அருள் வரம் தாரும்."
மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் நற்செயல், ஆத்மாவுக்கு புண்ணியம் சேர்க்கும் செயல்.
நற்செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம் என்பது இறைவாக்கு.
விவசாயி நிலத்தைப் பண்படுத்தினால் மட்டும் போதாது, பயிரேற்றவும் வேண்டும்.
விசுவாசி பாவம் செய்யாதிருந்தால் மட்டும் போதாது, புண்ணியம் செய்ய வேண்டும்.
நாம் மணிக்கணக்காக வார்த்தைகளை அடுக்கிச் செய்யும் பெரிய செபங்களை விட
அளவில் சிறிய, ஆனால் அர்த்தம் பொதிந்த 'கர்த்தர் கற்பித்த செபமே மிகச் சிறந்தது.
1. இறைபுகழ்.
2. உணவு வேண்டுதல்.
3. பாவமன்னிப்பு கேட்டல்.
4. பாவத்தில் விழாமலிருக்க பாதுகாப்பு வேண்டுதல்.
5. புண்ணியங்கள் செய்ய வரம் கேட்டல்.
முழுமையான ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான வரங்கள் அந்தனையையும் கேட்கிறோம்.
வரங்கள் அத்தனையையும் ஆண்டவர் தருவார்.
அவற்றை நாம் வாழ்ந்தால் பேறு பெற்றவர்கள்.
வாழாவிட்டால்?
இராயப்பரிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகளை நினைவில் கொள்வோம்.
பேறு பெற்றவர்களாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment