Thursday, February 13, 2025

சனி15. தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். (மாற்கு நற்செய்தி 8:6)

சனி15.                                                        

தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். 
(மாற்கு நற்செய்தி 8:6)

ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்,

ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளித்தல்

ஆகிய உணவு அளித்தல் சம்பந்தமான  இரண்டு புதுமைகள் நற்செய்தி நூல்களில் இடம் பெற்றுள்ளன.

இயேசுவின் மூன்றாண்டு கால பொதுவாழ்வில் அவர் சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார். ஆயிரக் கணக்கானோர் புதுமையாகக் குணமானார்கள்.

ஆனால் எல்லா புதுமைகளும் நற்செய்தி நூல்களில் குறிப்பிடப் படவில்லை.

எழுதப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்காக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 37 புதுமைகளே எழுதப்பட்டிருக்கின்றன.

அதேபோல் உணவு அளிக்கும் புதுமைகள் இரண்டு குறிப்பிடப் பட்டிருந்தாலும் அவர நிறைய செய்திருக்க வேண்டும்.

இன்றைய புதுமையில்

 மூன்று நாள்களாக வீட்டுக்குச் செல்லாமல் அவருடைய வார்த்தைகளுக்கு செவிமடுத்துக் கொண்டிருந்த மக்கள் மீது
பரிவுகொள்கிறார்.

அவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக

  "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று சீடர்களிடம் கேட்கிறார். 

அவர்கள் "ஏழு" என்கிறார்கள். 

தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிடுகிறார்; 

பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி,

 பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் சொல்கிறார்.

 அவர்களும் மக்களுக்குப் பரிமாறுகிறார்கள். 

ஏறக்குறைய நாலாயிரம் பேர் வயிரார உண்கிறார்கள்.

ஏழு கூடைகள் மீதம் உள்ளன.

நாம் தியானத்துக்கு எடுத்துக் கொள்ளும் விடயங்கள்.

1. இயேசுவின் பரிவு.
2. சீடர்கள் மூலம் பரிமாறுதல்.

1.மூன்று நாள்களாக மக்கள் சாப்பாட்டைக் கூட மறந்து இயேசுவின் வார்த்தைகளைக்  கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவும் சீடர்களும் கூட சாப்பிட்டிருக்க முடியாது.

ஆகவே எல்லோருக்கும் பசித்திருக்கும்.

இயேசு தன் பசியைப் பற்றிக் கவலைப்படவில்லை.

பசியைக் கூடப் பொறுத்துக் கொண்டு ஆன்மீகச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள்  மீது பரிவுகொள்கிறார்.  

 அவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை.

 இயேசு ஆன்மீக விருந்து அளிக்கவே உலகிற்கு வந்திருந்தாலும் மனிதர்களை உடலோடும்  படைத்தவர் அவர்தானே.

தான் படைத்ததைப் பராமரிப்பவரும் அவர்தானே.

ஆகவே நமது வாழ்வின் நூறு சதவீதத்தையும் ஆன்மீகத்துக்காக நாம் பயன்படுத்தி விட்டாலும்

 நமது உடலைப் பராமரிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புதுமை.

புனித பிரான்சிஸ் அசிசியார் தனது உலக செல்வத்தை எல்லாம் விட்டு விட்டு விண்ணகத் தந்தையின் விருப்பப்படி மட்டுமே வாழ வந்தபோது அவரைப் போன்ற எண்ணம் உடைய அநேகர் அவரோடு சேர்ந்து கொண்டார்கள்.

பிரான்சிஸ்கன் சபை உறுவாயிற்று.

பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டே நற்செய்தியை அறிவித்தார்கள்.

அன்றன்றைய தேவைகள் அன்றன்று நிறைவேற்றப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நூறு சதவீத வாழ்க்கையையும் இறைப் பணிக்கே பயன்படுத்தினார்கள்.

அசிசியார் திருவிய சபை,

சிறு சகோதரர்களின் சபை (Order of Friars Minor (OFM)):

எளிய தவ வாழ்க்கை,
ஏழைகளுக்கு உதவுவதல், நற்செய்தியை அறிவித்தல் ஆகியவையே முழுவாழ்க்கை.


கப்புச்சின் சபை (Order of Friars Minor Capuchin (OFM Cap.)
 இவர்கள் சிறு சகோதரர்களின் சபையிலிருந்து 16-ம் நூற்றாண்டில் உருவான ஒரு பிரிவு. 

இவர்கள் மிகக் கடுமையான தவ வாழ்க்கை வாழ்வதோடு

நற்செய்தியையும் அறிவிக்கிறார்கள்.

இல்லற வாழ்வில் இருந்தபடியே பிரான்சிஸ்கன் சபையின் ஆன்மீகத்தைப் பின்பற்ற விரும்புபவர்களுக்காக பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை நிறுவப்பட்டது.

இயேசுவின் பரிவை மையமாகக் கொண்டு ஆன்மீக ரீதியாக ஏழைகளுக்கு உதவுவதற்காக வாழ்கின்ற புனிதர்களுக்கு புனித பிரான்சிஸ் அசிசியார் ஒரு உதாரணம்.


2.சீடர்கள் மூலம் பரிமாறுதல்.

இயேசு கடவுள். ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்தவர்.

அவர் நினைத்திருந்தால் ஒவ்வொருவர் மடியிலும் ஒரு அப்பத்தை வரவழைத்திருக்க முடியும்.

ஆனால் இந்த புதுமைக்கு தனது சீடர்களைப் பயன் படுத்திக் கொண்டார்.

முழு உலகையும் படைத்த சர்வ வல்லமையுள்ள .இயேசு அன்று உணவைப் பகிர்ந்ததைப் போல

  உலகெங்கிலும் தனது நற்செய்தியை அறிவிக்க தனது சீடர்களைப் பயன்படுத்துகிறார்.

ஆனால் சீடர்கள் நம்மை போன்று சாதாரண மனிதர்கள். 

 
சர்வ வல்லமை மிக்க கடவுள் சாதாரண மனிதர்கள் மூலம் உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கிறார்  என்றால் அதுவே மிகப்பெரிய புதுமை.

இயங்குகிறவர்கள் சாதாரண மக்கள், இயக்குபவர் 
சர்வவல்லவர்.

அன்று பன்னிருவர். இன்று திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறித்தவனும் ஒரு சீடனே .

நாம் திருமுழுக்கு பெற்றது நமது மீட்புக்காக மட்டுமல்ல,

நம்மை சுற்றியுள்ளவர்களும் மீட்புப் பெறுவதற்காக.

நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதுவே மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

நாம் மீட்படைய விரும்புகிறோம்.

நம்மைச் சுற்றி உள்ளவர்களும் மீட்பு அடைய வேண்டுமென்று நாம் விரும்ப வேண்டும்.

விரும்பினால் மட்டும் போதாது, அதற்காக உழைக்க வேண்டும்.

இதற்காகத்தான் நாம் நம்மை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்ற கட்டளையை இயேசு நமக்குத் தந்திருக்கிறார்.

நமது நேசம் சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் .

எப்படி இயேசு உலகில் மனிதனாகப் பிறப்பதற்கு அன்னை மரியாளைத் தேர்ந்தெடுத்தாரோ அதேபோல அவரது மீட்பு பணியை தொடர்ந்து செய்வதற்கு நன்மை தேர்ந்தெடுத்திருக்கிறார்.


நாம் ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும் ஒரே நோக்கோடு செயல்பட வேண்டும்.

கிறித்தவர் பலர், கிறித்தவம் ஒன்றே.

நாம் அனைவரும் இயேசுவின் ஒரே ஞான உடலின் உறுப்பினர்கள் .


இயேசு நமது தலை. தலையின் விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டுமே உறுப்புக்களின் வேலை.

நற்செய்தியே நமது ஆன்மீக உணவு. அன்று பன்னிரு சீடரும் அப்பத்தைப் பகிர்ந்தளித்தது போல நாம் ஆன்மீக உணவாகிய நற்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment