புதன்5.
"பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே."
(எபிரேயர் 12:5)
ஒரு விவசாயி தனது நிலத்தில் செய்யும் ஒவ்வொரு செயலும் அதைப் பண்படுத்துவதற்காகத் தான்.
முதலில் பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத கற்கள், முட்செடிகள், புற்கள் போன்றவற்றை அப்புரப் படுத்துவான்.
பிறகு கலப்பையால் உழுவான். உழ முடியாத பகுதியை மண் வெட்டியால் வெட்டுவான்.
அந்த நிலத்துக்கு உயிர் இருந்து பேச முடிந்தால்,
''நான் உனக்கு என்னடா செய்தேன், நீ என்னை இப்படிப் பாடு படுத்துகிறாய்.''
''நான் உன்னை பண்படுத்துகிறேன்"
"அப்படீன்னா?"
"உன்னை பயிர்த் தொழிலுக்கு ஏற்ற நிலமாக மாற்றுகிறேன்.''
"ஏன்?"
"நான் ஒரு விவசாயி. நீ என் நிலம். நீ இப்போது இருக்கிற நிலையில் விவசாயத்துக்குப் பயன்பட மாட்டாய். உன்னைப் பயன் தரும் நிலமாக மாற்றுவதற்குப் பெயர் தான் பண்படுத்துதல்."
"அதற்காக என்ளைக் கீறுகிறாய், வெட்டுகிறாய். எனக்கு வலிக்காதா?"
"உன் மீது நான் விதைக்கப் போகும் விதைகள் ஒன்றுக்கு நூறாய் பலன் தரும் போது உனது வலி இன்பமாய் மாறிவிடும்.''
விவசாயி நிலத்துக்குச் செய்வதைத்தான் கடவுள் நமக்குச் செய்கிறார்.
ஆண்டவர் நம்மைக் கண்டித்துத் திருத்துவது அவர் நம்மை எதற்காகப் படைத்திருக்கிறாரோ அதற்கு நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றுவதற்காகத் தான்.
நாம் விண்ணுலகில் நிலையான பேரின்ப வாழ்வு வாழ நம்மைப்
படைத்தவர்
அதற்காகத் தயாரிப்பதற்காக மண்ணுலகில் சிறிது காலம் வாழ விட்டிருக்கிறார்.
இறைவன் வாழும் விண்ணகம் பரிசுத்தமானது.
பாவ நிலையில் உள்ள எவரும் அதற்குள் நுழைய முடியாது..
கடவுள் மனிதனைப் பரிசுத்த நிலையில்தான் படைத்தார்.
நாம் தான் பாவம் செய்து பரிசுத்த நிலையை இழந்து விட்டோம்.
விண்ணகம் செல்லக்கூடிய அளவுக்கு நாம் பரிசுத்தர்களாக மாற வேண்டுமென்றால்
நாம் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
பரிகாரமாகத்தான் துன்பங்களை அனுமதிக்கிறார்.
அதாவது நம்மைக் கண்டித்து திருத்துகிறார்.
நம்மைத் திருத்துவதற்காகக் கண்டிக்கும் போது நாம் மனம் தளர்ந்து விடக் கூடாது.
கடவுள் தான் அன்பு செய்யும் மக்களைத்தான், அவர்கள் மீது தான் கொண்டுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாகத்தான் கண்டித்துத் திருத்துகிறார்.
நாம் அவரது கண்டிப்பை மனமுவந்து ஏற்றுக் கொண்டு மனம் திருந்த வேண்டும்.
நம்மைத் திருத்துவதற்காக வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வோம். திருந்துவோம்.
கடவுள் நம்மை தம் பிள்ளைகளாக நடத்துகிறார்.
"பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்."
(நீதிமொழிகள்.13:24)
பிள்ளைகள் திருந்தி வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.
மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே வகுப்பில் ஆசிரியர் பிரம்பை எடுக்கிறார்.
நாம் நித்திய பேரின்ப வாழ்வுக்குத் தகுதி பெற வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இவ்வுலகில் பிரம்பை எடுக்கிறார்.
பிரம்பை எடுக்கும் போது நாம் கடவுளின் கையைப் பிடிக்கக் கூடாது, காலைப் பிடிக்க வேண்டும்.
அதாவது சரணடைய வேண்டும்.
இப்போது நண்பர் ஒருவர் கேட்கிறார்,
"நாம் பாவிகள் , திருந்த கடவுள் துன்பத்தை அனுமதிக்கிறார்.
ஒரு பாவமும் அறியாத அன்னை மரியாளுக்கு இயேசு ஏன் வியாகுலங்களை அனுமதித்தார்?
இயேசு பரிசுத்தர், ஏன் பாடுகள் பட்டார்?
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய.
தனது தாயும் தனது வியாகுலங்களை மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கவே அவளுக்குத் துன்பங்களை அனுமதித்தார்.
தாய்த் திருச்சபை அன்னை மரியாளை Co-redemptrix என்று அழைக்கிறது.
இயேசு உற்பவித்த நாளிலிருந்தே மரியாளின் வியாகுல வாழ்வு ஆரம்பித்து விட்டது.
அவளது வாழ்வில் தன் மகனை நமது மீட்புக்காக வளர்த்ததோடு,
அவர் தோளில் சுமந்த சிலுவையை மனதில் சுமந்து,
சிலுவைப் பாதை முழுவதும் அவரோடு நடந்து, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பரம தந்தைக்கு ஒப்புக் கொடுத்தாள்.
கருவறையை விட்டு பிறந்தவுடன் அன்னையின் மடியில் அமர்ந்த இயேசு,
இறந்த பின்னும் அன்னையின் மடியில் அமர்ந்து விட்டுதான் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
மீட்பரின் தாய்க்கு இது சரி.
மற்ற புனிதர்கள் ஏன் துன்பப் பட்டார்கள்?
அன்னை சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தது மட்டுமல்லாமல் மாசு மரு இல்லாமல் வாழ்ந்தாள்.
மற்றவர்கள் அனைவரும் சென்மப் பாவத்தோடு உற்பவித்தவர்கள் .
புனிதர்கள் இருவகை.
ஆரம்பத்தில் பாவ வாழ்க்கை வாழ்ந்து விட்டு, மனம் திரும்பி பரிசுத்தர்களாக வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
உதாரணம் புனித அருஸ்தீனார், புனித சின்னப்பர்.
சிறு வயது முதல் பக்தியாய் பாவம் இல்லாமல் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
ஆரம்பம் முதலே பரிசுத்தர்களாக வாழ்ந்தாலும்,
பரிசுத்தத்தனத்தில் வளர வேண்டுமே.
கடவுள் அளவில்லாத பரிசுத்தர்.
அவர் பரிசுத்தத்தனத்தில் வளர முடியாது.
மனிதர்கள் அனைவரும் பரிசுத்தத்தனத்தில் மட்டுமல்ல, எல்லா நற்பண்புகளிலும் அளவுள்ளவர்கள் தான்.
ஆகவே புனிதமாக வாழ்பவர்களும் தங்கள் புனிதத்தில் வளரலாம், வளர வேண்டும்.
ஆகவே புனிதமாக வாழ்ந்தவர்கள் தங்கள் சிலுவைகளை புனிதத்தில் வளர ஒப்புக் கொடுத்தார்கள்.
புனிதத்தில் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் வளரலாம்.
ஆகவே எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் இன்னும் வரலாம்.
நமது வளர்ச்சிக்கு எல்லையே இல்லை. வாழ் நாள் முழுவதும் வளர்ந்து கொண்டேயிருக்கலாம்.
புனித ஐந்து காய பிரான்சிஸ் அசிசியார்,
புனித அல்போன்ஸா,
புனித கல்கத்தா தெரசா, புனித அந்தோனியார் போன்றோர் தாங்கள் அனுபவித்த துன்பங்கள் மூலம் புனிதர்களாக வளர்ந்தவர்கள் .
நமக்கு வரும் துன்பங்கள் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, புண்ணியத்தில் வளர நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்.
கடவுள் நம்மைத் துன்பங்களால் ஆசீர்வதித்துப் பேரின்ப வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
ஆசீரை ஏற்போம். இறை அருள் உதவியோடு புனிதத்தில் வாழ்வோம், வளர்வோம்.
விண்ணகத்தில் வளர முடியாது.
ஆகவே உலகில் கிடைக்கிற சந்தர்ப்பங்களை எல்லாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment